யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரியாக திருமதி கி.மணிமேகலை 3.6.2022 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 75,000 பணியாளர்களுடன் இயங்கும் யூனியன் வங்கியின் தலைமை பொறுப்பேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் பெருமையே!
நமது அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் அவரை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
-கோ.கருணாநிதி
தலைவர், அ.இ.யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம்
அமெரிக்கா - ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 புராதன கடவுளர்
சிலைகள் தமிழ்நாடு வருகை
கும்பகோணம், ஜூன் 5 வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாடு கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று (4.6.2022) கொண்டு வரப்பட்டன.
தமிழ்நாடு கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதனச் சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த 10 உலோக சிலைகள், டில்லியில் உள்ள ஒன்றிய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 1ஆம் தேதி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட 10 சிலைகளையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபுவிடம் ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஒப்படைத்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் ஆகியோர் அந்த சிலைகளை டில்லியில் இருந்து ரயில் மூலமாக சென்னை கொண்டுவந்தனர். பின்னர், அவை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளை வரும் 6ஆம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.
பெங்களூரு பயணிகளுக்கு
உதவிட "ரோபோ"
பெங்களூரு, ஜூன் 5 பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்வதற்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இந்த பயணிகளில் பெரும்பாலானோர் இணைப்பு விமானத்துக்கு செல்லும் வழி, குடிநீர் இருக்கும் இடம், கழிப்பறை உள்ள பகுதி, பொருட்களை வைக்கும் இடம், சோதனை செய்யும் இடம் ஆகியவை பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். ஆங்காங்கே தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் புதிய பயணிகளுக்கு கடும் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் வழிகாட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிலையத்தின் மூத்த அதிகாரி சம்ப்ரீத் சதானன் கூறுகையில், 'பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக பரிசோதனை அடிப்படையில் 10 ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இவைகளுக்கு ‘ஸ்கை' மற்றும் ‘டெமி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ரோபாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பயணிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கும். மேலும் பயணிகளை அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்.
இதற்கு கிராமப்புற பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களது சோதனையில் ரோபோக்கள் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் ரோபோக்களை பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது'' என்றார்.



No comments:
Post a Comment