தோழர்களே,
நாளை மாலை (25.4.2022) நமது இடம் சென்னை பெரியார் திடலில் மகா சமுத்திரமாக மக்கள் திரள வேண்டும்.
அந்தச் சமுத்திரத்தின் அலையின் ஓசை டில்லி ஆள வந்தார்களின் ஆணவத்திற்கு அறை கூவலாக இருக்க வேண்டும்.
அது என்ன 'நீட்'? 5ஆம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாது.
ஏன் தெரியுமா? திராவிட இயக்க உழைப்பில் திராவிட ஆட்சியில், பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியில் தந்தை பெரியாரின் பெரும் பணியால் பாமர மக்களும் படித்து, பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்து விட்டனர்.
மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளி லும் மளமள வென்று புகுந்து படித்து வெற்றி பெற்று, அரசுப் பணிகளிலும் அட்டாணிக் கால் போட்டு மின் விசிறியின் கீழும், குளிர் சாதன அறைகளிலும் அமர ஆரம்பித்து விட்டனர்.
பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு! அனைத்தையும் அல்வாவாக விழுங்கி ஏப்பமிட்ட அய்யன்மார் கூட்டத் துக்குக் குருதிக் கொதிப்பு ஏற்படாதா?
என்ன செய்யலாம்? மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்ததுதான் இந்த 'நீட்' என்னும் கண்ணி வெடி!
சூழ்ச்சியிலே பிறந்து சூழ்ச்சியிலே வளர்ந்து சூல் கொண்ட கூட்டம் சதா இதைப் பற்றியே தான் சிந்திக்கும் போலும்!
'நீட்' யாருக்குப் பயன்? 'நீட்'டுக்கு முன் ஒரு சதவீதம் இடம் பெற்ற சிபிஎஸ்இ மாணவர்கள், 'நீட்'டுக்குப் பிறகு 39 விழுக்காடு இடங்களை விழுங்கினர் என்றால் விவரம் புரியவில்லையா?
இரண்டாவது - புதிய தேசிய கல்விக் கொள்கையாம். தமிழ் நாட்டில் 1968ஆம் ஆண்டிலேயே அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது 'கல்தா' கொடுக்கப்பட்ட 'இந்தி' ஒட்டகம் உள்ளே புக ஏற்பாடு.
தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தான் என்று சட்டம் செய்யப்பட்ட பிறகு, மூன்றாவது மொழி மூக்கை நுழைப்பானேன்? இந்தி, சமஸ்கிருதமொழி போட்ட ஆட்டுக் குட்டி; வெறும் மொழித் திணிப்பல்ல - பண்பாட்டுத் திணிப்பு.
1926ஆம் ஆண்டிலேயே 'தமிழிற்குத் துரோகமும், இந்தியின் ரகசியமும்" எனும் தலைப்பில் 'குடிஅரசு' இதழில் (7.3.1926) கட்டுரை தீட்டியவர் தந்தை பெரியார்.
1931இல் நன்னிலத்தில் கூட்டப் பெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் என்ன கூறுகிறது?
"பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக் குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நம் மக்கள் படிக்கும் படிச் செய்வது பார்ப்பனியத்துக்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடைப் பரப்பவும் புத்தம் புதிய தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும் மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும்; உலக மொழியாக விளங்கும் ஆங் கிலத்தையே (தாய்மொழிக்கு அடுத்த படியாக) நமது இளைஞர்கள் கற்க வேண் டும்" என்பதுதான் நன்னிலம் தீர்மானம்.
91 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்திற்காக 2022லும் நமது கழகம் குரல் கொடுக்க வேண்டியுள்ளதை நினைத்துப் பாருங்கள்.
இந்தித் திணிப்பு என்பது பார்ப் பனியத்துக்கு ஆக்கந் தேடுவது என்று 91 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; இப்பொழுது தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் பார்ப்பனியக் கலாச்சாரத்தைப் பரப்பிட இந்தி, சமஸ் கிருதம் திணிக்கப்படுகிறது - பார்ப்பனீய குலக் கல்வித் திட்டம் நம் பிள்ளைகளின் தொண்டைக்குள் திணிக்கப்படுகிறது.
மூன்றாவது - மாநில உரிமை மீட்பு! இந்தியா ஒரு நாடு அல்ல; பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனி மொழி, தனி பண்பாடு, கோலோச்சுகிறது - இந்த நிலையில் எல்லா அதிகாரங்களையும் கபளீகரம் செய்வதற்குத்தான் ஒன்றிய அரசா?
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்குத் (Concurrent List) தூக்கிச் சென்ற காரணத்தால் மாநிலங்களின் எண்ணங்களைக் கேட்காமலேயே, தானடித்த மூப்பாக இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வியாம்.
துணை வேந்தர்களைக் கூட இனி ஒன்றிய அரசுதான் நியமனம் செய்யுமாம். அகில இந்தியக் கல்வித் துறை உருவாக்கப்படுமாம்.
மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் சம்பந்தமான சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றுகிறது.
இந்த மூன்று உரிமைகளையும் முன்னிறுத்திதான் கொளுத்தும் கோடையில் திராவிடர் கழகத்தின் சார்பில், 89 வயதுடைய நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நாகர்கோயில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை பிரச்சாரப் பெரும் பயணம் நேற்றிரவோடு (23.4.2022) அரக்கோணத்தில் சங்கமித்தது.
மூன்று முத்தான நோக்கங்கள் - ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் வயிற்றில் பால் வார்ப்பதாகும்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் இத்தகையப் பயணத்தை மேற் கொண்டவர்கள்தாம். அவற்றில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எல்லாம் வெற்றி பெற்றவர்கள்தாம்.
அசைக்க முடியாது என்று நினைப்போடு இருந்த எம்.ஜி. ஆரையே வருமான வரம்பு ஆணைப் பிரச்சினையில் பின் வாங்க வைத்ததும் நமது பிரசசாரப் பெரும் பயணம்தான்!
69 விழுக்காடு இடங்களை இந்தியத் துணைக் கண்டத்திலேயே சட்ட ரீதியாக அரசியல் சட்ட ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு பயன் பெறுகிற மாநிலம் தமிழ்நாடு என்றால், அதற்குக் காரணமும் இத்தகைய நாடு தழுவிய பிரச்சாரப் பயணம்தான்.
நாளொன்றுக்கு 225 கி.மீ. பயணம் என்ற முறையில் 4700 கி.மீட்டர் பயணித்த இந்தப் பெரும் பயணமும் வீண் போகாது - வெற்றி வாகை சூடும் என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.
நாளை (25.4.2022) திங்கள் மாலை சென்னைப் பெரியார் திடலில் நிறைவு விழா - சமூகநீதிக்கான சரித்திர நாயகர், நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பு செய்கிறார். (சனியன்று சென்னையில் நடைபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில்கூட 'நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை!" என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். தமிழர் தலைவர் அளித்த பட்டத்தின் நேர்த்தியும், சிறப்பும் இப்பொழுது என்னவென்று புரிகிறதா?)
நிறைவு விழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளரும் திராவிட இயக்கப் போர் வாளுமான (இந்தப் பட்டத்தையும் வழங்கியவர் நமது தலைவர் ஆசிரியர்தான்) வைகோ போர் முரசு கொட்ட இருக்கிறார்.
பெரும் பயணத்தின் நோக்கத்தையும், அதன் சீலத்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கிக்கூற இருக்கிறார்.
கழகத் தலைவர் தலைமையில் அணி வகுத்துப் புறப்பட்ட 30க்கும் மேற்பட்ட கருஞ்சட்டைத் தோழர்களும் வரலாற்றில் இடம் பெற்றவர்களே!
எல்லோருக்கும் வாழ்த்துக் கூறுவோம் வாருங்கள்! வங்கக் கடலாய் ஆர்ப்பரித்து வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!
வணக்கம்.
- கலி. பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்



No comments:
Post a Comment