மனிதனை மனிதனாகப் பார் என்பது திராவிடம் - தந்தை பெரியார் அவர்களின் கொள்கை.
மனிதனை மனிதனாகப் பார்க்காதே - அவன் மதத்தைப் பார் என்பதுதான் ஆரியம் - பி.ஜே.பி., சங் பரிவார் வகையறாக்கள் என்று படம் பிடித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் பெருந்தொண்டர் காரை சி.மு.சிவம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நேற்று (19.12.2019) காப்பா காலனி அருகில் எழுச்சியுடன் நடைபெற்றது.
அவ்விழாவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சிந்தனைச் சிதறல்கள் வருமாறு:
சுயமரியாதைச் சுடரொளி சி.மு.சிவம்
நூற்றாண்டு விழா காணும் பெரியார் பெருந் தொண்டர் சி.மு.சிவம் அவர்கள் இப்பகுதியில் கட்சி களுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பெருமகனார் ஆவார்.
சிவத்தண்ணன்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உள்பட சிவத்தண்ணன் என்றே அழைக்கப்படக் கூடியவர். எண்ணற்ற இயக்கத் தோழர்களை உருவாக்கியவர்.
மறைந்தும் மறையாமலும் நமது நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டுள்ள அப்துல் சமது அவர்கள் தொடக்கத்தில் திராவிடர் கழகத்தில் இணைந்து இந்தப் பகுதியில் பணியாற்றியவர்.
அவரைத் தொடக்கத்தில் வார்த்து உருவாக் கியவர் சிவத்தண்ணன் ஆவார். அப்துல் சமது அவர்களே பல நேரங்களில் அதனைத் தெரிவித்தும் உள்ளார்.
அந்தக் காலகட்டத்திலேயே 'கதம்பம்' என்ற இதழை அப்துல் சமது அவர்கள் நடத்தியபோது, அதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்தவர் சிவம் அவர்களாவார்.
அறிவார்ந்த முறையில்...
அறிவார்ந்த நிலையில் சிவம் அவர்கள் எத்தகை யவராக இருந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னார் ஆசிரியர்.
இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பழைய நூல்களை மறுபதிப்பு செய்ய தேடும்போது, அது கிடைக்காத நிலையில், நாங்கள் தொடர்பு கொள்வது சி.மு.சிவம் அவர்களைத்தான். அவரிடம் கட்டாயம் அத்தகைய நூல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என் பது வெறும் உணர்ச்சிவயப்பட்டு செயல்பட்ட இயக்க மல்ல - அறிவார்ந்த நிலையில் செப்பனிடப்பட்ட தோழர்களை உருவாக்கிய பாசறை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இயக்கம் அந்தக் காலகட்டத்தில் எப்படி வளர்ந்தது, இயக்கச் சொற்பொழிவாளர்கள், முன் னணியினர் எங்கே தங்குவார்கள் என்பதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து, இந்தக் கால தலைமுறையினர், இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தேவையான தகவலாகும்.
அன்றைய நட்சத்திர ஓட்டல்கள்!
கழகத் தோழர்கள் வீட்டில்தான் தங்குவார்கள்; அதுவும் சிவத்தண்ணன் வீடு இயக்கத் தோழர் களுக்காக எப்பொழுதும் திறந்திருக்கக் கூடியதாகும். அவருடைய வாழ்விணையர் அம்மா அவர்கள் அப்படி உபசரிப்பார்.
அடுத்து கழகத்தினர் தங்கும் இடம், அய்ந்து நட்சத்திர ஓட்டல் எது தெரியுமா? என்ற வினாவை எழுப்பிய கழகத் தலைவர், அது வேறொன்றுமில்லை - முடி திருத்தும் நிலையம்தான் என்று சொன்னபொழுது, கூட்டத்தில் ஒரே சலசலப்பு; கைத்தட்டலும் கைகோத்துக் கொண்டன.
கால மாற்றத்தால் இந்த நிலை இப்பொழுது மாறியிருக்கலாம் என்றாலும், பொதுத் தொண்டாற்ற வருவோர் ஆடம்பரத்தில் லயிக்காமல் எளிமையை நேசிக்கவேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.
முடி திருத்தும் நிலையம் என்று வருகிற பொழுது, அதிலும் நமது திருத்தும் பணிதான் அடங்கியிருக்கிறது. முடியுடைய மன்னன்களை (இன்றைய ஆட்சியா ளர்களை எடுத்துக்கொள்ளலாம்)யும் திருத்தும் பணியில்தானே திராவிடர் கழகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று நயத்துடன் நவின்றார்.
சிவம் அவர்களின் பெயரைச் சுட்டிக்காட்டியபோது செத்தும் சிவமானார் என்பார்கள். அந்த சிவம் வேறு - அது மூடநம்பிக்கையைச் சார்ந்தது.
செத்தும் சிவம் நம்மோடு வாழ்கிறார் என்பது - அவர் கொள்கையால், பொதுத் தொண்டால் நம்மோடு வாழ்கிறார் என்பது பகுத்தறிவு என்று விளக்கமும் தந்தார் 'விடுதலை' ஆசிரியர்.
பெரியார் பெருந்தொண்டர் சிவம் அவர்களின் பெயரை நினைவூட்டும் வகையில்...
இந்த வட்டாரத்தில் சிவம் அவர்களுக்கு அரசு சார்பில் அவரின் நினைவைப் போற்றும் வகையில் முக்கியமாக செய்யவேண்டும் என்று பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழர் தலைவர் அவர்கள் விழாக் குழுவின் தலைவர் மாண்புமிகு கமலக்கண்ணன் அவர்கள் தெரிவித்த கருத்தினைச் சுட்டிக்காட்டினார். முதலமைச்சருடன் கலந்து பேசி, உரிய வகையில் நினைவு போற்றப்படும் என்று அமைச்சர் அவர்கள் அறிவித்ததற்குத் தம் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர்.
சுயமரியாதைச் சுடரொளி சிவம் அவர்களின் சிறப்பு இயல்பினை விவரித்த 'விடுதலை' ஆசிரியர் அவர்கள் இன்று நிலவும் அரசியல், சமூக, பொருளா தார நிலையை விமர்சித்தார்.
(கூட்டத்தின் தொடக்கத்தில் மழையின் சேட்டை; இடையிலும் மழையின் தாக்கம் ஏற்பட்ட காரணத் தால், தமிழர் தலைவரைப் பேசுமாறு வேண்டினர்).
''சும்மா கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்த ஆண்டி''
''சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி'' என்ற பழமொழியை இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிலை யோடு ஒப்பிட்டுக் காட்டினார்.
அன்று ஆண்டி கெடுத்தான்; இன்று 'அரசன்' கெடுக்கிறான் என்று சொன்னபோது, சிரிப்பொலியும், கைதட்டலும் கலந்தன.
ஆட்சியில் இருப்பவர்கள் அரசமைப்புச் சட்டத் தின் அடிப்படையைத் தகர்த்திட முயலக்கூடாது. அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள், சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் ஆவார்கள். அதற்கு மாறாக நடக்கக் கூடியதாக இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய பி.ஜே.பி.யின் தலைமையிலான அரசு நடந்துகொண்டு இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அதற்கான காரணங்களை விரிவாக எடுத்துக்கூறி விளக்கினார்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத்
தகர்க்க முடியுமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்ன கூறுகிறது?
இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் இவற்றை உள்ளடக்கிய குடியரசு என்பதுதானே இதன் அடிப்படை.
இந்த அடிக்கட்டுமானத்தைச் சேதப்படுத்த, தகர்க்க, மாற்றி அமைக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று பல நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு திட்டவட்டமாகவே தீர்ப்புக் கூறியிருக்கிறது.
ஆனால், மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் என்ன நடந்துகொண்டுள்ளது?
சட்ட ஒழுங்குப் பிரச்சினையை
அரசே ஏற்படுத்தலாமா?
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து, அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியில் கல்லெறிந்து சலசலப்பை ஏற்படுத்தியதுபோல செய்துவிட்டார்களே!
எங்குப் பார்த்தாலும் போராட்டங்கள், கலவரங்கள், மாணவர்களும் களத்தில் குதித்துவிட்டார்களே - பொதுமக்களும் வீதிக்கு வந்துவிட்டார்களே - பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொகுதியான வாரணாசியிலே கூடப் போராட்டம் வெடித்துக் கிளம்பிவிட்டதே!
சட்ட ஒழுங்கைக் காப்பாற்றக் கடமைப்பட்டுள்ள அரசே சட்டம் ஒழுங்கைப் பாதிக்கச் செய்யக்கூடிய ஒரு காரியத்தில் ஈடுபடலாமா? வடக்கே கலவரங்கள், தீ வைப்புப் போன்ற சம்பவங்கள் நடந்தாலும், வெடித்தாலும் தமிழ்நாட்டில் அமைதியாக போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன - காரணம், இது பெரியார் பூமி என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆசிரியர்.
இந்தச் சட்டம் என்ன சொல்லுகிறது - செய்கிறது? மூன்று வெளிநாடுகளிலிருந்து வரும் பல மதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை என்கிறது. இதில் முஸ்லிம்கள் சேரமாட்டார்களாம் - என்ன அர்த்தம்?
பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு தஞ்சம் புகுந்தவர்கள் - பல ஆண்டுகாலமாக இந்த நாட்டையே தங்கள் நாடாக வரித்துக் கொண்டு வாழ்ந்துகொண்டு இருக் கிறார்கள். அவர்களை மனிதாபிமான கண்ணோட் டத்தில் பார்க்கவேண்டாமா?
பசித்தவனுக்கு ஜாதியைப் பார்த்தா - மதத்தைப் பார்த்தா உணவு கொடுப்பது?
பாதிக்கப்பட்டிருக்கிறார்களா - இல்லையா? என்று தான் பார்க்கவேண்டுமே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் எந்த மத்ததைச் சேர்ந்தவர்கள் என்று பார்ப்பது மனிதாபிமானமா? சட்டப்படியே கூட அப்படி மதப் பார்வையுடன் மக்களைப் பேதப்படுத்திப் பார்க்க முடியுமா? பிரித்துப் பார்க்க முடியுமா?
பசியோடு வருகிறவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் - அதற்குப் பெயர்தான் மனிதாபிமானம். பசியோடு வருகிற நீ எந்த ஜாதி? எந்த மதம்? என்று கேட்பது எத்தகைய அருவருப்பு? இதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டினார். அந்த நிமிடம் மக்கள் மத்தியிலே மிகப்பெரிய நிசப்தத்தைக் காண முடிந்தது. (நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோது இந்தியர்களாக இருந்தோம். இந்தியாவுக்கு வந்த பிறகு - அந்நியர்களாகக் காட்டப்படுகிறோம் என்று ஒரு இஸ்லாமிய பெரியவர் இவ்விழாவில் குறிப்பிட்டது சிந்திக்கத்தக்கதாகும்).
மனிதனைப் பார் என்பதுதான் நமது கொள்கை. திராவிடக் கொள்கை - பெரியார் கொள்கை. மதத்தைப் பார் என்பதுதான் ஆரியக் கொள்கை - பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கை.
ஒரு காலகட்டம் இருந்தது. Feeding Brahmins என்பது மதத்தில் தர்மத்திற்கு ஓர் அம்சமாக இருந்தது. பார்ப்பனர் களுக்கு உணவளிப்பது தெய்வ சம்பந்தப்பட்டது என்ற எண்ணத்தை உருவாக்கி வைத்திருந்தனர் என்பதையும் நினைவூட்டினார்.
இரண்டாவதாக நாம் கவனிக்கவேண்டியது இந்திய அரசமைப்புச் சட்டம் திட்டவட்டமாக வலியுறுத் திக் கூறி இருப்பது - மதச்சார்பின்மை என்பதுதான் அரசின் கொள்கையாகும்.
பூனைக்குட்டி வெளியில் வந்தது
ஆனால், நரேந்திர மோடி அவர்களின் தலைமை யிலான அரசின் பார்வையும், பிரச்சாரமும், செயல் பாடும் எதை நோக்கி இருக்கிறது? இந்து ராஜ் ஜியத்தை அவர்கள் அமைக்கும் நோக்கம்தானே வெளிப்படையாகத் தெரிகிறது.
இதனை நாமாக வேண்டுமென்றே சொல்லவில்லை. மத்திய அமைச்சரவையில் இருக்கிற நிதின் கட்கரி ஓர் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டாரே!
இந்த நாடு என்பது இந்து நாடு - இதுதான் உண்மை. இதற்கு வேறு பொருள் இல்லை. எனவே இந்து நாடு என்று சொல்லுகிறோம் என்று ஒரு மத்திய அமைச்சரே - கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் வெளிப்படையாகக் கூறியுள்ளாரே - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே! என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், இது அப்பட்டமான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்பதற்கு நேர் எதிரானது அல்லவா என்ற வினாவைத் தொடுத்தார்.
இந்த வினாதான் - ஆம்! இந்த வினாதான் முக்கியம், மிகமிக முக்கியம்.
சட்டப்படியான இந்த நிலையை எடுத்துக்கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், சரித்திர ரீதியான - அடிப்படையான வினா ஒன்றைத் தொடுத் தார்.
'ஹிந்து' என்ற சொல்லுக்கு
ஆதாரம் உண்டா?
'ஹிந்து', 'ஹிந்து' என்று தொட்டதற்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பி.ஜே.பி.யினரும் கூறிக் கொண்டு இருக்கிறார்களே!
அந்த 'ஹிந்து' என்ற சொல்லுக்கு ஆதாரம் உண்டா? வரலாற்றில் கூறப்பட்டுள்ளதா? இந்து சாத்திர நூல்களில் கூறப்பட்டுள்ளதா? மனுதர்மத்தில் இருக் கிறதா? வேதத்தில் கூறப்பட்டுள்ளதா? இதிகாசங் களில் கூறப்பட்டுள்ளதா? புராணங்களில் இடம்பெற்றுள்ளதா? கீதையில் உண்டா? மகாபாரதத்தில் உண்டா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை மக்களின் முன் வைத்தார்!
பிராமண மதம், சனாதன மதம், வேத மதம் என்றுதானே கூறப்பட்டுள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை; காஞ்சிபுரம் மூத்த சங்கராச் சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புக்கொண்டு இருக்கிறாரே - இந்து என்பது வெள்ளைக்காரன் சூட்டிய பெயர் என்று கூறியுள் ளாரே! நாம் சொன்னால் சாதாரணக் குரல், சங்கராச் சாரியார் சொன்னால், 'தெய்வத்தின் குரல்'.
('வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றுகிறது' - சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ''தெய்வத்தின் குரல்'' முதல் பாகம், பக்கம் 269).
திராவிடம் என்ற சொல்லுக்கு
ஆதாரம் உண்டு!
அதேநேரத்தில் திராவிடம் என்ற சொல்லுக்கு பாகவதத்திலும், மனுதர்மத்திலும் ஆதாரம் உண்டே என்று சொன்ன ஆசிரியர் அவர்கள், மனுதர்மம் பத்தாம் அத்தியாயம், 44 ஆவது சுலோகத்தையும் படித்துக் காட்டினார்.
''பெண்டம், ஔண்டாரம், திராவிடம், காம்போசம், யவஞம், சுகம், பாரதம், பால்ஹீகம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் விட்டனர்.
வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் 'ஹிந்து' என்ற சொல் கிடையாது. அதேநேரத்தில் திராவிடம் என்பது மனுதர்மத்திலேயே கூறப்பட்டுள் ளது'' என்பதை எடுத்துக்காட்டினார்.
இஸ்லாம் ஆனது ஏன்?
இஸ்லாமியர்களைப்பற்றி சொன்னபொழுது அவர்கள் இஸ்லாம் ஆனவர்கள் என்று குறிப்பிட்டார். 'கிட்டே நெருங்காதே - நீ தீண்டத்தகாதவன்' என்று சொன்னது நீங்கள் கூறும் பார்ப்பன இந்து மதமே!
அவர்கள் பார்த்தார்கள், தீண்டத்தகாதவர்கள் என்று நம்மை இழிவுபடுத்துபவர்களை வெறுத்து, நம்மைக் கட்டி அணைக்கக் கூடியவர்களோடு, மதத்தோடு அய்க்கியமாகி விட்டார்கள் - அதுதான் இஸ்லாம் ஆனவர்கள் என்பதன் உண்மைப் பொருள் என்று தமிழர் தலைவர் தெரிவித்த கருத்தினைக் கைதட்டி வரவேற்றனர்.
உம்முடைய மதம் என்ன சொல்லுகிறது? கோல் வால்கர் என்ன சொல்லுகிறார்? கிறித்தவர்கள் கிருஷ் ணனைக் கும்பிடவேண்டும்; முஸ்லிம்கள் ராமனை வணங்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், இது என்ன அநாகரிகம், மதவெறித்தனம் - அராஜகம்? என்ற நியாயமான வினாவை மக்கள் முன் வைத்தார்.
(ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசிய பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, உ.பி. முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் கூறியதாவது:
''பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத் தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும், கிறித்துவர்களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும்.
ஸ்ரீராம பிரான், ஸ்ரீ கிருஷ்ணன் பகவான் ஆகி யோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்'' - 'தினமணி', 16.10.2000).
கோல்வால்கர் கூறியது என்ன?
கோல்வால்கர் என்ன சொல்லுகிறார்? குடியுரிமையின்றியும் இவர்கள் வாழத் தயாராக இருக்கவேண்டும் என்று எழுதி இருக்கிறாரே!
இந்தப் பின்னணிகளைப் புரிந்துகொண்டால்தான் இன்றைக்கு முஸ்லிம்களை தனிமைப்படுத்தும், குடி யுரிமையை மறுக்கும் நோக்கத்தைப் புரிந்துகொள் ளலாம் என்பதை எளிமையாக, எவருக்கும் புரியும் வகையில் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர்.
37 சதவிகிதமே வாக்கு பெற்றவர்கள்
இவ்வளவுக்கும் 37 விழுக்காடு வாக்குகளை வாங்கிய பி.ஜே.பி.தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் - இவர்களுக்கு - இவர்களின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வாக்கு அளித்துள்ளார்கள்.
போராட்டம் வெடிக்கக் காரணம் என்ன?
இப்பொழுது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இப்பொழுது ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் - இந்த ஒரே ஒரு பிரச்சினைக்காக மட்டுமல்ல; ஏற்கெனவே மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தொழில்களில் நசிந்துபோன நிலை.
இவை எல்லாம் மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டு இருந்தன. போதும் போதாதற்கு இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் சேர்ந்து குமுறல் தீ - எரிமலையாக வெடித்துக் கிளம்பிவிட்டது என்பது தான் உண்மை என்பதைத் தமிழர் தலைவர் அவர்கள் மிகவும் நேர்த்தியாக நிரல்பட எடுத்துக் கூறினார்.
எந்த அளவுக்கு இந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளது என்றால், வெளிநாட்டுக்காரர்கள், அரசு முறையில் வருகை தர இருந்தவர்கள் எல்லாம் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டார்கள் என்பது ஆரோக்கியமானதுதானா? என்ற வினாவைத் தொடுத்தார் தமிழர் தலைவர்.
பொது மக்களுக்குத் தமிழர் தலைவர் வைத்த வேண்டுகோள்!
இந்த நேரத்தில் பொதுமக்களுக்குத் தமிழர் தலைவர் முத்தாய்ப்பாக எடுத்து வைத்த கருத்தும், வேண்டுகோளும்தான் முக்கியமானவை.
நாம் நம் நாட்டில் மத மாச்சரியங்களின்றி சகோ தரர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதைக் குலைக்கும் பொது எதிரிகள் யார் என்பதைத் தெளி வாக உணரவேண்டும். நமக்கு எதிரான தத்துவம் எது என்பதை உணரவேண்டும்.
பெரும்பாலான மக்களைச் சுட்டெரிக்கும் காவித் தீயை நாம் ஒன்றுபட்டு ஒழிக்கவேண்டும். நம்மிடையே உள்ள சிறுசிறு பிரச்சினைகளைப் புறந்தள்ளவேண்டும்.
மதவெறி மாய்ப்போம்
மனிதநேயம் காப்போம்!
சாமியார்கள் இல்லாத
நாட்டை உருவாக்குவோம்!
மதச்சார்பின்மையை, சமூகநீதியை
வென்றெடுப்போம்!
சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவோம் என்று சுயமரியாதைச் சுடரொளி காரை சிவம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சபதம் ஏற்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மழை மிரட்டியபோதும், இடையில் மழை பொழிந்து இடர்ப்பாட்டை ஏற்படுத்தியபோதும், மக்கள் வெள்ளம் திரண்டு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒரு மணிநேர உரையைக் கண்கொட்டாமல் பார்த்தும், கேட்டும் தெளிவடைந்தனர்.
காரை விழா - ஒரு கொள்கை மழை விழா என்று சொல்லலாம்.
கருத்துரை வழங்கியோர்
காரைக்கால் மண்டல திராவிடர் கழகத் தலைவர் ஜி.கே.நாராயணசாமி வரவேற்புரையாற்ற புதுச்சேரி மாநில கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் விழாக்குழு தலைவர் மாண்புமிகு இரா.கமலக்கண்ணன் (நூற்றாண்டு விழாக்குழு தலைவர்) தலைமையில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜீம், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பாஸ்கரன், காரைக்கால் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் சாயபு மரைக்காயர், சி.பி.அய். (எம்) காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் நிலவழகன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் மதியழகன், மதிமுக மாவட்டச் செயலாளர் அம்பலவாணன், தோழர் வின்சென்ட் ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் அரசு வணங்காமுடி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொறுப்பாளர் அப்துல் நசீர், எஸ்.டி.பி.அய்.கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தமீம், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் ஆனந்தராஜ், காரைக்கால் மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் குமணன், கழகப் பொதுச் செயலாளர்கள்: துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். இரா.பெரியார்செல்வன் தொடக்கவுரையாற்றினார்.
மற்றும் புதுச்சேரி கே.குமார் அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியுடன் பகுத்தறிவு பாடல்களை பாடினார். புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி (விழாக்குழு செயலாளர்) நன்றியுரையாற்றினார்.
தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள்: பொன்.பன்னீர் செல்வம், பதி.ஜெய்சங்கர், ஜெயபாலன், அன்பானந்தம் ஆகியோர் உரையாற்றினார்கள். மற்றும் ஜெயபாலன் அவர் களின் பேத்தி பெரியார் பிஞ்சு இனியமதி உரையாற்றினார்.
பங்கேற்ற மாவட்ட பொறுப்பாளர்கள்
திருவாரூர்: வீ.மோகன், வீர.கோவிந்தராசு, அருண்காந்தி,
நாகை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், ஜெ.புபேஸ்குப்தா, வி.இராஜேந்திரன்
மயிலாடுதுறை: கடவாசல் குணசேகரன், கி.தளபதிராஜ், கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, வசந்தா ஜெகதீசன்
மண்டலத் தலைவர்: ஜெகதீசன், மண்டல செயலாளர்: கிருஷ்ணமூர்த்தி,
புதுச்சேரி: தலைவர் ராஜூ, அறிவழகன், ராஜா
திருத்துறைப்பூண்டி: மாவட்டச் செயலாளர் பொன்முடி, தி.குணசேகரன், சித்தார்த்தன், நாகராசன், செல்வம்,
விடுதலை சந்தா வழங்கியவர்கள்
திருவாரூர் மாவட்டம்
மாவட்டத் தலைவர்: வீ.மோகன், மாவட்டச் செயலாளர்: வீர,கோவிந்தராசு, மாவட்டத் துணைத் தலைவர்: அருண்காந்தி, மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள்
மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்டத் தலைவர்: கடவாசல் குணசேகரன், மாவட்டச் செயலாளர்: தளபதி ராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள்
காரைக்கால் மாவட்டம்
மாவட்டத் தலைவர்: ஜி.கே.நாராயணசாமி, மண்டலச் செயலாளர்: குரு.கிருஷ்ணமூர்த்தி, பொன்.பன்னீர்செல்வம்: பதி.ஜெய்சங்கர், பெரியார் கணபதி, அன்பானந்தம்
திருத்துறைப்பூண்டி மாவட்டம்
மண்டல செயலாளர்: கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர்: ச.பொன்முடி, நகரத் தலைவர்: குணசேகரன், மாவட்ட அமைப்பாளர்: செல்வம், நகரச் செயலாளர்: நாகராஜன்
காரைக்காலைக் கிடுகிடுக்க வைத்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி
பாரதியார் சாலை வழியாக திருநள்ளாறு சாலை வழியாக மாநாட்டு மேடையை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் கோட்டுச்சேரி குழுவினரின் டிரம்ஸ் முழங்க, மகளிரணி தோழியர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர். மகளிரணி தோழர்கள்: குப்பம்மாள், வசந்தி, பேபி, கமலம், அஞ்சம்மாள், லெட்சுமி, பிச்சம்மாள், வசந்தா, ராமு ஆகியோர் தீச்சட்டி எடுத்தனர். இளைஞரணி, மாணவர் கழக தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், கழகத் தோழர்கள் கழகக்கொடி கையில் ஏந்தி கருத்து முழக்கமிட்டு வந்தடைந்தனர்.
இறுதியாக திருமருகல் நாத்திக.பொன்முடி, வாஞ்சூர் நாகப்பன் ஆகியோர் அலகு குத்தி கார் இழுத்து வந்தனர்.
சாலைகளின் இருமருங்கிலும் பொதுமக்கள் திரண்டு நின்று ஊர்வலத்தின் நேர்த்தியையும் - முழக்கங்களையும் கண்டு கேட்டு மகிழ்ந்தனர்.
பாராட்டுப் பெற்ற தோழர்கள்
கமலக்கண்ணன் (குழு தலைவர், காரைக்கால் மண்டலம்)
யாழ்திலீபன், ஆத்தூர் சுரேஷ், பெரியார் கணபதி, மோகன்ராஜ், குணா, நெடுவை பாரதி, தேவ் (எ) தேவராஜ், சுரேஷ் (நாகை இளைஞரணி தலைவர்), நாத்திக.பைசல், செந்தமிழன், வழக்குரைஞர் ராபர்ட்
புதிய தோழர்கள்: லூயிஸ், அழகப்பன்
சி.மு.சிவம் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தேற அயராது உழைத்த மேற்கண்ட தோழர்களுக்கு கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
பாராட்டப்பட்ட பெரியார் பெருந்தொண்டர்கள்
ஜி.கே.நாராயணசாமி, பேட்டை ராஜகோபால் (சட்ட எரிப்பு போராளி), செயபால் (ஆசிரியர்), ந.அன்பானந்தம், பேட்டை ராசரத்தினம், பொற்கோ, முகமது இப்ராகிம்
மேற்கண்ட கருஞ்சட்டை தோழர்களின் பணிகளைப் பாராட்டி பயனாடை அணிவித்து கழகத்துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் விருதுகளை வழங்கினார்.
No comments:
Post a Comment