அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - மார்ச் 10 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - மார்ச் 10

அய்யாவின் கவலை... - அன்னை மணியம்மையார்

    எனது இளம் வயதிலிருந்து அதாவது எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகிப் பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சிறிது நாள் களுக்குள்ளாகவே அய்யா அவர்களிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க ஆளாக்கி அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனத்தில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன். அவரும் என்னை ஒரு நாளும் பெயரிட்டு அழைக்காமல் அவர் உயிர் பிரியும் வரையிலும் அம்மா! அம்மா! என்று ஆயிரம் அம்மாக்களாய்த் தினமும் அழைத்த வண்ணமே இருப்பார். அந்த மழலை மொழியைத்தான் இனி நான் கேட்க முடியாதே தவிர, என் உள்ளம் மட்டும் மானசீகமாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.

    அவரோடு நான் 30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அவரை விட்டுப் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11ஆம் நாள் வந்தடைந்த நான் அன்று முதல் இன்று வரை ஒரு நாளும் விட்டுப் பிரியாது மகிழ்ந்த நான் - ஓர் ஆண்டாக இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடுநடுவே பிரிய நேர்ந்தது. 1972 செப்டம்பர் 17-ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே என்றும் இல்லாத அளவுக்கு வெகுசிறப்புடன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி அவரது திரு உருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு நானும், அது முடிந்ததும் அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதய வலி முதன் முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பும் என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும் அன்று வந்திருந்த நமதியக்க அன்புத் தோழர்கள் பட்டபாட்டையும், பின்னர் உடல் நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும் அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து அய்யா அவர்களிடம் சென்று, நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத் தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன்.

    எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான் வேறில்லை என்று கூறி அவரை மகிழ்வித்தேன். அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனத்தில் அப்படியே இருக்கின்றது. இயற்கையை, வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.

    ஆனால் என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் - வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய் விடுவாயோ என்றுதான் கலங்கினேன் என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார். அப்போது நான் அவரை ஊக்கப்படுத்துவதற்காகச் சொன்னேன்: இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா, எல்லோருக்கும் மரணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப் பற்றி வண்டிவண்டியாய்ச் சொல்வீர். கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது; எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு என்று சற்றுப் பொய்க் கோபத்துடன்  கடினமாகச் சொன்னேன். உடனே தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும். மறக்க முடியாததும்கூட.

    சில சமயங்களிலே எனக்கும் அய்யா அவர்களுக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம்கூடச் சங்கடம் ஏற்படுவதுண்டு. அதுவும் அவர் நலத்தைப் பற்றிய அக்கறையினால் கடுமையாகக் கூட நடந்து கொள்வேன். அது தவிர அவர் மனது நோகும்படியாகவோ துயரம் தரும்படியாகவோ ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒன்று, இரண்டு சம்பவங்கள் நேர்ந்ததுண்டு. உடனே ஒரு சிறிது நேரத்தில் அய்யா அவர்களே முதலில் முந்திக் கொண்டு நான் கொண்டிருந்த வருத்தத்தைக் களைய முன் வந்து விடுவார். மற்றபடி பெரும்பாலும் அவர் குறிப்பறிந்து நடந்து கொண்டு அவர் தம் வேலைகளுக்கு எந்தவிதமான இடையூறும் தொந்தரவும் இன்றி கவனித்துத் தான் வந்தேன்.

                                                                                                                (விடுதலை 4.1.1974)


No comments:

Post a Comment