ரஷ்யாவுக்கும் அண்டை நாடான உக்ரைனுக்கும் நடக்கும் போர் கடந்த ஒரு வாரமாக உச்ச நிலைக்கு சென்றுள்ளது.
இந்திய ஒன்றியத்தில் இருந்து மருத்துவக் கல்வியும், பொறியியல் கல்வியும், பயிலும் நோக்கில் உக்ரைனுக்கு சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் சென்றுள்ளனர். தற்போது நடக்கும் போரில் கருநாடக மாநிலம் செலகேரியைச் சேர்ந்த நவின் என்ற மாணவரும் பஞ்சாப் மாநிலம் புர்னாலா நகரைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவரும் குண்டு வீச்சுக்கு பலியாகியுள்ளனர். மற்ற மாணவர்கள் பதுங்குகுழியிலும், பாலங்களுக்கு அடியிலும், மெட்ரோ குகைப்பாதைகளிலும் உணவின்றி தஞ்சமடைந்து உயிரைக் காப்பாற்ற துடிக்கின்றனர். இது உலகறிந்த துயரத் தகவலாகும்.
இந்த மாணவர்கள் 6500 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உக்ரைனுக்கு சென்று உயிரிழக்க காரணம் என்ன? இந்திய ஒன்றியத்தில் மருத்துவம் பயில ரூபாய் ஒரு கோடி வரை செலவாகின்றது. போதாததற்கு “நீட்” என்னும் கொடிய தடை மாண வர்களின் முன் நிற்கிறது. சகோதரி அனிதா போன்ற பலரை காவு வாங்கியுள்ளது.
உக்ரைனில் மருத்துவம் பயில ரூ.20 இலட்சம் மட்டுமே செலவாகின்றது. இதனைப் பயன்படுத்தி வெளிநாட்டு மண்ணில் உயர்கல்விப் பயில 20 ஆயிரம் மாணவர்கள் உக்ரையினுக்கு சென்றுள்ளனர்.
உயர் ஜாதியினருக்கும் பணம் படைத்தவர்களுக்கும் பாதுகாப்பாய் செயல்படும் ஒன்றிய அரசின் மோசடித்தனத்தாலும் ‘நீட்’ என்னும் மோசடியாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அயல்நாட்டிற்கு சென்று, அங்கு நடக்கும் போரிலும், உள்நாட்டு சிக்கலிலும், ஆள்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இதனை உணர்ந்து ஒன்றிய அரசு மாணவர்களை பாது காக்க துரித நடவடிக்கை மேற் கொள்வதோடு நீட்டை உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்பதே மாணவ நெஞ்சங்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment