ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சென்னை, மார்ச் 11- ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் கடந்த பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் 

போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று (10.3.2023) பகல் 12 மணிக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறையில், அவரது முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினராக உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரு, பொன்முடி, முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மேனாள் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப் பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்,மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதைய டுத்து, செய்தியாளர்களிடம் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் கூறியதாவது:

பேரவைத் தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்றது பெருமை தரும் விஷயம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த வெற்றி என்பது முதலமைச்சரின் 20 மாத ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். அதுமட்டுமின்றி அமைச்சர்கள், திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி இந்தவெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வேன்.

ஈரோடு தொகுதி மக்களின் குறைகளை போக்கு வதற்கு நான் முதலிடம் தருவேன். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்றார்.

அவர்தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதிநிதி. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியும், கோபண்ணாவும் பங்கேற்றனர். இதுதவிர கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத தூய தொண்டர் களும் பங்கேற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

சென்னை, மார்ச் 11- புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக் கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார். சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க அறிவுரை வழங்குவதற்கான ஆலோசகர் பணிக்கு அண்மையில் ஒப்பந்தம் விடப் பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொமுச, சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது அமைச்சரிடம், ஜிசிசி முறையில் பேருந்து இயக்கத்தை ரத்து செய்தல், ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையின்போது அளிக்கப்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுதல், அரசாணை 321முதல் 328 வரை ரத்து செய்தல்,போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் களுக்கு அகவிலைப்படி நிலுவை, உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன் வைத்தனர். அப்போது அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:

போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கியின் கருத்துருபடி, ஜிசிசி முறையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து, ஒப்பந்த அடிப்படையில் மாநகரப் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் செயல்படுத் துவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தொழிற் சங்கத்தி னரின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,500 புதிய மின்சாரப் பேருந்துகளில் மகளிருக் கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறை படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குர் அ.அன்பு ஆபிரகாம், தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஅய்டியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment