கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 13, 2020

கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்

திமுக, கம்யூ. கட்சிகள் வலியுறுத்தல்


சென்னை, மே 13- கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என திமுக, கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:


ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பது இன்னும் இறுதிசெய்யப்படாத நிலை யில், 10ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேதியை அறிவிக்க என்ன அவசரம்? மே 31 வரை ரயில் போக்குவரத்தை அனு மதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். அப்படி எனில் வெளியூர்களில் உள்ள மாணவர்கள் ஜூன் 1-ம் தேதி காலை எப்படி தேர்வெழுத வர முடியும்? எனவே, தேர்வு தேதியை தள்ளிவைக்க வேண்டும்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்


மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:


ஊரடங்கு நிலை நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பியதும், ஒரு மாத காலம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, பிறகு தேர்வு நடத்த வேண்டும்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்:


மே இறுதியிலும், ஜூன் தொடக்கத்திலும் கரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது. இதை கவனத்தில் கொண்டு குறைந்த பட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரி.


மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் கு.தியாகராஜன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் உள்ளிட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் 10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment