கலைஞர் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

கலைஞர் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம்!

தந்தை பெரியார்]

கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்திருக்கிற அரிய பொக்கிஷம், மற்ற மாநிலங்களைவிட நமது தமிழ்நாட்டின் பெருமை போற்றப்படுவதற்குக் காரணம் நமது முதலமைச்சரின் தனித்திறமையாகும்.

கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களைவிடப் பகுத்தறிவாளராவார் மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கை யாளர்கள். பகுத்தறிவாளர்கள் என்பதாகும்.

நமது முதல்வர் கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார். இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்த ஒரு மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நடைபெறுகிற ஆட்சி யாவும். நம்பிக்கையாளர் ஆட்சி யாகும். நம் நாட்டில் மட்டும்தான் நம்பிக்கையான பகுத்தறிவாளர் ஆட்சி நடக்கிறது.

தி.மு.க. ஆட்சியின் கொள்கை நமது மக்களுக்கு நன்மை செய்வதேயாகும். இந்தியாவில் இந்த மாநிலம்தான் அமைதியோடு இருக்கிறது. இது தி.மு.கழகத்திற்குப் பெருவெற்றி என்றால் அது கலைஞர் அவர்கள் தனது சாதுரியத் திறமையால் பெற்றதாகும்.

இத்தகைய பகுத்தறிவாளராகவும் ஆட்சிக் கலையில் அரிய ராஜ தந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதன் மூலம் தமிழர்கட்குப் புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது முதல்வர். அவர் பல்லாண்டு வாழ்ந்து, அவர் பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞர் 

மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச் சரவை தமிழ்நாட்டுப் பெருமக்கள் அனைவரது நம்பிக் கைக்கும் பாத்திரமாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து வருவதுடன், இப்படிப்பட்ட ஒரு ஆட்சி மாறினால். இனி நம் தமிழர் சமுதாயத்தின் கதி அதோகதி ஆகிவிடுமென்று துணிந்து சொல்லும் அளவுக்கு மக்கள் நல ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதுடன் மிகவும் பாராட்டத்தக்க வகையிலும் பணியாற்றி வருகிறது.

குறைந்தபட்சம் இன்னும் பத்தாண்டுகளுக்காவது இந்த ஆட்சியை நிலை நிறுத்தி தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறவேண்டும் என்பது என் ஆசை. 

No comments:

Post a Comment