சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை வரும் 9ஆம் தேதி தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை வரும் 9ஆம் தேதி தாக்கல்

சென்னை, ஏப்.7-  சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மாமன்றத்தில் வரும் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அப்போதைய ஆணையர்களால் மறைமுகமாகவே வெளியிடப்பட்டு வந்தது.

இதனால் பெரிய அளவில் புதிய திட்டங்கள் இல்லாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி  வெற்றி பெற்றனர். இதையடுத்து சென்னை யின் 49-ஆவது மேயராக ஆர்.பிரியா பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து நிலைக்குழு, மண்டலக்குழு, நியமனக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 2022-2023 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.

6 ஆண்டுகளுக்கு பின்னர்...

இதற்காக சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கைடில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு தான் கடைசியாக சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அன்றைய வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சந்தானம், அன்றைய மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் சனிக்கிழமை (9ஆம் தேதி), மாமன்ற கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை அறிக்கையை மேயர் ஆர்.பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் ஜெயாதாஸ் (வார்டு எண்- 41) தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அன்று தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தை தொடர்ந்து 2022-2023 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்படும்.

6 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் சென்னை மாநகர மக்கள் மத்தியில் புதிய நலத்திட்டங்கள் இருக்கும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் மிகுதியாக உள்ளது.

மேலும் சொத்து மற்றும் இதர வரிகள் உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கைடில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், மேம்பாலங்கள், புதிய திட்டங்கள் இடம்பெறும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment