ஹரித்வாரில் சாமியார்கள் கூட்டத்தில் உரை யாற்றிய மோகன் பகவத், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் "அகண்ட பாரதக் கனவு" இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் என்று கூறியுள்ளார்.
"இந்தியா அகிம்சையைப் பற்றி பேசுவதாக கூறுகின்றனர். ஆனால் எங்களின் கையில் உள்ள 'தடி' ஹிந்துராட்டிரம் அமைப்பதைத் தடுப்பவர்களை கவனிக்கும்! இப்போது உலகம் எங்களின் சக்தியை புரிந்து கொள்கிறது" என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
"நீங்கள் 20-25 ஆண்டுகள் பேசினீர்கள், ஆனால் நாங்கள் எங்கள் ஹிந்துமதக் கொள்கைகளை பரப்புவதை வேகப்படுத்தினால் 10-15 ஆண்டு களுக்குள் சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அரவிந் தரும் கற்பனை செய்த இந்தியாவைப் பார்ப்போம்.
உறுதியுடன் ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் சமூகம் அதன் இலக்கை அடைய முடியும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. என்னிடம் அதிகாரம் இல்லை; அது மக்களிடம் உள்ளது. கட்டுப்பாடு அவர்களிடம் உள்ளது. அவர்கள் தயாராக இருக்கும்போது, அனைவரின் நடத்தையும் மாறுகிறது. அச்சமின்றி, சேர்ந்து நடப்போம் - அகிம்சை பற்றிப் பேசுவோம், ஆனால் கையில் 'தடி'யோடு நடப்போம் - அந்த 'தடி' அதிக கனமானதாக இருக்கும்.
எங்களுக்கு யாருடனும் வெறுப்போ, பகையோ இல்லை. உலகம் சக்தியை மட்டுமே புரிந்து கொள்கிறது. நமக்குப் பலம் இருக்க வேண்டும், அது அனைவருக்கும் தெரிய வேண்டும். ஹிந்து மதத்தின் நோக்கங்கள் தான் இந்தியாவின் நோக்கங்கள். சுவாமி விவேகானந்தர் ஹிந்து மதமே இந்தியாவின் உயிர் என்றார். ஹிந்து மத முன்னேற்றம் இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை. சனாதன தர்மம் என்பது ஹிந்து ராட்டிரம் மட்டுமே! இந்தியா தனது முன்னேற்றப் பயணத்தைத் தொடங்கிவிட்டது, அதை இப்போது நிறுத்த முடியாது. அதை நிறுத்த விரும்புவோர் அகற்றப்படுவார்கள் அல்லது முடிக்கப்படுவார்கள், ஆனால் இந்தியா நிறுத்தாது
இப்போது ஒரு வாகனம் கிளம்பி உள்ளது, அதில் பிரேக் இல்லை. இடையில் யாரும் வரக்கூடாது. நீங்கள் விரும்பினால், எங்களுடன் வந்து உட்காருங்கள் அல்லது ஸ்டேஷனில் இருங்கள். எங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நமது பன்முகத் தன்மையையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். ஆனால் பன்முகத் தன்மை காரணமாக நாம் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றாக அணிவகுத்துச் சென்றால், நமது இலக்கை 20-25 ஆண்டுகளில் அடைவோம்; இதற்கு யார் குறுக்கே வந்தாலும் எங்கள் கைகளில் உள்ளது செயலில் இறங்கும்" என்று அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார்.
இப்படிப் பேசி இருப்பவர் ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் அல்லர்; இந்தியத் துணைக் கண்டத்தை ஆளும் ஒரு கட்சியின் - சித்தாந்தத்தை, கொள்கையை நிர்ணயிக்கும் தலைவர் ஆவார்.
இந்த நிலையில் உள்ள ஒருவர் இப்படிப் பேசினால் - எங்கள் 'கைத்தடி' அதன் வேலையைச் செய்யும் என்று உறுமினால், மற்ற மதக்காரர்களின் வாழ்வு நிலை என்ன? நாட்டில் நடமாட முடியுமா?
அரசமைப்புச் சட்டத்தின் ஆணி வேர் என்னாவது?
"இந்தியா ஒரே நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்று ஆளும் தரப்பில் பேசுபவர்களுக்கான கருத்து ஊற்று எங்கே இருந்து கிளம்புகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இது நாடா - கடும்புலி வாழும் காடா? என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா!
மக்கள் விழிப்படையட்டும் - பாசிசக் கும்பலை அடையாளம் காணட்டும்!
No comments:
Post a Comment