இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 14  அரசு வேலைக்காக இட ஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துப வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

 திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர், இந்து கொண்டா ரெட்டி என்ற பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அளித்து 1982-ஆம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்தார். 1999-ஆம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அவரது ஜாதிச் சான்று மாநில அளவிலான ஆய்வு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணையில், பாலசுந்தரத்தின் சகோ தரரும், சகோதரியும் வேறு ஜாதி பெயரை குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலசுந்தரத்தின் சாதிச்சான்றிதழை ரத்து செய்தது. இதன் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பாலசுந்தரத்தின், ஓய்வு காலப்பலன்களும் நிறுத்தப்பட்டன. 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது ஜாதிச் சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்தது தவறு என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா ஆகியோர், "மனுதாரர் மட்டும் கொண்டா ரெட்டி என்ற பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழை வைத்துள்ளார். அவரது மகள் ரெட்டி (கஞ்சம்) என்று சாதிச்சான்றிதழ் வைத் துள்ளார். சொந்த சகோதரரும் அதே ஜாதி சான்றிதழ்தான் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, சகோதரி வேறு ஒரு சாதிச்சான்றிதழ் வைத்துள்ளார். இதன்மூலம், மனுதாரர் சாதிச்சான்றிதழை ரத்து செய்தது சரிதான்'' என்று தீர்ப்பு அளித்துள்ளனர். 

மேலும் அந்த தீர்ப்பில், "பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீடு கொள்கை பெரு மைக்குரிய ஒன்று. அரசு வேலைக்காக இடஒதுக்கீடு கொள்கையை தவறாகப் பயன்படுத்துபவர்கள்   தண்டிக்கப்பட வேண்டும். போலி ஜாதிச்சான்றை கண்டறிய தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, மனுதாரர் இடஒதுக்கீடு கொள்கையை தவறாகப் பயன்படுத்தியதை நியாயப்படுத்த முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்'' என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.


No comments:

Post a Comment