மார்ச் இறுதி வாரம் துவங்கியது முதல் மின்சாரத் தட்டுப்பாடு இந்தியா முழுவதும் தற்போது பெரும் சிக்கலாக உருவாகி உள்ளது, ஒரு தனிநபருக்காக ஒன்றிய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா இந்த மின் தட்டுப்பாடு என்ற சந்தேகம் எழுகிறது; சான்றுகளும் உண்மையாக இருக்குமோ என்பதாக உள்ளன.
'கேல் இந்தியா' என்னும் நிலக்கரி சுரங்கங்களை நிர்வ கிக்கும் பொதுத்துறை நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய அரசுக்குக் கடிதம் அனுப்பியது.
அதில் எங்களிடம் உற்பத்தித் திறன் உள்ளது, இருப்பினும் தொடர்ந்து நிதி குறைப்பினால் போதுமான கருவிகள் வாங்க இயலாமல் போனது, இருக்கும் உபகரணங்கள் பெரும்பாலானவை காலாவதி ஆகும் நிலையில் உள்ளன. குறிப்பாக சில கனரக உபகரணங்கள் காலாவதியாகிவிட்டன, அடிக்கடி ஏற்படும் சிறு சிறு விபத்துகளுக்கு காலாவதியான உபகரணங்களே காரணம், மேலும் கரோனா காலத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்ற கடை நிலைத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பவில்லை. அவர்களுக்குப் போதுமான நிதி உதவி கொடுத்து அவர்களை மீண்டும் பணிக்கு வரவழைக்க எங்களிடம் நிதி இல்லை. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, தற்போது உள்ள கையிருப்பு நிலக்கரி சில மாதங்கள் மட்டுமே போதுமானவை. மேலும் நிலக்கரி வெட்டி எடுக்கும் வேலைகள் 60 விழுக்காடு குறைந்து விட்டன. இதே நிலை நீடித்தால் பிப்ரவரிக்குப் பிறகு நாட்டில் நிலக்கரி கையிருப்பில் இல்லாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை உருவானால் மார்ச் மாதம் நாட்டில் கடுமையான மின்சாரத்தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கோடைக்காலத்தில் அதிகமான மின் தேவையை நாடுஎதிர்கொள்ள முடியால் பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று சுரங்கத்துறை அமைச்சகத்திற்கும் நிதித்துறை செயலாளருக்கும் 'கேல் இந்தியா' கடிதம் எழுதியது,
இந்தக்கடிதத்திற்கு இரண்டு அமைச்சரகமுமே பதில் அளிக்கவில்லை. அந்தக்கடித்ததை பார்த்த பிறகு நிலக்கரி தொடர்பான வரவு செலவு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நிதி நிலை அறிக்கையை எதிர்பார்த்தார்கள். ஆனால் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. கேல் இந்தியாவிற்கு கூடுதல் நிதியும் ஒதுக்கப்படவில்லை. விளைவு இதோ நாடு முழுவதும் பெரும் மின் தட்டுப்பாட்டுப் பேரிடரை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆந்திரா, குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகள் வாரம் இரண்டு நாள் மூடப்பட்டு விட்டன. ஒரு நாள் விடுமுறை, இரண்டு நாள் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் மூடல்; விளைவு இதனை நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்களிற்கு வருவாய் இழப்பு, இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு மற்றும் ஊதியக் குறைப்பு எனச் சங்கிலித்தொடர்பான பாதிப்புகள்!
ரயில்வே துறையும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலக்கரி பரிவர்த்தனைக்காக நாடு முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் வேகன்கள் (நிலக்கரி ஏற்றிச் செல்லும் பெட்டிகள்) காலாவதியாகிக் கொண்டு இருக்கின்றன. உடனடியாக நிலக்கரி கொண்டு செல்லும் வகையில் தற்போது உள்ள நவீன வசதிகளுக்கு ஏற்ப பெரிய பெட்டிகள் தேவை என்று கூறியிருந்தது, அதுவும் ஒருங்கிணைக்கப்பட்ட பட்ஜெட்டில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. முதலில் ரயில்வேக்கான தனி பட்ஜெட் இருக்கும் போது நிலக்கரி ஏற்றுமதிக்கு என்று ரயில்வே பட்ஜெட்டில் தனியாக அறிவிப்பு வெளியாகும். அதில் நிலக்கரி ஏற்றிச்செல்லும் பழுதுபட்ட பெட்டிகளை பழுதுபார்க்க, புதிய பெட்டிகள் தயாரிக்க, நிலக்கரி முதலான அதிக பாரம் ஏற்றிச்செல்லும் ரயில் பாதைகளை செப்பனிட என்று அதற்கு மட்டுமே பல அடுக்கு திட்டங்கள் நிறைவேற்றுவார்கள்
இந்த அரசு ரயில்வே பட்ஜெட்டை நீக்கி பொதுப் பட்ஜெட்டோடு இணைத்த பிறகு ரயில்வேக்கான எந்த ஒரு நவீன திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பயணிகள் ரயில் கூட தடுமாற்றத்தில் ஓடும் போது இவர்களின் கவனம் கூட்ஸ் ரயில்கள் மீது செல்லாது. இந்த ஆண்டு ரயில்வேத்துறைக்கான தணிக்கை வாரியம் - ரயில்வே கடந்த 4 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களையும் அறிவிக்கவில்லை. ரயில்களின் வேகம் குறைந்து விட்டது, தனியார் மயமாக்கல் பிரச்சினையால் ஒப்பந்ததொழிலாளர்களுக்கு இடையே நடந்த போட்டி பொறாமை காரணமாக ரயில்களில் பயணிகளுக்கான் வசதிகளும் கிடைக்காமல் போனது - என்று கூறியிருந்தது.
ஒன்றிய அரசு சில தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைப் பெறுவதற்கு வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கியதோ என்ற அய்யமும் எழுகிறது. காரணம் சமீபத்தில் நிலக்கரி இறக்குமதிக்கான வரியை நீக்கி உள்ளது, அதே நேரத்தில் அதானியின் மிகவும் பிரச்சினைக்குரிய ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து முதல் நிலக்கரி சரக்குக் கப்பல் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரத் துவங்கி உள்ளது.
இதிலிருந்து ஒரு உண்மை விளங்குகிறது, அதானி என்ற தனி நபருக்காக ஒட்டுமொத்த இந்தியாவையே திட்டமிட்டு செயற்கை இருளில் மூழ்கவைத்துள்ளார்கள்.
இதை மறைக்க வடமாநிலங்களில் மதக்கலவரம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது என்று திட்டமிட்டு பாஜக மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்து வருகின்றனர்.
எல்லாவற்றிலும் அரசியல் தானா? மூலக் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
No comments:
Post a Comment