'போய் வாருங்கள் தந்தையே' என்று மகனாகிய நான் அனுப்பி வைக்கிறேன்!
சென்னை, மே 2 போய் வா மகனே என்று போர்க் களத்திற்குத் தந்தை அனுப்புவார்! போய் வாருங்கள் தந்தையே என்று மகனாகிய நான் அனுப்பி வைக்கிறேன்! என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் கூறினார்.
ஒன்றிய அரசின் ஹிந்தித். திணிப்பு எதிர்ப்பைக் கண்டித்து கடந்த 30.4.2022 அன்று சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில், எழும்பூர் ரயில் நிலைய பதாகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துகளை தார்க் கொண்டு அழிக்கும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், தார்ச் சட்டியையும், பிரசையும் கொடுத்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் உரை வருமாறு:
முதல் போராட்டமும் அல்ல -
முடிவான போராட்டமும் அல்ல!
திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே, பெருந்திரளாகப் போராட்டத்தில் திரண்டிருக்கின்ற கருப்புச் சட்டை வீரர்களே, பத்திரிகை யாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடத்துகின்ற முதல் போராட்டம் அல்ல இந்தப் போராட்டம். அதேபோல, முடிவான போராட்டமும் அல்ல.
ஏற்கெனவே தந்தை பெரியார் காலந்தொட்டு தொடர்ச்சியாக, ஹிந்தி மொழி வலுக்கட்டாயமாக நம்மீது திணிக்கப்படும் காலகட்டங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அத்தகையப் போராட்டங்களில் நாம் வெற் றியும் பெற்றிருக்கின்றோம். வெற்றுப் போராட்டமாக அல் லாமல் - வெற்றிப் போராட்டமாக அமைந்திருக்கின்றன.
நாட்டு மக்களுக்குப் பாடம் நடத்தக்கூடிய தகுதியுள்ளவர்கள்
வெற்றிப் பெற்றதற்குப் பின்னரும்கூட, இன்றைக்கு இருக்கின்ற திரு.மோடி அவர்களுடைய தலைமையில் அமைந்திருக்கின்ற ஒன்றிய அரசாங்கத்தைப்பற்றி இங்கே இருப்பவர்களுக்கு நாம் பாடம் நடத்தவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இங்கே இருப்பவர்கள், நாட்டு மக்களுக்குப் பாடம் நடத்தக்கூடிய தகுதியுள்ளவர்கள்.
மோடி அரசு, அவர்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய மனு தர்மக் கொள்கைகளை நாட்டில் எல்லா வகைகளிலும் அமல்படுத்துவதற்கான முயற் சிகளை எடுத்து வருகிறார்கள். அதனுடைய ஒரு பகுதிதான் ஹிந்தித் திணிப்பு என்கிற ஒரு முயற்சி.
குறிப்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நாம் அனைவரும் அறிவோம். ஹிந்தி பேசாத மக்களும், ஹிந்தி மொழியைக் கற்றுக்கொண்டு ஹிந்தியில் பேசவேண்டும். இனி எல்லா சுற்றறிக்கையும் ஹிந்தி மொழியில்தான் அனுப்பப்படும் என்கிற ஒரு திமிர்த்தனமான ஆணவத்தோடு அறிவித்தி ருக்கின்ற அறிவிப்பை நாம் அனைவரும் அறிவோம்.
இத்தகைய ஆணவத்தை, இத்தகைய வெறித்தனத்தை கொதித்து, முன்னெடுத்து நிராகரிக்கவேண்டும் என்கிற முறையை மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் இன் றைக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்கின்ற போராட்டத்தை அறிவித்து, இன்றைக்கு அந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பில் நன்றி!
அந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைக் கின்ற வாய்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தமைக்காக, திராவிடர் கழ கத்திற்கும், மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில பிரிவின் சார்பில், நெஞ்சார்ந்த நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இதை ஒரு பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டும் என்று சொன்னால், போர்க் களத்திற்குத் தந்தையார், மகனை 'ஆசீர்வாதம்' செய்து அனுப்பி வைப்பார்.
ஆனால், இங்கோ நிலைமை வேறாக இருக்கிறது. தந்தையை தலைமை தாங்கி, போருக்குச் சென்று வா என்று தனயன் அனுப்பி வைக்கின்ற நிலைமை.
ஒருவேளை தந்தை, தனயனுக்கு அனுபவம் போதாது; எனக்கு ஏற்கெனவே நிறைய அனுபவம் இருக்கிறது; நான் போராட்டக் களத்திற்குச் சென்று வருகிறேன் என்றுகூட முடிவெடுத்திருக்கலாம்.
அந்த அடிப்படையில், தந்தைக்குப் போர்க்களத்திற்குச் செல்ல, போராட்டத் திற்குத் தலைமை தாங்க, மகன் என்கின்ற அந்த உரிமையோடு, வழியனுப்பக்கூடிய இந்த வாய்ப்பை அளித்தமைக்காக இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், எங்களுடைய பாராட்டுகளையும், நன்றி யையும் தெரிவித்துக் கொண்டு இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைக்கின்றேன்.
கருப்புச் சட்டை வீரர்கள், ஆசிரியரின் தலைமையில் கட்டுப்பாட்டோடு இந் தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தார்ச் சட்டியையும், பிரசையும் நம்மு டைய ஆசிரியர் கைகளில் நம்மு டைய அனைவரின் சார்பாக, மிகுந்த பெருமிதத்தோடு வழங்குகின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்
இரா.முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:
Post a Comment