பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டிற்குள் போக்குவரத்துக்கு தயாராகி விடும் : ரயில்வே அதிகாரிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டிற்குள் போக்குவரத்துக்கு தயாராகி விடும் : ரயில்வே அதிகாரிகள் தகவல்

மதுரை, ஜூன் 5  நடப்பு நிதியாண் டிற்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் போக்குவரத்துக்கு தயா ராகி விடுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.   

ராமேஸ்வரம் அருகே பாக்ஜல சந்தி கடலில் பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914இல் கட்டப்பட்டு, ரயில் போக்குவரத்து நடந்து வரு கிறது. சுமார் 2.06 கிமீ தூரமுள்ள இந்த பாலத்தின் மய்யத்தில், கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள் ளது. மீட்டர் கேஜ் ரயில்களுக்காக கட்டப்பட்ட பாம்பன் பாலம்,  கடந்த 2006 - 2007ஆம் நிதியாண் டில் அகலப்பாதை ரயில் போக்கு வரத்திற்கு ஏற்றவாறு மாற்றப் பட்டது. 

100 ஆண்டு பழமையான பாலம் என்பதால், பாம்பன் கடலில் புதிய பாலத்தை கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2019ல் ரூ.279 கோடி நிதி ஒதுக்கப் பட்டது.

இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய பாலம் 18.3 மீட்டர் உயரத்தில் 99 கர்டர்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிப்ட் போல மேலே செல்லும் வகையில்  தூக்குப்பாலம் அமைய உள்ளது. பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக அமைக்கப் பட்டுள்ளன. தற்போது ஒரு ரயில் பாதை அமைக்கும் வகையில் கர்டர்கள் பொருத்தப்பட்டு வரு கின்றன. கடல் மண் பரிசோதனை முடிவுகள் காரணமாக 1.5 மீட்டர் சுற்றளவுள்ள குவியல் முறை தூண்கள் அமைக்கப்படுகிறது.

கர்டர்கள் 18.3 மீட்டர் இரும்புத்தகடுகளால் உருவாக்கப் படுகிறது. இதனை பிரம்மாண்ட டவர்கள் மூலம் செங்குத்தாக உயர்த்தும் வகையில் மெகா லிப்ட் தயாராகி வருகிறது. இதன் நீளம் 72.5 மீட்டர்.  பாம்பன் பாலத் திற்கான கட்டுமான பணிகளை வடிவமைப்பதற்காக சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரமாண்ட  தொழிற்சாலை அமைக்கப்பட்டுள் ளது. இங்கு கட்டுமான பொருட்கள் பன்னாட்டு தரத்துடன் வடிவமைக் கப்பட்டு, பாம்பன் கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, புதிய கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. 

பாம்பன் புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையாக 17 மீட்டர் வரை உயர்த்த முடியும். 

இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேசுவரம் வந்து செல்ல வழிவகை ஏற்படும். பாம்பன் கடலுக்கு நடுவில் 35 மீட்டர் ஆழத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டு, தூண்கள் இடம் பெற்று வருகிறது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த நிதியாண்டிற்குள் பயணிகள் போக்குவரத்திற்கு தயாராகிவிடும். 

இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment