மும்பை, ஏப்.3 கரோனா கட்டுப்பாடுகளை முழு மையாக நீக்குவதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறினார். மராட்டியத்தில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் சட்டம் அமலில் இருந்ததாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவை ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் பயணங்களுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக் கவசம் அணிதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மக்கள் கவனக்குறைவாக செயல்பட வேண்டாமென்றும் முகக் கவசம் அணிவதை விருப்பத்தின் பேரில் தொடர வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
புதுச்சேரியில் வீட்டு உபயோக
மின் கட்டணம் உயர்வு
புதுச்சேரி,ஏப்.3- புதுச்சேரி இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள வீட்டு உபயோக மின் கட்டணங்களுக்கான விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டு தோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படு கிறது.2022--2023ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பலரும் இக்கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் நிலுவையில் வைத்துள்ள பல கோடி மின்கட்டண பாக்கியை வசூலிக்கவும் கோரினர்.
அப்போது கரோனா கால சூழல் என்பதால் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஆனால், அப்போது தெரிவிக்கப்பட்ட உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவித்ததுடன், சில பிரிவுகளில் கட்டணத்தை உயர்த்தியும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படிபுதுவையில் நேற்று (2.4.2022) முதல் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 காசுகள் உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 30 காசுகள் உயர்ந்து ரூ.2.90 ஆகவும் உயர்ந்துள்ளது.
201 முதல் 300 யூனிட்டுக்குள் வரையிலான பயன் பாட்டிற்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ. 5 ஆகவும், 300 யூனிட்டுகளுக்கு மேலான பயன்பாட்டிற்கு, 40 காசுகள் உயர்ந்து ரூ. 6.45 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேவேளையில் வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment