பதவியில் அமர்த்துவது எளிது; பகுத்தறிவாளர்களாக மாற்றுவது எளிதல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

பதவியில் அமர்த்துவது எளிது; பகுத்தறிவாளர்களாக மாற்றுவது எளிதல்ல!

பெரியாரியல் பகுத்தறிவுப் பயிற்சி பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்துரை

சென்னை, மார்ச் 7  பதவியில் அமர்த்துவது எளிது; பகுத்தறிவாளர்களாக மாற்றுவது எளிதல்ல என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியாரியல் பயிற்சி வகுப்பு -

பரிசளிப்பு விழா

கடந்த 4.2.2022 அன்று பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பகுத்தறிவுப் பயிற்சி பரிசளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளக்கூடிய அருமை யான, சிறப்பான இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்தக்கூடிய மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அருமைத் தோழர் மானமிகு தமிழ்ச்செல்வன் அவர்களே,

இணைப்புரை வழங்கிக்கொண்டும், பகுத்தறி வாளர் கழகத்தினுடைய செயல்பாடுகளைத் தீவிரப் படுத்தி, ஊக்கப்படுத்தியும் நடத்துகின்ற அருமைப் பொதுச்செயலாளர் ஆசிரியர் தோழர் மோகன் அவர்களே,

இந்நிகழ்வில், பங்கேற்று, சுருக்கமான அறிவுரை, பாராட்டுரை நிகழ்த்திய பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற பகுத் தறிவு கழக ஊடகப் பிரிவின் தலைவர் அருமை அழகிரிசாமி அவர்களே,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவரும், திரா விடப் பொழில் ஆசிரியர் குழுப் பொறுப்பாளர்களில் ஒருவருமான  தோழர் முனைவர் வா.நேரு அவர்களே,

பகுத்தறிவு கழக கலைத் துறை செயலாளர் தோழர் மாரி. கருணாநிதி அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கின்ற மற்ற ஏராளமான துணைத் தலைவர்களே, அருமைத் தோழர்களே, சிறப்பான வகையில் ஒரு குறுகிய அவகாசத்தில் சொன்னாலும், அருமையானதொரு ஏற்பாட்டை செய்திருக்கிறீர்கள்.

பெரியாரியலை, பகுத்தறிவு சிந்தனைகளை உள்வாங்கி அருமையாக உரையாற்றினார்கள்

இதற்கு என்ன அடையாளம் என்று சொன் னால், இங்கே பரிசு பெற்ற இருபால் நண்பர்கள் - அவர்கள் சிறப்பான வகையில் பெரியாரியலை, பகுத்தறிவு சிந்தனைகளை உள்வாங்கி அருமை யாக உரையாற்றினார்கள்.

அவர்களுடைய உரைகளையெல்லாம் கேட் கின்றபொழுதும், அவர்களுடைய சிந்தனை ஓட் டத்தை, வயது இடைவெளி இல்லாமல், 51 வயதான காவேரி அவர்களானாலும், மற்றவர்களானாலும் எல்லோருமே வயது இடைவெளி இல்லாமல், பகுத்தறிவாளர்கள் என்று சொன்னால், பெரியார் நம்மை வளமைப்படுத்துவார் என்பது மட்டுமல்ல, இளமைப்படுத்துவார் என்பதற்கு அடையாளமாக மிக அற்புதமான வகையில் இங்கே கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

அதிலும் குறிப்பாக, தோழர் புஷ்பலதா அவர்கள் அசாமில் சி.பி.எஸ்.. பள்ளிக்கூடத்தில் பணிபுரி கிறார்கள் என்று கேள்விப்படும்பொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடைகிறேன். நம்முடைய உறவு கள், கொள்கை உறவுகள் எப்படியெல்லாம் துணிச்சல் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்களுடைய  அறிவு, ஆற்றல் என்பது அப்புறம். இவ்வளவு தூரம் உள்ள ஒரு மாநிலத்தில், பிரச்சினைக்குரிய  ஒரு மாநிலத்தில்  பணியாற்றுவதற்கு அவர்கள் துணிந் திருக்கிறார்கள்; அங்கே சென்றும் இந்த உணர்வைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லுகிறபொழுது மிகுந்த மகிழ்ச்சி.

பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது; அடுத்த ஊருக்கு அனுப்பி வைக்கும்பொழுதுகூட, பத்திரமாக போய்ச் சேர்ந்துவிட்டாயா? என்று கவலைப்படுகின்ற ஒரு சமுதாயத்தில், துணிச்சலோடு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, அங்கே சென்று பணியாற்று கிறார். கடவுள் மறுப்பு அவரை ஈர்த்தது என்று சொன்னார்.

எங்கே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ,

அங்கே தன்னம்பிக்கை இடம்பெறாது

கடவுளுக்காக அல்ல - தன்னம்பிக்கைக்காக.

எங்கே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே தன்னம்பிக்கை இடம்பெறாது; விடைபெற்றுக்கொள் ளும்.

எங்கே தன்னம்பிக்கை இருக்கிறதோ, அங்கே கடவுள் நம்பிக்கைத் தேவையில்லை.

ஏனென்றால், எதுவும் என் கையில் இல்லை - எல்லாம் அவன் செயல் என்றால், பிறகு இவனுடைய பணி என்ன?

மனிதனுடைய சிந்தனை - மனிதனுடைய ஆற்றல் - சிந்திக்கச் சிந்திக்கத்தான் வெளிப்படுகின்றன.

கோவிட் -19 , கரோனா, ஒமைக்ரான் போன்றவை இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் மிரட்டிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், நாம் நம்முடைய பணிகளைத் தொடர முடிகிறது என்றால், எப்படி?

அறிவியல் காரணமாகத்தான். அது மனிதனுடைய சிந்தனை பெற்றெடுத்த மிகப்பெரிய பயன். அந்தப் பயனின் காரணத்தினால்தான், இன்றைக்கு நாம் இல்லத்தில் அமர்ந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்; அசாம் மற்றும் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் காணொலி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தும்,  கேட்டும் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள்களுக்குக்கூட முகக்கவசத்தை அணிவித்தார்கள்

இவ்வளவு பெரிய காணொலி - ஜூம் என்று சொல்லக்கூடிய அறிவியல் வளர்ச்சி என்பது முப்பத்து முக்கோடி தேவர்கள் கொடுத்ததா? 48 ஆயிரம் ரிஷிகளில் ஒருவருக்காவது தெரியுமா? எண்ணற்ற கடவுள்கள் என்று சொல்கிறார்களே, அந்தக் கடவுள் களில் ஒருவருக்காவது தெரியுமா? இன்னுங்கேட்டால், கரோனா காலத்தில், கடவுள்களுக்குக்கூட முகக் கவசத்தை அணிவித்தார்கள்.

ஆகவே, பகுத்தறிவினுடைய சிறப்பு என்னவென் றால், நாளைக்கு அது எங்கே போகும் என்று சொல்ல முடியாது. அண்மையில் ஒரு புத்தகத்தைப் படித்த பொழுது புதுப்புது செய்திகள் வருகின்றன.

புத்தகத்தின் தலைப்பே புதுமை

நண்பர் பேராசிரியர் அரசு  செல்லையா அவர்கள் கொடுத்த புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக் கிறேன். அந்த புத்தகத்தின் தலைப்பே எனக்கு புதுமையாக இருந்தது.

ஏனென்றால், எவ்வளவு படித்தாலும், வாழ்நாள் மாணவர்களாக நாம் இருக்கின்றோம். அதுவும் குறிப்பாக, பெரியாரியத்தைப் பொறுத்தவரையில்கூட, என்னுடைய 10 வயதில் இந்த இயக்கத்தில், இந்தக் கொள்கையில் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன் என்றாலும், இன்றைக்கு 88 வயதிலும்கூட,  இன்னமும் நான் கற்றதைவிட, கல்லாதது ஏராளமாக இருக்கிறது. பெற்றதைவிட பெறவேண்டியது ஏராளமாக இருக் கிறது. புரிந்ததைவிட, புரிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது.

விஞ்ஞானம் என்பது முடிந்த முடிவல்ல

அதுதான் வளர்ச்சி, அதுதான் பகுத்தறிவு. விஞ்ஞானம் என்பது முடிந்த முடிவல்ல. அது மேலும் மேலும் வளரக்கூடியது - தோண்டத் தோண்ட வரக்கூடியது. கற்றனைத் தூறும் அறிவு.

படித்தல் வேறு; கற்றல் வேறு -

வாசிப்பது வேறு - கற்பது வேறு

பொது அறிவு அதைவிட வேறு. பகுத்தறிவு அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. ஒத்தறிவு என்ற எம்பதி இருக்கிறதே எல்லாவற்றிற்கும் சிகரமானது.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழலில், 10 பேர் இங்கே பரிசு வாங்கியிருக்கிறீர்கள்; இருபால் நண்பர்கள், தோழர்கள் ஆகியோருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லாவண்யா, முன்ஷியா, காவேரி, ஆனந்த், ராம லட்சுமி, புஷ்பலதா, யாழினி, அருள்மொழி, இள மாறன் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த் துகள்.

பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள் - இந்தப் பரிசை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டு  - பகுத் துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று சொல்வதைப் போல, அவரவர்கள் தானே முன்வந்து, கொடுப்பதற்கு முன்வந்த தோழர்கள் இருக்கிறார்களே, அதுதான் ஒரு கூட்டுப் பகுத்தறிவுக் குடும்பத்தின் நல்ல பயன்.

ஒரே ஒருவர் செலவு செய்யக்கூடிய வாய்ப்பிருப் பதில்கூட, அதைப் பகிர்ந்து கொடுப்பது என்பதும், அந்த மகிழ்ச்சியை எல்லோரும் அனுபவிக்கவேண்டும் என்பதும் மிகச் சிறப்பான ஒன்று.

சமூகநீதியின் இன்னொரு பரிமாணம்

அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக்கூடிய சமூகநீதியின் இன்னொரு பரிமாணம் அது.

அருமையான அளவிற்கு பரிசுகள் கொடுத்த தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்முடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

பரிசு பெற்ற 10 பேரைபற்றி,  feed back என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் - அப்படி உள்வாங்கியவர்களுடைய கருத்து என்ன? அதை அவர்கள் எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதைப்பற்றி, பரிசாளர்கள் மிக அழகாக இங்கே சொன்னார்கள்.

ஒவ்வொருவருடைய வகுப்பும் மிகச் சிறப்பாக இருந்தது என்று அவர்கள் எல்லாம் சொன்னார்கள்.

திட்டமிடுதல் என்பது எவ்வளவு அழகாக இருந்தது. சின்னச் சின்ன செய்திகளைக்கூட நாங்கள் தவிர்க்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் அவர்கள் விடை கொடுத்தார்கள்; எல்லாவற்றிற்கும் அவர்கள் ஆயத்தமாக இருந்தார்கள் என்றனர்.

இவ்வளவும் ஒரு குறுகிய கால ஏற்பாட்டில்.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது

வேறு யாராலும் முடியாதது - நம்மால் மட்டுமே முடியும் என்று சொல்வது இருக்கிறதே, அது வெறும் சொற்கோவை அல்ல. அனுபவத்தினுடைய பிழிவு அது.

நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழலில், பெரியாரியல் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்த பகுத்தறிவாளர் கழகத்தினுடைய அத்தனை பொறுப்பாளர்களுக்கும் - தலைவர் முதல், பொதுச்செயலாளர் முதல், துணைத் தலைவர்கள் முதல் - ஏற்பாடு செய்த தோழர்கள் பேராசிரியர் நம்.சீனிவாசன் உள்பட - இயக்க வகுப்பெடுத்த அத்தனைப் பெருமக்களுக்கும், நம்முடைய இயக்கப் பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், எல்லையற்ற மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏனென்றால், இதுதான் ஆக்கப்பூர்வமான பணி.

இந்த ஆக்கப்பூர்வமான பணியைச் சிறப்பாக செய்து, புதிய நாற்றுகளை உண்டாக்கியிருக் கிறீர்கள்.

'திராவிட நாற்றுகள்'

'திராவிட நாற்றுகள்' என்று முன்பு ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கழகப் பொறுப்பா ளர்கள் வகுப்பெடுத்தார்கள்.

இப்பொழுதுகூட அதைப் பார்க்கின்றபொழுது, பல பகுதிகளில் இருப்பவர்கள் எல்லாம் இந்தக் காணொலிமூலமாக இணைய முடிகிறது - ஒரு மணிநேரம் என்ற அளவில் என்றால், மீண்டும் மீண்டும் இதை நடத்தவேண்டும்.

பதவியில் அமர்த்துவது எளிது; பகுத்தறிவாளர்களாக  மாற்றுவது எளிதல்ல!

இதைவிட ஆக்கப்பூர்வமான பெரியாரியலை, பகுத்தறிவு சிந்தனைகளைக் கொண்டு வந்து, மனிதர் களாக அவர்களை ஆக்குவது.

இதனுடயை நோக்கம் என்ன?

இது அடிப்படையிலே மனிதநேயமுள்ள, மானிடப் பற்றுள்ள ஓர் இயக்கம்.

மானுடத்தை மேம்படுத்துவது - மானுட சிந்தனை களை உயர்த்துவது.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் அறிவாசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள்.

அந்த மானமும், அறிவும் உள்ள மனிதர்களை உருவாக்குவதுதான் சிறப்பானது.

பதவிகளில் கொண்டு போய் அமர்த்துவது எளிது; பகுத்தறிவாளர்களாக அவர்களை ஆக்குவது எவ்வளவு எளிதல்ல.

பதவிகளில் அவர்கள் போகும்பொழுது,  தனிப் பட்ட லாபத்தை அடைகிறோம் என்று, வெளிப் படையாகக் கண்ணுக்குத் தெரிந்த ஒன்று என்று நினைக்கிறார்கள்.

ஆனால், பகுத்தறிவாளர்களாக அவர்கள் மாறு கின்ற நேரத்தில், அவர்கள் பெறுகின்ற லாபமோ, வருமானத்தைவிட, தன்மானத்தை அவர்கள் பெறு கிறார்கள். தன்மானத்தைவிட சிறப்பு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அதைவிட இன்னும் தாண்டி, அடுத்த கட்டத்திற்கு அவர்கள் மேலும் பக்குவப்படுத்தப்பட்டால், இன மானத்தைப் பெறுகிறார்கள். இனம் என்று சொல்லு கிறபொழுது, அது மானுடம் விரிந்த எல்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment