மக்களின் உணர்வுகள் என்ற எரிமலையின் மீதமர்ந்து மகுடி வாசிக்கிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

மக்களின் உணர்வுகள் என்ற எரிமலையின் மீதமர்ந்து மகுடி வாசிக்கிறார்கள்

இலங்கையில் தங்களை அசைக்க முடியாது என்றவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!

குன்னூர், திருப்பூரில் தமிழர் தலைவர் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை

குன்னூர், ஏப்.19- மக்களின் உணர்வுகள் என்ற எரிமலையின் மீதமர்ந்து மகுடி வாசிக்கிறார்கள்; இலங்கையில் தங்களை அசைக்க முடியாது என்றவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்று தமிழர் தலைவர் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பதற்கான பரப்புரை பெரும் பயணத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நாகர் கோவிலில் 3.4.2022 அன்று தொடங்கி மக்களை தொடர்ச் சியாக சந்தித்து வருகிறார். இப்பரப்புரைப் பெரும்பயணம் 25.4.2022 அன்று சென்னையில் நிறைவடைகிறது.

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும்பயணப் பொதுக் கூட்டம் நேற்று (18.4.2022) குன்னூரிலும், திருப்பூரிலும் நடைபெற்றது.

'திராவிட மாடல்' என்பது அனைவருக்கும் அனைத்தும், சமூகநீதி, சமத்துவத்துக்கானது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெருமிதத்துடன் எப்போதும் கூறி வருகிறார்.

ஆரியப் பார்ப்பனர்கள், தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில், பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்களோடு, அதிகார ஆணவத்துடன்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கொள்கைகளை மக்களிடையே திணித்து வருகிறது.

வருணாசிரம தர்மம், மனு தர்மத்தின் பெயரால் எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியை கொடுக்கலாகாது என்கிற பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி இருந்த இந்நாட்டில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கல்வி அனைவருக்கும்  என்றானது.

நீதிக்கட்சி ஆட்சியில் அளிக்கப்பட்ட  வகுப்புரிமைமூலம்  கல்வி மறுக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர்கள் பலரும் பார்ப்பனர் அல்லாதார் கல்வி பெறு வதற்காக ஏராளமான திட்டங்களை, உதவிகளை செய்தனர்.

பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பு பெறும் வகையில் இருந்த மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பதை மாற்றி, நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில்தான் பார்ப்பனர் அல்லாதார் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது.

நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான்

திமுக ஆட்சி

நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் திமுக ஆட்சி என்று அறிஞர் அண்ணாவால் பிரகடனப்படுத்தப்பட்ட திராவிட இயக்க ஆட்சியில், கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி அளிக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடித்தட்டுப் பிரிவிலிருந்து, கிராமப் புறங்களிலிருந்து மாணவர்கள் மருத்துவர்கள் ஆனார்கள்.

அடித்தட்டு மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் Ôநீட்Õ தேர்வு எனும் கொடுவாளினைக்கொண்டு மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட வரைவுகளை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ள நிலையில், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் ஆளுநர் , குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தராமல் முட்டுக்கட்டை போட்டபடி உள்ள நிலையில், அதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு திணித்து வந்துள்ள நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து, பொதுமக்கள், பெற்றோர், மாணவரிடையே போதிய விழிப்புணர்வை ஊட்டி,  திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சியினரையும் திரட்டி தொடர்ந்து களம் கண்டு வருகிறது.

சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் வழியில் அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் களின் உரிமைக்கான, சமூகநீதிக்கான இயக்கமாக, சமூகத்தில் பீடித்திருக்கும் மூடநம்பிக்கை நோயினை தீர்க்கும் அரு மருந்தாக தந்தை பெரியார் கண்ட பகுத்தறிவு இயக்கமாம் திராவிடர் கழகத்தை, திராவிடர் கழகத்  தொண்டர்களை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 3.4.2022 அன்று தொடங்கியது.

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம்மூலம் தமிழ் நாட்டின் பல்வேறு நகரங்களில், மாவட்டத் தலைநகரங்களில் பரப்புரைப் பயணப்பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சி உரையாற்றி வருகிறார். 

திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சியினரும் பரப்புரைப் பெரும்பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று இயக்க வெளியீடுகளை பெற்று வருகிறார்கள். நன்கொடைகளை அளித்து பரப்புரைப் பயணத்துக்கு தங்களின் ஆதரவினை உறுதி செய்கிறார்கள்.

தமிழர்களை ஒன்றிணைத்து வருகிறது

இந்த பரப்புரைப் பெரும்பயணம் என்பது திராவிடர் கழக ஏற்பாட்டில் நடைபெற்றாலும், கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்து வருகிறது.

திராவிடர்கழகம் முன்னெடுக்கும் உரிமைப்போராட்டம் வென்றே தீரும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்கும் அனைத்துக் கட்சினரும் வெகுவாக ஆதரவு நல்கி பாராட்டி வரவேற்பளித்த வண்ணம் உள்ளனர். கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் தங்கள் இல்லத்து சிறப்பு நிகழ்வாகக் கருதி தமிழர் தலைவர் ஆசிரியர் வருகையைக் கொண்டாடுகின்றனர்.

பரப்புரைப் பெரும்பயணம் 25.4.2022 அன்று சென்னை யில் நிறைவு பெறுகிறது. சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பரப்புரைப் பயண நிறைவு நாளில் கலந்துகொள்கின்றனர்.

நீட் தேர்வு எதிர்ப்பு-தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் .சுப்பிரமணியன் ஆகியோர் அந்தந்த பகுதிகளிலுள்ள கழகத் தோழர்கள், அனைத்துக்கட்சியினரை ஒருங்கிணைத்து வெகு சிறப்பாக  செய்து வருகின்றனர்.

பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக 30.4.2022 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெயர்ப் பலகையில் ஹிந்தியை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தையும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குன்னூர்(நீலமலை) பரப்புரைப்

பயணப் பொதுக்கூட்டம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம்  நீலமலை மாவட்டம் குன்னூர் பெரியார் திடலில் நேற்று (18.4.2022)  மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுக் குழு உறுப்பினர் இராவணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன், மண்டல தலைவர் கருணாகரன், மாவட்ட ..தலைவர் இரா.புகழேந்தி, மாவட்ட ..செயலாளர்  வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

குன்னூரில் பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இறுதியாக உரையாற்றிய தமிழர் தலைவர்,

இந்தப்பயணம் ஏன் என்பதை ஒரு நூலாக வெளியிட் டிருக்கிறோம்என்று அந்தப் புத்தகத்தை எடுத்து மக்களுக்குக் காட்டினார். “மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும்என்று கூறி, அதற்கான காரணத்தை விளக்கினார். ''நாங்கள் வருகிற ஆபத்தை சொல்லக்கூடிய வர்கள்; இது 100 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற வரலாறுஎன்று தான் சொல்லுகிற கருத்துக்கு வரலாற்று வலு சேர்த்தார். ''அந்தப் பணியைத் தான் இப்போது தொடர்ந்து கொண்டி ருக்கிறோம்'' என்று சில முன்னோட்டமான கருத்துகளைக் கூறினார்.

தி.மு.. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், மேனாள் நகர்மன்றத் தலைவர் ராமசாமி ஆகியோரின் சிறப்பைப் பற்றி கூறினார். “நீலமலையில் சுற்றுவட்டாரத்தில் எல்லோரும் உழைக்கும் மக்கள்; நம்முடைய சகோதரர்கள். ஆகவே, அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறோம்என்று கூறிவிட்டு, “அதற்காகத்தான் இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம்என்று மறுபடியும் புத்தகத்தைக் காட்டினார்.

மோடியரசின் அலட்சியத்தால்

40 லட்சம் பேர் உயிரிழப்பு

தொடர்ந்து, ''கரோனா காலத்தில் மோடியின் அலட் சியத்தால் 40 லட்சம் மக்கள் இறந்திருக்கிறார்கள்'' என்று நடப்பு செய்தியாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை எடுத்துரைத்தார்.

''உலக அளவில் Ôதிராவிட மாடல் ஆட்சிÕ என்று ஆய்வாளர்கள் ஒரு புது சொல்லையே தந்திருக்கிறார்கள். எப்படி சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு என்ற வார்த்தைகளை நாம் அறிமுகப்படுத்தினோமோ, அதுபோல உலக ஆய்வாளர்கள் Ôதிராவிட மாடல்Õ என்ற சொல்லை உருவாக்கி இருக்கிறார்கள்'' என்று பெருமிதத்துடன் குறிப் பிட்டார். இதற்குக் காரணம் நீதிக்கட்சி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் என்பதையும் விவரித்தார்.

நீட் தேர்வை பா... வைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றனஎன்று நீட் எதிர்ப்பு மசோதாவை ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்க்கின்றது என்பதைக் குறிப் பிட்டார். “நாம் விரட்டியடித்த அதே குலக்கல்வி இப்போது நீட், புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயர்களில் வருகிறதுஎன்று எச்சரித்தார்.

மேலும், பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு மக்கள் பட்ட பாடுகளை எடுத்துக்காட்ட, பள்ளிக்கூட ஆசிரியர் மாணவனின் வயதைக் கண்டறிய, கைகளால் காதைத் தொட்டு காட்டச் சொல்வதை, அப்படியே செய்து காட்டினார். அப்படி எல்லாம் சொல்லி ''பிள்ளைகளை படிக்க வைத்தால், இதை தலைகீழாக மாற்றும்படி, 'நீட், கியூட்" தேர்வுகளை கொண்டு வருகிறானேஎன்றும், ''அவை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதுஎன்றும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

நீதியரசர் .கே.ராஜன் குழு அறிக்கை

தமிழ்நாடு அரசு நீட் தேர்வு ஒழிப்பிற்கு எப்படிப்பட்ட ஆக்கபூர்வமான பணிகளை செய்து வருகிறது என்று சொல்வதற்கு, மேனாள் நீதியரசர் மாண்பமை .கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஆய்வு செய்து வழங்கிய அறிக் கையை எடுத்துக்காட்டி, “இந்த அறிக்கையின்படி அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பில்லை; கிராமப் புறத்து  மாணவர்களுக்கு வாய்ப்பில்லை; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பில்லைஎன்பதை புரிய வைத்தார்.

மேலும் அவர், ”ஆளுநர் சட்டப்படி தனது கடமையைச் செய்யவில்லை.” என்று குற்றம் சாட்டினார். “தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த மோதலும் கிடையாது. காரணம் ''உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்'' அவ்வளவுதானே?” என்று கலைஞரை நினைவு கூர்ந்து விட்டு, ''ஆகவே மக்களே, இதற்காகத்தான் உங்களைச் சந்திக்கவே வந்தோம்..இறுதியாக ஒன்று, “திராவிடர் கழகம் முன்னெடுத்த போராட்டம் தோற்றதாக வரலாறே கிடையாதுஎன்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

இந்த பரப்புரை கூட்டத்தில் நீலமலை மாவட்ட  தி.மு.. செயலாளர் பா.மு.முபாரக், குன்னூர் நகர தி.மு..செயலாளர் இராமசாமி, குன்னூர் நகர்மன்ற துணைத் தலைவர் மு.வாசிம் ராஜா, சி.பி.அய்.மாவட்ட செயலாளர் போஜராஜன், சி.பி.எம்.நகர செயலாளர் இராமன் குட்டி, .தி.மு.. பொதுக்குழு உறுப்பினர் சேகர், .மு....பொறுப்பாளர் மணி வசந்தம், காங்கிரசு கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கமல் சீராளன், தி.மு..பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, கழக பொறுப்பாளர்கள் பிரேம்குமார், ஈசுவரன், முருகன், தினகரன், இரவி, மீனாட்சி, சோதிமணி, ஜீவா, தினேசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியநாதன் நன்றி கூறினார்.

குன்னூர் தோழர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு, திருப்பூர் நோக்கி தனது பரப்புரைப் படையுடன் புறப்பட்டார்.

திருப்பூரில் தமிழர் தலைவர்

அந்தந்த பகுதி காவல்துறையினரின் வாகனப் பாதுகாப் புடன், தமிழர் தலைவர் இரவு 8.30 மணிக்கு திருப்பூர் அடைந்தார். பல்வேறு கட்சிகளின் மாவட்டப் பொறுப்பாளர் கள் தமிழர் தலைவருக்கு ஆடை போர்த்தி மரியாதை செய்தனர்.

பன்னீர்செல்வம், விஜயகாந்த், துரை மாணிக்கம் ஆகியோர் தமிழர் தலைவர் முன்னிலையில் தங்களை இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணக் கூட்டம்  திருப்பூர் வெள்ளியங்காடு தெற்கு பகுதியில் மாவட்ட தலை வர் இரா.ஆறுமுகம்  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநகர தலைவர் இல்.பாலகிருட்டிணன், மாநகர அமைப் பாளர் ஆசிரியர் முத்தையா, தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழக செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் உரையில் குறிப்பிட்டதாவது:

மூன்றாண்டுகளுக்கு முன்னால், சுப்பராயன் அவர்களை ஆதரித்துப் பேசுவதற்காக நாங்கள் இங்கே வந்தபோது, ஒரு பெரிய கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது நினைவுக்கு வருகிறதுஎன்று நிதானமாகத் தொடங்கினார்.

மக்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் போது, “அவர்கள் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை அறியாத பரிதாபத்திற்குரியவர்கள்என்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களைச் சுட்டியதும், மக்களின் வியப்பு அதி கரித்தது. “எதிர்ப்புகள் எது வந்தாலும், அவைகள்தான் எங்கள் வளர்ச்சிக்கு, விளைச்சலுக்கு உரங்கள் என்பதை அறியாத வர்கள்என்று அடக்கத்துடன் சொன்னதும் மக்கள் கூடுதல் வியப்பு மேலிட்டு, தங்களை அறியாமல் கைதட்டினர். “கொலை முயற்சியில் நீங்கள் வெற்றி கூடப் பெறலாம். ஆனால், எங்கள் கொள்கையை ஒருபோதும் வெல்ல முடியாதுஎன்று சொன்னதும், மேடையில் இருப்பவர் உள்பட மக்கள் அனைவரும் உணர்ச்சி வயப்பட்டு பலமாகக் கைதட்டினர்.

காரணம் இது பெரியார் மண்! அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண்! சமூகநீதிமண்! இந்தியாவிற்கே திராவிட மாடலை அறிமுகப்படுத்திய திராவிட மண்!” என்று அடுக்கினார் இடைவிடாத கைதட்டல்களுக்கிடையே.

தொடர்ந்து மேயரைச் சுட்டிக்காட்டி, “நாங்கள் பேசுவதை விட இவர்களைப் போன்ற இளைஞர்கள் பேசுவதுதான் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி! அவர் கொள்கை பூர்வமாகப் பேசினார்என்று உற்சாகப்பட்டுக் கொண்டார்.

காவி மண்ணாக்க முடியாது

''பெரியார் என்ற பேராயுதத்திற்கு அண்ணா அறிமுகமான வரலாறு இந்த திருப்பூர் நரகத்திற்குத்தான் உண்டு. வேறெங்கும் இல்லாத அண்ணா சிலையும், பெரியார் சிலையும் பக்கத்திலே வைத்து கலைஞர் திறந்து வைத்த வரலாறும் இங்குதான் உண்டுஎன்று கூறிவிட்டு, ”திராவிடர் இயக்கத்திற்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. ஒருபோதும் இது காவி மண்ணாக முடியாதுஎன்றார். “இது கருப்பு மண், சிவப்பு மண், நீலம் மண்! அவ்வளவுதான்!'' என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்., பா..கவில் இருக்கும் நம் மக்களை விளித்து, “தோழர்களே, அவர்களின் கூண்டிலே சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களின் பிள்ளைகளுக்காகவும்தான் நாங்கள் போராடுகின்றோம்என்று கனிவுடன் அறிவித்தார். மருத்துவமும், கல்வியும் எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்லிவிட்டு, அதற்காக திராவிடர் இயக்கம் 100 ஆண்டு களாக செயல்பட்ட விதத்தையும் விளக்கினார்.

ஒன்றிய அரசின் சூழ்ச்சிகள்

அதற்கு மாறாக ஒன்றிய அரசு சூழ்ச்சியுடன் செயல்படு வதை வெட்டவெளிச்சம் ஆக்கினார். ஹிந்தி திணிப்பு பற்றி பேசவந்தவர், “இங்கேதான் பல்லடம் பொன்னுசாமி ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போர்ப்படையின் தளபதியாக விளங்கி யவர்என்று சொல்லி, “அமித்ஷாக்களுக்கு வரலாறு தெரி யாதுஎன்று குறிப்பிட்டார். ஒன்றிய அரசின் ஒரு முரண் பாட்டை விளக்க ஆங்கில நாளிதழை சுட்டிக்காட்டி, ஹிந்தி ஒருபோதும் இந்தியாவை இணைக்காது என்று சொன்னார்.

1987 இல் கலைஞர் தன்னை வாழ்த்திப் பேசி, தார்ச் சட்டியை எடுத்துக் கொடுத்து, ‘அய்யா இல்லாத போது, அண்ணா இல்லாத போது நாங்கள் வழியனுப்புகிறோம்என்று அனுப்பிய அரிய வரலாற்றை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து, “எரிமலையின் மீது அமர்ந்து அவர்கள் மகுடி வாசிக்கிறார்கள். மக்களின் உணர்வுகள்தான் எரிமலை. அது எப்போது? யாருக்கு எதிராகத் திரும்பும்? என்று சொல்ல முடியாது. இலங்கையிலே பார்த்தீர்களா? எங்கள் இனத்தை அழித்தார்களே; தங்களை அசைக்க முடியாது என்றார்களே; அவர்கள் இப்போது எங்கேபோய் ஓடி ஒளிவது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்''என்று எச்சரித்ததும் பலத்த கைதட்டல் எழுந்தது. ''அது இங்கே நடக்கக்கூடாது. காரணம் ஜனநாய கத்தில் வெற்றி - தோல்வி தேவை. ஆகவே, மக்களே விழிப் போடு இருங்கள்என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து மிகுந்த எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்த கருஞ்சட்டைத் தோழர்களிடமும், தோழமைக் கட்சித் தோழர் களிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஈரோடு நோக்கி புறப்பட்டார்.

பங்கேற்றோர்

இந்த பரப்புரை கூட்டத்தில் மாநகர தி.மு..பொறுப்பாளர் நாகராசன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் ரவி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், .தி.மு.. மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், .பெ.தி..மாவட்ட தலைவர் சண்.முத்துக்குமார், .பெ.தி.. ஒருங்கிணைப்பாளர் அங்க குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் இளங்கோவன், 52 ஆவது வட்ட தி.மு..செயலாளர் நந்த கோபால், கருவம்பாளையம் குமாரசாமி, சி.பி.எம்.பொறுப் பாளர் பொம்முதுரை, தி.மு.. பகுதி கழக பொறுப்பாளர் அய்யப்பன், .தி.மு.. வழக்குரைஞரணி கந்தசாமி, ஆசிரியர் துரைசாமி, கோவை மாவட்ட கழகத் தலைவர் .சந்திரசேகர், கோவை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன், தாராபுரம் மாவட்ட செயலாளர் சண்முகம், கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், கோவை மண்டல செயலாளர் சிற்றரசு, மாநில வழக்குரைஞர் அணி துணைத் தலைவர் திருப்பூர் பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர கழக செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment