இதுதான் மனிதநேயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 20, 2022

இதுதான் மனிதநேயம்

 இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி பாஜக ஆளும் மாநிலங்கள் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அதுவும் நோன்பு காலத்தில் - ராமன் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என்ற பெயரில் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் முன்பாக கலவரம் செய்வது, கொடிய ஆயுதங்களை கைகளில் ஏந்தி வெட்டுவோம் குத்துவோம், தலையை பாகிஸ்தானில் வீசுவோம் போன்ற காட்டுக்கூச்சல்கள் - அதிகமாகி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போபாலில் இஸ்லாமியர் ஒருவர் சாலையில் செல்வோருக்காக வீட்டின் முன்பு நவீன வசதிகளுடன் கூடிய குளிர் நீர்பந்தலை அமைத்திருந்தார். அங்கு தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்து செல்வதற்காக பந்தலும் அமைத்திருந்தார். இந்த நிலையில் ராம நவமி அன்று அந்தப் பந்தலையும், அங்கு வைத்திருந்த குளிர்நீர் கருவியையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இப்படி கொடிய வெறுப்பைக் கக்கும்,  மனதை வருத்தும் செய்திகள் வந்து கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மும்பையிலிருந்து வந்த ஒரு செய்தி  மனிதநேயமிக்க, நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டாக உள்ளது. 

இது குறித்து பிரியா சிங் என்ற பெண் பகிர்ந்த பதிவில், “நான் விமான நிலையத்திலிருந்து உபேர் காரினை வாடகைக்கு  எடுத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு ஓட்டுநரின் மொபைலில் 'அசான்' ஒலிக்கத் தொடங்கியது.  நான் அவரிடம் ‘நமாஸ் பண்ண வேண்டுமா?’ என்று கேட்டேன், அதற்கு அவர் “என்னால் முடியுமா?" என்று கேட்டார். நான் உடனடியாக முன் இருக்கையில் அமர்ந்து பின் பகுதியில் அவரை நமாஸ் செய்யுமாறு கூறினேன். அருகில் மசூதிகள் எதுவும் இல்லை. மற்றும் வெளியே கடுமையான வெயில் - ஆகையால் நான் அவ்வாறு கூறினேன். அவரும்  காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார். நான் முன் இருக்கைக்குச் செல்ல அவர் பின் இருக்கையில் தொழுகை நடத்தினார்.

இப்படிப்பட்ட இந்தியாவைப் பற்றிதான் என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் நல்லிணக்கத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினோம், மனிதகுலத்தின் அடிப்படைகளுக்கு ஊக்கம் தருவதற்காக இதை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பதிவிட எனது விருப்பத்தை அவரிடம் கூறினேன் - அவரும் அனுமதி கொடுத்தார்” என தெரிவித்திருக்கிறார்.

கரோனா காலத்தில் உயிர்கள் பலியான நேரத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய  எந்த இந்துத்துவவாதிகளும் முன்வரவில்லை. அதே நேரத்தில் இறந்தவர் இந்து என்றும் பார்க்காமல், பல இடங்களிலும் இஸ்லாமிய தோழர்கள் முன்னின்று உடலை அடக்கம் செய்தது குறித்து இதற்கு முன்புகூட ‘விடுதலை'யில் எழுதியதுண்டு.

மனிதனை மனிதனாகப் பார்க்காமல், மதக் கண் கொண்டு பார்ப்பது மட்ட ரகமானதாகும். மதம் யானைக்குப் பிடித்தாலும், மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து!

இது போன்ற கருத்துகளை எடுத்துச் சொல்ல இந்துத்துவவாதிகளில் யார் இருக்கிறார்கள்?

மதம் மாச்சரியத்தை விதைக்கும், மனித நேயம் மனித உறவை வளர்க்கும்! வாழ்நாள் எல்லாம் தந்தை பெரியார் பாடுபட்டது இதற்காகத்தானே - சிந்திப்பீர்!

No comments:

Post a Comment