புதுடில்லி, ஜூலை 12 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பி.எப் ஓய்வூதியத்தை மத்திய தொகுப்பு மூலம் ஒரே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் விதமான நடவடிக்கை எடுக்க 29 மற்றும் 30ஆம் தேதிகளில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
தற்போது 138 மண்டல பிஎப் அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவை மண்டல வாரியாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு பகுதியில் இருப்பவர்களுக்கும் வெவ்வேறு நாட்களில் ஓய்வூதியம் கிடைக்கிறது.
தற்போது 138 மண்டல அலுவலகங்களில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே நாளில் மத்திய தொகுப்பு மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய தொகுப்பின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி ஒரே நபரின் பெயரில் உள்ள பல்வேறு பிஎப் கணக்குகள் ஒன்றிணைக்கப்படும். பணி மாறுதலுக்குரிய படிவங்களை விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
இதேபோல 6 மாதத்துக்கும் குறைவாக ஓய்வூதிய பங்களிப்பை அளித்துள்ள சந்தாதாரர் அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 6 மாதம் முதல் 10 ஆண்டு வரையான காலத்திற்கு சந்தா செலுத்தியவர்களுக்கு மட்டுமே இத்தகைய வசதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் சீனாவை
மிஞ்சும் இந்தியா: அய்.நா. தகவல்
நியூயார்க், ஜூலை 12 உலக மக்கள் தொகை பெருக்கம் 2022 அறிக்கையை அய்க்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 12, 2022 இல் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தியா அடுத்த ஆண்டு மிஞ்சிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கணக்கீட்டின்படி 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியாக இருக்கும். அதற்கடுத்து 2050ஆம் ஆண்டில் 970 கோடியாகவும் உயரும் என கணித்துள்ளது. உலகில் ஆயிரம் கோடி மக்கள் தொகை எண்ணிக்கை 2080ஆம் ஆண்டில் எட்டப்படும் என்றும் இதே நிலை 2100 வரை நீடிக்கும் என்று கணித்துள்ளது.
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளில் இப்பூவுலகில் 800 கோடி மக்கள் நெருங்கவுள்ளனர். இந்த நாளில் பலதரப்பட்ட மக்களும் மேம்பட்ட வாழ்வியல் சூழலை எட்டி நீண்ட ஆயுளுடன் வாழும் நிலையை எட்டியுள்ளனர். சிசு மரணம், குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்று அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா 13,615
புதுடில்லி, ஜூலை 12 இந்தியாவில் நாள்தோறும் கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 615 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 10.7.2022 அன்றைய 18 ஆயிரத்து 257 மற்றும் நேற்றைய பாதிப்பான 16 ஆயிரத்து 678-அய்விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 13 ஆயிரத்து 265 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 199 கோடியே 59 ஆயிரத்து 536 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment