அகமதாபாத்,நவ.8- மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக, தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்த குஜராத் உயர்நீதிமன்றம், விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நூறாண்டு பழைமை யான தொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், பயன் பாட்டுக்கு வந்த 4 நாட்களிலேயே அந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மற்றும் அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து குஜராத் உயர் நீதிமன்றம் மீண்டும் நேற்று (7.11.2022) திறக்கப்பட்டது. அப்போது, குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது.
இந்த நிகழ்வில் நிலைமையின் தீவிரத் தன்மையை கவனத்தில் கொண்டு, விசாரணையை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் பதிலளிக்கும்படி மாநில உள்துறை உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
மேலும், அடுத்த 7 நாட்களுக்கு பின்னர் (நவம்பர் 14), பால விபத்து நிகழ்வு குறித்து அறிக் கையாகத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் தொங்கு பால விபத்தில் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.
பாலியல் வன்முறை வழக்கு:
மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் உச்சநீதிமன்றத்தில் விடுதலையாம்!
புதுடில்லி,நவ.8- இளம்பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப் பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியின் சவாலா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 2012ஆம் ஆண்டு காணாமல் போனார். பின்னர் பல்வேறு துண்டுகளாக வெட்டப் பட்ட அவரது உடல் ஹரியாணாவின் ரோதை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தப் பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ரவிகுமார், ராகுல் மற்றும் வினோத் ஆகிய 3 பேர் மீது, கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 3 பேருக்கும் டில்லி நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றமும் 3பேருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து, தண்டனையை குறைக்கக் கோரி குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் அந்த 3 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று (7.11.2022) தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கூறும்போது, “நீதி கிடைக்கும் என நம்பினோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு மனம் உடைந்துவிட்டோம்” என்றனர்.
No comments:
Post a Comment