கவிஞர் கூ.வ.எழிலரசு
அழியாத பெரும்புகழின் பெரியார் தொண்டர்
ஆசிரியர் வீரமணி முதுமை நாளில்
குழிபறிக்கும் ‘நீட்' தேர்வை ஒழிப்ப தற்கும்
குலக்கல்வி நுழையாமல் தடுப்ப தற்கும்
வழிநெடுகத் தமிழ்நாட்டில் பயணம் செய்தே
வழங்கிவரும் பரப்புரைகள் - விடியல் சொற்கள்;
பிழிந்தெடுத்த தீஞ்சாறு தமிழர்க் கெல்லாம்
புத்துயிர்ப்புத் தந்துதவும் தாய்ப்பா லாகும்!
பொய்புரட்டுக் குப்பைக்குள் தமிழர் மானம்
புதையுண்ட காலத்தில் பெரியார் வந்தே
மெய்யுழைப்பை ஈந்துநமை மீட்டெ டுத்தார்!
மேதினியில் மனிதர்களாய் உலவ வைத்தார்!
மெய்வருத்தம் பாராமல் பெரியார் தொண்டை
மேல்சுமந்த வீரமணி காப்பார் நம்மை!
கய்நடுக்கம் கால்நடுக்கம் கண்டா ரில்லை!
கடமையிலே ஒரு நாளும் ஓய்ந்தா ரில்லை!
காஞ்சியிலே பயணத்தில் கண்டேன் நெஞ்சம்
களிப்புற்றேன்; அடடா ஓ! முதுமை ஏறி
பூஞ்சிறகாய் அசையும் வெண் முடியின் தோற்றம்;
பால்நிலவாய் ஒளிருமுகம் அறிவுக் கண்கள்;
"சாஞ்சாடி" முதுகுழந்தை தமிழர் வாழ்வைச்
சாயாமல் காப்பதற்கு நடக்கும் விந்தை!
வாஞ்சையுடன் வந்திங்கே தமிழ்க்கூட் டத்தை
வழிநடத்தும் வீரமணி பயணம் வெல்க.
தந்தையவர் பெரியாரும் இப்போ தில்லை;
தமையன்நம் அண்ணாவும் இன்றைக் கில்லை;
முந்திவந்து காப்பதற்கோ கலைஞர் இல்லை!
மூழ்கிவிட்ட தமிழ்நாட்டை மீட்டுக் காக்க
வந்தமர்ந்தார் அரியணையில் ஸ்டாலின் என்னும்
வரலாற்றை ஏற்காத வஞ்ச கத்தார்
தந்துவரும் தொல்லைகளைத் தடுத்துக் காக்கத்
தளராத வீரமணி பயணம் வெல்க!
குற்றமென்ன மொழிகளிலே கண்ட றிந்தார்?
குமட்டுகின்ற மொழியைவாய்த் திணிப்பா ராமே?
பெற்றமொழி வளர்ப்பதையும், ஆங்கி லத்தைப்
பெருந்துணையாய்க் கொள்வதையும் தடுத்தால் இங்கே
புற்றுகளாய் மாநிலங்கள் மாற்றம் கொள்ளும்;
புதுமனையாய்ப் பாம்புகள்தான் விழாந டத்தும்!
**சிற்றன்னை என்றேனும் சோற ளிப்பாள்;
"செத்த அன்னை" என்றைக்குச் சோற ளிப்பாள்?
தொண்ணூறைத் தொடுகின்ற கிழவர்; அய்யா
தொண்டுதனைப் பயிராக்கும் உழவர்; காணும்
விண்ணார்ந்த உலகினையே பெரியார் கொள்கை
விளைநிலமாய்ப் பண்படுத்தும் மழவர்; நாளும்
கண்காணும் திசையெங்கும் பகைய றிந்தே
கைவாளாய்ச் சுழன்றழிக்கும் மறவர்! இன்னும்
எண்கூடிப் பன்னூறு ஆண்டு வாழ்க!
ஏற்றமிகு இனமானப் பயணம் வெல்க!
** சிற்றன்னை - ஆங்கில மொழி
No comments:
Post a Comment