மேட்டூர், அக்.23 ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக நீடிக்கிறது.
கருநாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரி யில் நேற்று (22.10.2022) காலை நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள மெயினருவி, அய்ந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாள்களாக 1,05,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மூன்றாவது நாளான இன்றும் அதேஅளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 83,500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 17.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment