காலந்தோறும் திராவிடர் இயக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 7, 2020

காலந்தோறும் திராவிடர் இயக்கம்!

ஆசிரியருக்குக் கடிதம்


பேராசிரியர் தோழர் அருணன் சமகால இடதுசாரி சிந்தனையாளர்களில் முக்கியமானவர். எழுத்தாளர், பேச்சாளர், தொடர்ச்சியான தொலைக்காட்சி விவாதங் களில் பங்கேற்று நம் கருத்தியல் எதிரிகளுடன் கருத்துப் போர் புரிபவர்களில் இவரும் ஒருவர். இவர் காலந் தோறும் பிராமணியம் என்கிற பெயரில் மிக விரிவான ஆய்வு நூலினை எழுதியுள்ளார். 


இந்த ஆய்வு பரந்து விரிந்த தத்துவச் சிந்தனை களைக் கொண்டது. இதில் திராவிடர் கழகத்தின் பங் களிப்பினை "சமூக சீர்திருத்தம் - திராவிட இயக்கம்" என்ற தலைப்பில் 35 பக்கங்களுக்குப் பதிவு செய்து உள்ளார். இந்தப் பகுதியை விடுதலை நாளிதழில் 19.04.2020 முதல் 24.04.2020 வரை ஆறு பகுதிகளாக வெளியிடப்பட்டிருந்ததை நான் முழுமையாகப் படித்தேன்.


திராவிடர் கழகம் பற்றியும் ஆசிரியர் வீரமணி அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் மிகச்சிறந்த மதிப்பீடாக இவற்றை நாம் கருதலாம்.


 1960 -இல் ஆசிரியரின் 27-ஆம் அகவையிலேயே இவரை பெரியார் பொதுச்செயலாளராக நியமித்தது, 1962-இல் விடுதலை இதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்கச் செய்தது போன்ற பல செய்திகளை இதில் பதிவு செய்துள்ளார்.


இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியின் கொடூரங்களுக்கு 1976 - இல் மிசாவில் ஆசிரியர் பெற்ற ஓர் ஆண்டுச் சிறை, 1979- இல் தமிழ்நாடு முதலமைச் சராக எம்ஜிஆர் பொறுப்பேற்றிருந்த போது இட ஒதுக்கீட்டுக்கான வருமான வரம்பு (ஆண்டு வருமா னம் ஒன்பதாயிரத்துக்குக் கீழுள்ளோர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு என) ஆணை பிறப்பித்து அறிவித்தார். இதைப் பற்றி குறிப்பிட வந்த தோழர் அருணன்...


"இந்த ஆணையை எதிர்த்துக் களம் கண்டதில் வீரமணிக்கு தனித்த பங்கு உண்டு. ஆணை வெளிவந்த மறுநாள் தொட்டு இவர் விடாப்பிடியாக நடத்திய பரப்புரைகளும் போராட்டங்களும் எண்ணற்றவை. அந்த ஆணையை எம்ஜிஆர் திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி எம்ஜிஆர் பிராயச்சித்தம் செய்து கொண்ட பிறகுதான் வீரமணி ஓய்ந்தார்" என்று குறிப்பிடுகிறார்.


1991-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவால் அறிவிக்கப்பட்ட வேதாகமக் கல்லூரி அறிவிப்பினையும், அதை ஆசிரியர் வீரமணி அவர் கள் எதிர்த்ததையும், அதில் இட ஒதுக்கீடு பின்பற்றப் படும் என்று கூறியபிறகு ஆதரித்த செய்தியையும், மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி 1981 - கும்பகோணம் மாநாடு முதல் 1993 மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு வரை மொத்தம் 42 மாநாடுகள் நடத்திய செய்தியையும், 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க 31 சி பிரிவின் கீழ் தனிச்சட்டம் இயற்ற மூளையாக இருந்தது ஆசிரியர் வீரமணி என்றும் குறிப்பிடுகிறார்.


நீதித்துறையில் பிராமணியம் எப்படி ஊடுருவி இருந்தது என்பதைச் சொல்கிற தோழர் அருணன், நீதித் துறையின் உச்சபட்ச அமைப்பான  உச்சநீதிமன்றத் தில் பிராமணியம் எப்படி சர்வசாதாரணமாய் செல் வாக்குச் செலுத்தி இயங்கியது என்பதையும் குறிப்பிடு கிறார். பிராமணியத் தந்திரம் என்கிற சொல்லையும் பயன்படுத்துகிறார் அருணன்.


 "அம்பேத்கருக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும், தீண்டாமைக்கு ஆதரவாகவும், உடன் கட்டை ஏறுதலுக்கு ஆதரவாகவும் பூரி சங்கராச்சாரி தெரிவித்த கருத்துக்கு எதிராக சங்கராச்சாரியைக் கைது செய்ய வலியுறுத்தியும் 08.11.1988 -இல் பூரி சங்கராச்சாரி கொடும்பாவியைக் கொளுத்தும் போராட்டத்தை அறி வித்து சென்னையில் ஆசிரியர் வீரமணியும் அதில் கலந்து கொண்டு சங்கராச்சாரி கொடும்பாவியைக் கொளுத்தினார்.


இந்தத் துணிச்சல் ஆசிரியர் வீரமணிக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் மட்டுமே இருந்தது. வட மாநிலங்களில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத செயல் என்பது மட்டுமல்ல; தமிழகத்தில் கூட வேறு எந்த இயக்கமும் இத்தகைய தீரத்தைக் காட்டியதாகத் தெரியவில்லை" என்று மிகச் சரியாகவே குறிப்பிடுகிறார் தோழர் அருணன்.


 1995 -இல் நடத்திய 25 ஜாதி ஒழிப்பு மாநாடுகளைப் பற்றி எழுதுகிற அருணன் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத் தொகுப்பாக 1999 ஜூலையில் ஆசிரியர் வெளியிட்ட ஜாதி ஒழிப் பிற்கான பத்து அம்சத் திட்டம், சாதிக்கொரு சுடுகாட் டிற்கு எதிராகப் பொதுச் சுடுகாடு, தாழ்த்தப்பட்டோரின் பொதுப் பிரச்சினைகளோடு அருந்ததியினரின் குறிப் பான பிரச்சினைகளையும் ஆசிரியர் எடுத்துக்காட் டியது குறிப்பிடத்தக்கதாகும்.


பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு, பிள்ளையார் பால் குடிக்கிறது என்று 1995இல் புரளி கிளப்பப்பட்டபோது, அதற்கெதிராக ஆசிரியர் தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்தது, இப்படி புரளி கிளப்பிய சதிகாரர்களைக் கண்டுபிடிக்கச் சொல்லி ரிட் மனு தாக்கல் செய்தது போன்ற செயல்களைப் பாராட் டும் தோழர் அருணன், மூடநம்பிக்கை மோசடிகளை அரசியல் கட்சிகள் பலவும் வாக்குச் சீட்டின் மீது கண்வைத்து கண்டும் காணாமல் இருந்த நிலையில் திராவிடர் கழகம் களத்தில் இறங்கி நேருக்கு நேராகப் போராடியது வரலாற்றில் பதியத் தக்கது என்று குறிப் பிடுவதோடு நிற்காமல் பகுத்தறிவுச் சிந்தனை என்பது பிராமணியச் சிந்தனைக்கு நேர் எதிரானது என்றும் கூறுகிறார்.


 மலேசியத் தமிழர்களிடையே மலிந்துக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை 1998 ஆகஸ்டில் மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் ஆசிரியர் வீரமணி ஆற்றிய மூடநம்பிக்கை எதிர்ப்பு உரையிலிருந்து மேற்கோள் காட்டி, இப்படியெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய் தும் மூடநம்பிக்கைகள் குறையவில்லை என்றாலும் திராவிடர் கழகம் போன்ற போன்ற அமைப்புகளின் பணி வரலாற்று முக்கியத்துவம் உடையது என்கிறார்.


ஆசிரியர் வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூல் பற்றியும், தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பு, பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றில் திராவிடர் கழகத் தின் செயல்பாடுகள் பற்றியும் மிக விரிவாகவே தோழர் அருணன் இதில் பதிவு செய்துள்ளார் மிக விரிவாக.


பெரியாருக்குப் பின்னான திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள், ஆசிரியரின் செயல்பாடுகள் பற்றி மிக விரிவாக, மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் அருணன். மிகச் சில விமர்சனங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளார். அவற்றை நீக்காமல், திருத்தாமல் அப்படியே விடுதலையில் வெளியிட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.


திராவிட இயக்கம் சாராத, பொதுவுடமை இயக் கத்தைச் சேர்ந்த, இந்தத் தலைமுறையின் மிக முக்கிய மான ஆய்வாளரின் கண்ணோட்டத்திலான இந்தப் பதிவானது மிக முக்கியமானதாகும். காலந்தோறும் பிராமணியம் என்ற இந்த விரிவான நூல் தொகுப்புப் பற்றி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மூன்று ஆண்டு களுக்கு முன்பே தொலைக்காட்சியில், கட்டாயம் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று என இதைக் குறிப்பிட்டிருந்தார்.


 விடுதலையில் ஆறு பகுதிகளாக வெளிவந்த இந்த "பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்" என்கிற தலைப்பிலான இந்தச் செய்திகளைத் தொகுத்து சிறு நூலாக வெளியிடுவது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று  கருதுகிறேன்.


தோழமையுடன்


அரசெழிலன்,


திருச்சி.


No comments:

Post a Comment