ஆளுநர் சென்றபொழுது திண்டிவனத்தில் அ.தி.மு.க.வினர் வழிமறித்து வன்முறையில் ஈடுபட்டது மறந்து போயிற்றா?
சட்டம்-ஒழுங்கு தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக செயல்படுகிறது
கரூர், ஏப்.20- ஆளுநருக்குக் கருப்புக்கொடி: மயிலாடு துறையில் நடந்தது என்ன? ஆளுநர் சென்றபொழுது திண்டிவனத்தில் அ.தி.மு.க.வினர் வழிமறித்து வன் முறையில் ஈடுபட்டது மறந்து போயிற்றா? சட்டம் ஒழுங்கு தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக செயல்படுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பிரச்சார பயணக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூருக்குச் சென்ற தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இன்று (20.4.2022) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவ்விவரம் வருமாறு:
மாணவர்களின் உயிரை பலி வாங்கும்
நீட் தேர்வு என்ற பலிபீடம்!
நீட் தேர்வு தமிழ்நாட்டின்மீது திணிப்பு, அதன் மூலமாக ஏராளமான நம்முடைய மாணவர்கள்- மருத்துவக் கனவோடு இருந்த செல்வங்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமாக இருந்த நீட் தேர்வு பலி பீடமாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டப்பூர்வமாக நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. அதே போல, அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்குப் பதிலாக, அனைத்துப் பிள்ளைகளும் படிப்பதற்குத் தடுப்புகளை ஏற்படுத்தி, கல்வி நீரோடையில் உயர்ஜாதி முதலைகளை உள்ளேவிட்டு, அதன்மூலமாக ஒரு குலதர்மக் கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கூடிய அளவிற்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயராலே இப்பொழுது ஒன்றிய மோடி அரசு மாநிலங்கள்மீது திணித்துக் கொண்டிருப்பதை எதிர்த்தும், கண்டித்தும் இந்தப் பரப்புரையைச் செய்து வருகிறோம்.
தமிழ்நாடு அதற்கென்று இருக்கக்கூடிய கல்வித் திட்டத்தைத் தொடரவேண்டிய வாய்ப்பு அரசமைப்புச் சட்டப்படி இருந்தும், இத்தகைய மாநில உரிமைகளை பறிப்பு என்பது தவறானது என்பதால்-
உறவுக்குக் கை கொடுக்கின்ற நேரத்தில், உரிமைக் குக் குரல் கொடுத்தாகவேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ப தற்காகத்தான், கடந்த 3 ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கிய எங்களுடைய பிரச்சாரப் பெரும்பயண நிகழ்ச்சியில், ஏறத்தாழ 31 ஆவது கூட்டம் நடை பெற்று, இன்னும் 8 அல்லது 9 நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கின்றன. இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உரையாற்றி இருக்கின்றனர்.
சென்னையில் 25 ஆம் தேதி நிறைவு விழா
வருகின்ற 25 ஆம் தேதி மாலை சென்னையில், நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்பு மிகு முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார்.
நாங்கள் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, வேறு எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல், தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்திற்கு, குறிப்பாக நம்முடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், சமூகநீதிக்கும் முக்கியமானது என்று உணர்ந்து, நல்ல அளவிற்குப் பொதுமக்கள் எங்க ளுக்கு வரவேற்பு கொடுத்து, எங்களுடைய களைப்பு, சோர்வையெல்லாம் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில்தான், நேற்றிரவு முதற்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது; அடுத்த கூட்டம் கரூரில் நடைபெற்றது.
இன்றைக்குப் பரமத்தி வேலூர், இரண்டாவது சேலத்தில் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இங்கே செய்தியாளர்களாகிய உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.
புதிய கல்விக் கொள்கையல்ல -
ஆச்சாரியாரின் பழைய குலக்கல்வியே!
செய்தியாளர்: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது?
தமிழர் தலைவர்: நீங்கள் சொன்னதில் ஒரு திருத்தம். அது புதிய கல்விக் கொள்கையே அல்ல; பழைய கல்விக் கொள்கைதான். ஆச்சாரியார் காலத்தில் இருந்த குலக்கல்வித் திட்டமே!
அதில் தாய்மொழியைப்பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை. ஒரு பெயரளவிற்குச் சொல்லிவிட்டு, மூன்றாவது மொழியை கட்டாயமாக்கவேண்டும் என்று சொல்லி, மூன்றாவது மொழியைக் கொண்டுவருகிறார்கள்.
சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்; அதன்மூலமாக சமஸ்கிருதத்தைப் பரப்பவேண்டும்; ஹிந்தி ஆசிரியர்களுக்கு நிறைய வாய்ப்புகள் என்ற அளவிற்குத்தான் அதில் இருக்கிறது.
அதில் சமூகநீதி என்ற வார்த்தையை தேடிப் பார்த்தால், அத்திப்பூத்ததுபோல, எங்கோ ஓரிடத்தில்தான் இருக்கிறது. எந்த இடத்திலும் இட ஒதுக்கீடு, சமூகநீதி என்பன, அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற கருத்துகள் அதில் சொல்லப்படவேயில்லை.
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கின்றவர்கள் பெண்கள். அந்தப் பெண்களுக்கான கல்வியை வற்புறுத்தவேண்டும் என்றுதான் இன்றைக்கு உலகம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி நூறாண்டுகாலமாக அதில் மிகப்பெரிய சாதனைகளை செய்ததினால்தான், இன்றைக்கு உலகம் முழுவதும் திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது.
மூன்றாவது மொழி ஹிந்தி மட்டும்தானாம்!
எனவே, மூன்றாவது மொழி என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள். மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, ஹிந்தி மட்டும்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஓட்டலுக்கு சாப்பிடப் போனால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு, இட்டலியோ, சப்பாத்தியோ, தோசையையோ சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு, ஆனால், நீங்கள் சப்பாத்தியைத்தான் சாப்பிட்டாகவேண்டும் என்று சொல்வதுபோன்று இருக்கிறது.
மூன்றாவது மொழியாக ஹிந்தியைத்தான் படித்தாகவேண்டும் என்று சொல்வது மறைமுகமான திணிப்புகள் ஆகும்.
அவர்களுடைய தந்திரம் என்னவென்றால், பள்ளிக்கூடங்களை மூடுவதற்குப் பதிலாக, படிக்காமல் தடுப்பதுதான் இந்தப் புதிய தேசியக் கல்வி கொள்கை.
ழி.ணி.றி. என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் - நேஷனல் எஜூகேஷனல் பாலிசி என்பதுதான். திருச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடமும் சொன்னேன்.
மூன்றாவது வகுப்பில் பொதுத் தேர்வு; அய்ந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு: எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு; 10, 11 ஆம் வகுப்புகளில் வழக்கமான பொதுத் தேர்வு; 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு. இவ்வளவு தேர்வை எழுதிவிட்டு வந்தாலும், அந்தத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம்.
நாங்கள் நடத்துகின்ற நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைத்தான் - அதாவது பயிற்சி வகுப்பில் படித்து வந்து, தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்களைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வோம் என்று சொல்வது, மறைமுகமாக நம்முடைய மாணவர்களின் கல்விக் கண்களைக் குத்துவதாகும்.
ஹிந்தியை மறைமுகமாகத் திணிக்கிறார்கள். வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள். இணைப்பு மொழி ஹிந்திதான் - ஆங்கிலம் படிக்கவேண்டாம் என்கிறார்.
ஆங்கிலம் படிக்கவில்லை என்றால், உலகம் முழுவதும் செல்வது மிகவும் கடினம்.
இங்கே இருக்கின்ற செய்தியாளர்களாகிய நீங்கள், உலகம் முழுவதும் செய்திகளை அனுப்புகிறீர்கள் - இந்தக் கருவிகளையெல்லாம் முனிவர்கள் கண்டுபிடித்ததா?
முழுக்க முழுக்க ஆங்கிலம் படித்தவர்கள் கண்டுபிடித்ததுதான்.
தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை
உதாரணமாக, தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தியை எதிர்க்கவில்லை. கருநாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார், பெங்களூருவில் பொருளாதாரம் வளர்ந்து வேலை வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், ஆங்கிலம் படித்ததுதான். ஆங்கிலத்தை எடுத்துவிட்டு, ஹிந்தியைக் கொண்டு வந்தால், நிலைமை தலைகீழாகிவிடும் என்று சொன்னார்.
இன்றைக்கு மோடி ஆட்சியில், வேதத்தையோ, பகவத் கீதையையோ கணினியின்மூலமாகத்தான் பரப்புகிறார்கள். கணினி என்பது முனிவரோ, ரிஷியோ கண்டுபிடித்தது அல்ல- வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தது - ஆங்கிலம் படித்தவர்கள் கண்டுபிடித்தது.
ஆகவே, ஆங்கிலத்தை எடுத்துவிட்டால், மின்சாரம் இல்லாமல் நாம் ஒரு மணிநேரத்திற்குமேல் வாழ முடியாதோ - அதுபோன்றுதான் ஆங்கிலமும்.
தாய்மொழி என்பது மிகவும் முக்கியம். அந்தத் தமிழை செம்மொழியாக்கினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தமிழுக்கு அடுத்து ஆங்கிலம்தான்.
அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், 'திராவிட மாடல்' ஆட்சி செய்த முப்பெரும் சாதனைகளில் ஒன்று இருமொழிக் கொள்கை.
ஆங்கிலம் உலக அறிவுக்கு
ஆங்கிலம் உலகத்தினுடைய சாளரமாகும்.
ஆகவேதான், ஆங்கிலத்தையும் ஒழித்துவிட்டு, தமிழையும் வளர்க்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுவோம்.
ஹிந்தி என்பதுகூட அவர்களுக்கு மாற்று வழி போன்றது - பாலம் கட்டும் வரையில் - சமஸ்கிருதம்தான் அவர்களுக்கு முக்கியம்.
ஆகவே, ஒன்றிய அரசுக் கொண்டு வந்திருக்கக்கூடிய நவீனக் குலக்கவித் திட்டம் மிகவும் ஆபத்தானதாகும்.
ஜனநாயகப்படி, அரசமைப்புச் சட்டப்படி மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு
செய்தியாளர்: தமிழ்நாடு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்ளாரே, ஆளுநர்?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு அரசு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்படி வந்தது? ஜனநாயகப்படி, அரசமைப்புச் சட்டப்படி மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர்.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம், அதனுடைய உறுப்பினர்கள்.
இரண்டாம் முறையாக, நீட் தேர்வு விலக்கு மசோதா, இன்னும் 9 மசோதாக்கள் - ஏற்கெனவே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதக்கள் நிலுவையில் உள்ளன - ஆக மொத்தம் 11 மசோதாக்கள் ஆளுநர் அவர்கள் நாற்காலியில் போட்டு அதன்மேல் அழுத்தமாக அமர்ந்திருக்கின்றார் என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை அவமதிக்கின்றார்; சட்டமன்றத்தை அவமதிக்கின்றார்; மக்களுடைய தீர்ப்பை மதிப்பதற்கு அவர் தயாராக இல்லை அவர் என்பதுதான் அதனுடைய அடிப்படையே தவிர, வேறொன்றுமில்லை.
ஆகவே, அரசமைப்புச் சட்டப்படி முதலமைச்சர் அவர்கள், ஆளுநரை முறையாக நேரில் சந்தித்து, ஒருமுறை அல்ல இருமுறை வலியுறுத்தினார்கள்.
அதேபோன்று, டில்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள்.
கடந்த 16 ஆம் தேதியன்றுகூட, இரண்டு அமைச்சர்களை அனுப்பி, ஆளுநரை நேரில் சென்று சந்தித்து, வலியுறுத்தச் சொன்னார்.
அதற்குப் பிறகுகூட காலவரையறையை நிர்ணயிக்க முடியாது என்று சொல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.
ஏªன்னறால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு வந்திருக்கின்றார் ஆளுநர் அவர்கள்.
அந்த அரசமைப்புச் சட்டப் பிரமாணப்படி, ஒவ்வொரு பகுதியையும் நான் காப்பேன்; அதன்படி நடந்துகொள்வேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படி அவர் நடக்கவேண்டும் என்று சொன்னால், 200 ஆவது விதியின்படி, அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் அவருடைய வேலையே தவிர, அதைத் திருப்பியும் அனுப்புவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடையாது - அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலும், அவரே வைத்துக்கொண்டிருக்க முடியாது.
ஆண்டுக்கணக்காக அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதா?
பழைய ஆளுநர், எழுவர் விடுதலை சம்பந்தமாக கிடப்பில் போட்டிருந்த மசோதா குறித்து, உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகுதான், அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். அதையும் இன்றைய ஆளுநருக்கு நினைவுபடுத்துகிறோம்.
எதிர்க்கட்சிகளுடைய அபாண்டமான பழி
செய்தியாளர்: ஆளுநர்மீது தாக்குதல் நடந்ததுபற்றி?
தமிழர் தலைவர்: ஆளுநர்மீது தாக்குதல் நடந்தது என்பது எதிர்க்கட்சிகளுடைய அபாண்டமான பழியாகும்.
மக்கள் ஒன்றாகத் திரண்டு, அவர்களுடைய எதிர்ப்பினைக் காட்டுகிறார்கள். அதற்கு உரிமை உண்டு - ஜனநாயகத்தில் கருப்புக் கொடி காட்ட.
அந்தப் போராட்டம் என்பது ஒரு கட்சி நடத்தக்கூடிய போராட்டம் அல்ல. பல கட்சியினர் நடத்திய போராட்டம்.
ஆளுநருடைய கான்வாய் சென்றபிறகு, போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கடைசியாக கொடியைத் தூக்கிப் போட்டிருக்கிறார். அவரைக் கைது செய்திருக்கிறார்கள்; அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள், சட்டப்படி.
இந்த நடவடிக்கையைப்பற்றி அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் சொல்வது என்பது கேலிக்கூத்தானதாகும்.
இதை வைத்து, இந்த ஆட்சியின்மீது பழி சுமத்தலாமா? என்று நினைக்கிறார்கள்.
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியலாமா?
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லை வீசுகிறார்கள்; குறிப்பாக அ.தி.மு.க.வினர்.
சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபொழுது, திண்டிவனத்திற்குப் பக்கத்தில் அ.தி.மு.க.வினர் எப்படி நடந்துகொண்டார்கள் என்ற வரலாறு என்பது மறைக்கப்பட முடியாது.
அதேபோன்று, தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் அவர்கள் தங்கியிருந்த தாஜ் கொரமண்டல் ஓட்டலை எப்படி தாக்கினார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே!
ஆகவே, அ.தி.மு.க.வினர் கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது!
ஆளுநர் கார் சென்ற பிறகு, ஒருவர் ஆத்திரப்பட்டு, கொடியைத் தூக்கிப் போட்டிருக்கிறாரே தவிர, வேறொன்றுமில்லை. பொதுமக்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
செய்தியாளர்கள் இத்தனைப் பேர் இங்கே இருக்கிறீர்கள்; யாரோ ஒருவர் கோபத்தோடு என்னிடம் கேள்வி கேட்கிறார் என்றால், எல்லா செய்தியாளர்களும் என்னிடம் கோபத்தோடு கேள்வி கேட்கிறார்கள்; அதனால் எனக்கு ஆபத்து என்று சொன்னால், அது ஒரு டிராமவே தவிர, உண்மை கிடையாது.
இவர்கள் செய்யும் நாடகம் எதற்கும் பயன்படாது. தொடக்கத்திலிருந்தே தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை, சரியில்லை என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி போன்று, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு வேறு எந்த ஆட்சியும் கிடையாது.
காவல் நிலையத்திற்கே சென்று ஆய்வு செய்கின்ற முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழக முதலமைச்சர்தான்.
எனவே, காவல்துறையின் அடித்தளத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் செல்லக்கூடியவர்கள்.
ஆகவே, அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டு கற்பனையானது; ஆதாரமில்லாதது.
தேவையான நடவடிக்கைகளை, தேவையானபொழுது, தன்னுடைய சொந்தக் கட்சிக்காரர்கள் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சர்தான் ஆட்சியில் இருக்கின்றார்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

No comments:
Post a Comment