'நீட்' விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையென்றால் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

'நீட்' விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையென்றால்

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்கள்தான் இறுதி அதிகாரம் படைத்தவர்கள்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே எங்களுடைய சுற்றுப்பயணம்!

திருப்பத்தூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

திருப்பத்தூர், ஏப்.23 'நீட்' விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையென்றால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்கள்தான் இறுதி அதிகாரம் படைத்தவர்கள்; மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே எங்களுடைய சுற்றுப்பயணம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். 

'நீட்' எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பிரச்சார பயணக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பத்தூருக்குச் சென்ற (22.4.2022) தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவ்விவரம் வருமாறு:

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே...

நீட் தேர்வு ஒழிப்பு,  தேசிய கல்விக் கொள்கை ஒழிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றை எதிர்த்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக 21 நாள் சுற்றுப்பயணம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, கடந்த 3 ஆம் தேதி கன்னியா குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கிய எங்களுடைய சுற்றுப்பயணம் இன்று திருப்பத்தூர், வேலூரில் நடைபெறுகிறது.

திருத்தணி, அரக்கோணத்தில் நாளை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சென்னைக்குச் செல்கிறோம்.

25 ஆம் தேதி சுற்றுப்பயண நிறைவு - சிறப்புப் பொதுக்கூட்டத்தில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த நிறைவு விழாவில் பங்கேற்று நிறைவுரையாற்றவிருக்கிறார்.

எங்களுடைய சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசியல் பயணம் அல்ல; முழுக்க முழுக்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இதன் நோக்கம். நம்முடைய பிள்ளைகளின் கல்வி - எதிர்காலம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்கிடவே இந்தப் பயணம்.

தமிழ்நாடு அரசின் கரத்தைப் பலப்படுத்தவேண்டும்

நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கைகள் கண்ணிவெடிகள் போன்று புதைக்கப்பட்டு இருக்கின்றன. அவை அகற்றப்படவேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முயற்சியை, மக்கள் புரிந்துகொண்டு, தமிழ்நாடு அரசின் கரத்தைப் பலப்படுத்தவேண்டும்.

இதற்குத் தடையாக, தடங்கல் செய்துகொண்டு முடக்கவேண்டும் என்று நினைக்கின்ற பிற்போக்குச் சக்திகள் - அது பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, மற்றவையாக இருந்தாலும் சரி - அவற்றை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

இந்தப் பயணத்தில், கட்சி வேறுபாடின்றி எங்களுக்கு நல்ல அளவிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஏனென்றால், இது பெற்றோர், மாணவர்கள் பிரச்சினை - அதற்காகத்தான் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

நீட் - க்யூட் - இரண்டையும் மியூட் செய்யவேண்டும்!

செய்தியாளர்: நீட் தேர்வை எதிர்த்து நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள்; ஆனால், ஒன்றிய அரசு க்யூட் தேர்வை கொண்டு வருகிறதே?

 தமிழர் தலைவர்: நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் சொல்லும்பொழுது, இப்பொழுது ஒன்றிய அரசு க்யூட் தேர்வு என்று சொல்கிறது - அதை மியூட் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

அரசமைப்புச் சட்டப்படி ஆளுநருக்கு உரிமையில்லை!

செய்தியாளர்: தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக நீட் தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறதே, ஆளுநர் அதை கிடப்பில் போட்டிருக்கிறாரே?

 தமிழர் தலைவர்: அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆம் விதியின்படி அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது. கட்டாயம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும். ஆனால், அவர் காலதாமதம் செய்கிறார். எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும், அவர் அந்த மசோதாவை வைத்திருக்க முடியாது.

பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை சம்பந்தப்பட்ட தீர்மானத்தை, வேண்டுமென்றே  அன்றைய ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த நேரத்தில், உச்சநீதிமன்றம் ஒரு குட்டு குட்டியதற்குப் பிறகுதான், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்.

அந்த உதாரணம் இருந்தும்கூட, இன்றைய தமிழ்நாடு ஆளுநர், நீட் விலக்கு மசோதாவை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கிடப்பில் போட்டிருப்பேன் என்று சொல்வதற்கு, அவருக்கு அரசமைப்புச் சட்டப்படி உரிமையும் இல்லை - அது நியாயமும் இல்லை.

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!

செய்தியாளர்: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்றால், அதை எதிர்த்து நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?

 தமிழர் தலைவர்: கண்டிப்பாக மக்கள் கிளர்ச்சி வரும். ஜல்லிக்கட்டுப் போன்ற கிளர்ச்சிகள் தானே வெடிக்கும். ஊர் தவறாமல் வெடிக்கும்.

மக்கள்தான் இறுதி அதிகாரம் படைத்தவர்கள்.

அந்த மக்களுக்கு விளக்கம் சொல்லி, அவர்களை ஆயத்தப்படுத்துவதுதான் எங்களுடைய சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

No comments:

Post a Comment