பில்லி சூனியத்தால் ஏற்பட்ட பெருங்கேடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

பில்லி சூனியத்தால் ஏற்பட்ட பெருங்கேடு!

ஆந்திரப் பிரதேசத்தில் பில்லி சூனியத்திற்குப் பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் குளிக்காமல் இருந்ததால் கடுமையான உடல் நிலை பாதிக்கப்பட்டு காவல்துறையினரால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில், காக்கிநாடா மாவட்டத்தில், கொய்யூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சூரிபாபு. இவரது மனைவி மற்றும் மகள் இருவரும் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்து உள்ளனர்.

தாய், மகள் இருவருமே கடுமையான மூட நம்பிக்கை வாதிகள், சாலையில் செல்லும் போது சிவப்பு நிறக் கல் இருந்தாலும் உடனே வீட்டிற்கு வந்து தீட்டுக்கான பூஜைகள் செய்வார்கள்; இதனை அவரது கணவரும் கண்டித்துள்ளார். ஆனால் தாய், மகள் இருவருமே கேட்டபாடு இல்லை. 

இந்த நிலையில் கரோனா பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முழு அடைப்பால் இருவரும் நிரந்தரமாக ஓர் அறைக்குள் மட்டுமே இருக்கத்தொடங்கி விட்டனர்; அந்த அறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டனர். நன்றாக இருட்டிய பிறகுதான் இயற்கை உபாதைகளுக்கு வெளியே வந்துள்ளனர். குடும்பத் தலைவர் சூரிபாபு இவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவந்தார். நீண்ட நாள் குளிக்காமல், உடை மாற்றாமல் இருந்ததால் அவர்கள் இருக்கும் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் இவர்களின் உறவினர்களும் அவர்களின் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார்கள்.

இந்நிலையில், அவரது மனைவிக்குத் தோல் நோய் ஏற்பட்டு உடலின் மேல்பகுதியில் கருப்பாக தடிப்புகள் ஏற்பட்டு, வலியால் துடித்துள்ளார். இருப்பினும் மருத்துவ மனைக்குச் செல்லாமல் தனது கணவனே தனக்கு செய்வினை வைத்துவிட்டார் என்று கூறி,  கணவர் சூரிபாபுவையும் வெளியே போக விடாமல் அவர்கள் தடுத்துள்ளனர். இதனால், நிலைமை கைமீறிப் போகிறது என உணர்ந்த அவர் காவல்துறைக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். 

வீடு முழுவதும் துர்நாற்றம் மற்றும் வீடு எங்கும் பூஜைப்பொருட்கள், கெட்டுப்போன அழுகிய பூக்கள், பழங்கள் போன்றவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய், மகள் இருவரையும் வெளியே கொண்டுவர முயற்சித்த போது,  "நீங்களும் எங்கள் மீது பில்லி, சூனியம் வைத்து விடுவீர்கள் - எங்களிடம் கரோனா வைரஸ் உள்ளது, உங்கள் மீது ஏவி விடுவோம்" என்று மிரட்டி உள்ளனர். அதன்பின்பு காவல்துறையினர், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் கூறியும் கேட் காத நிலையில், அவர்களை பெரும் போராட்டத்திற்குப் பின்பு  வெளியே கொண்டு வந்து காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். மருத்துவமனையில் தாய், மகள் இருவரின் உடலை தூய்மைப்படுத்தவே பல மணி நேரம் ஆகிவிட்டது என்று செவிலியர்கள் கூறினர்.

மதம் - அதன் குட்டிகளான பில்லி, சூனியம், பேய் இன்னோரன்னவை அறிவை அழிவுச் சேற்றில் தள்ளி, அவர்களின் வாழ்வையே சிதறடிக் கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!

இதைப்பற்றியெல்லாம் பொது வெளியில் பேசிட, திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதி உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h) பிரிவு என்ன சொல்லுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று சொல்ல வில்லையா?

குடிமகன் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்; அர சாங்கமே செய்ய வேண்டாமா? இதற்கென ஒரு தனித் துறையையே ஏற்படுத்த வேண்டாமா?

எங்கே பார்ப்போம்!

No comments:

Post a Comment