மலத்தைக் கையால் எடுக்கும் ஒரு கொடுமை ஒரு நாட்டில் இருக்குமேயானால், அதை விடக் காட்டுவிலங்காண்டித்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. இதற்காக ஒவ்வொரு குடிமகனும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.
நாடு முழுவதும் 56 ஆயிரம் பேர்கள் கையால் மலத்தை அள்ளும் தொழிலில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டு இருக் கிறார்கள் என்று மத்திய அரசே சொல்லுகிறது - சற்றும் வெட்கமின்றி!
ஆனால் உண்மையான புள்ளி விவரம் வேறாக இருக்கிறது. 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபடுவதாக விஜயவாடாவைச் சேர்ந்த வில்சன் அளித்த பேட்டியில் கூறி யுள்ளார்.
புள்ளி விவரம் எப்படி இருந்தாலும், ஒரே ஒருவர் இந்த வகையான தொழிலில் ஈடுபட்டாலும், அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது - நாகரிக உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதையும் ஒப்புக் கொள்ளவும் முடியாது.
இதில் என்ன கொடுமை என்றால் கையால் மலத்தை அள்ளுவது தடை செய்யப்பட்ட ஒன்று; இது உண்மையானால் 56 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என்று மத்திய அரசு சொல்லுவது எப்படி? இரண்டில் எது உண்மை?
இன்றைக்கு பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது அரசு வெளியிட்ட ஒரு நூல் என்ன கூறுகிறது? அது தெய்வ காரியம் - 'கர்ம யோக்' என்று புகழாரம் சூட்டவில்லையா? அதனைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்கூட நடத்தியதுண்டே!
உ.பி. கும்பமேளாவுக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி துப்புரவுத் தொழிலாளர் அய்ந்து பேர்களை அழைத்து அவர்களின் பாதங்களைக் கழுவிய நாடகம் அரங்கேறியது. இதனைப் பதிவு செய்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்பட்ட துணை நடிகர்கள் நடித்துக் காட்டியதன் அடிப்படையில் உண்மையான நகர சுத்தித் தொழிலாளர்கள் நடந்து கொண்டனர். இதுபோன்ற ஜோடனை எவ்வளவுக் காலத்திற்கு நீடிக்கும்? வேடம் ஒரு நாள் கலையத்தான் செய்யும் என்பதில் அய்யமில்லை.
மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது (UPA) ரூ.570 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலோ வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது எத்தகைய அவலம்!
இதேபோல கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் தொழிலாளர் பற்றிய அவலங்கள்.... அந்தத் தொழிலில் ஈடுபடும் போது மரணம் சம்பவிப்பது சர்வ சாதாரணம். ஆனால் அதைப்பற்றிய புள்ளி விவரங்களை இப்பொழுதெல்லாம் வெளியிடுவதே கிடையாது.
2018ஆம் ஆண்டில் 105 பேர்களும், 2019இல் 11 பேர்களும் பரிதாபகரமாக மரணமடைந்தனர் என்று ஏடுகளில் மட்டும் செய்திகள் வெளி வந்தன.
கல்வி அறிவு மறுக்கப்பட்ட மக்களாக மலம் அள்ளுவதைக் குலத் தொழிலாக செய்யும் நிலை இன்னும் தொடரலாமா? வெளி நாட்டுப் பயணத்தை பிரதமர் பதவிக்கான கடமையாக மாற்றிக் கொண்டுள்ள நமது பிரதமர் அவர்கள் அவர் சென்ற நாடுகளில் எல்லாம் - இதுதொடர்பான தொழில் நுட்பம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாதது ஏன்?
இதுகுறித்தெல்லாம் தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் மக்களவையில் பின்வருமாறு பேசியுள்ளார்.
"மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம், இந்நாட்டில் இன்னமும் நீடித்துக் கொண்டிருப்பதை, இந்த சபை அறியும் என்றே நம்புகிறேன். இந்த சமூகக் கொடுமையில் சிக்கி, உயிரை விடுவோரின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்தும் வருகிறது.
இது ஒரு தேசிய அவமானம். மனிதத் தன்மையற்ற இந்த செயல், இன்னமும் நாடெங்கிலும் உள்ளதும், இந்தப் பணியை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது, இந்த சமூகம் திணித்து, வேடிக்கைப் பார்ப்பதும், முற்றிலும் துயரமானதும்கூட.
சமீபத்தில், சென்னையில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகத்தில்கூட, இந்த அவலத்தால், ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற வணிக வளாகத்தை நடத்தும் பணவசதி கொண்ட பெரும் பணக்காரர்களுக்கு கழிவுகளை அகற்ற, இயந்திரங்கள் வாங்குவதற்கு, செலவு செய்யும் அளவுக்குகூட, இதயம் இல்லையா?
கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்தும் முறையை, முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 100 சதவீத அளவுக்கு, இயந்திரங்கள் வாயிலாகவே, கழிவுகளை அகற்றுவதற்குண்டான வழிமுறைகளும், நடைமுறைகளும், மத்திய அரசிடம் இருக்கிறதா - இல்லையா என்பதை, நான் அறிய விரும்புகிறேன்.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடித்து, இனிமேலும், ஒரு உயிர்பலி கூட நடந்துவிடக்கூடாது. அதற்குரிய வகையில், தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முன்வர வேண்டும்" என்று பாராட்டத்தக்க வகையில் தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் மக்களவையில் பேசியுள்ளார். மத்திய அரசு செயல்படுமா?
No comments:
Post a Comment