உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லாது என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அடாவடி யாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மாநிலத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் முடிவு செய்துள்ளது. இது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் வர்க்கம் பல நூற்றாண்டுகளாகப் போராடி- ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகளை, கரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திப் பறித்து விடுவதென, மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான முன்னோட்டம் ஏற்கெனவே துவங்கி விட்டது.
வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ள பாஜக ஆளும் மாநிலங்கள், ஊதியத்தையும் வெட்டிக் குறைத்துள்ளன. இந்நிலையில்தான், சாமியார் ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தொழிலாளர் நலச்சட்டங்களையே 3 ஆண்டுகளுக்கு முடக்கி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையைக் கூட்டி இதற்கான முடிவை எடுத்துள்ள உத்தரப்பிரதேச பாஜக அரசு, உத்தரப்பிரதேசத்தில் 38 தொழிலா ளர் சட்டங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செல்லாது என்று அறிவித்துள்ளது. அடிப்படை ஊதியச் சட்டம் - 1936, தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் - 1932, பாண்ட் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் - 1976 மற்றும் கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் - 1996 ஆகிய 4 சட்டங்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்றும், மாறாக ஒப்பந்தத் தொழிலா ளர்களை பாதுகாக்கும் சட்டங்கள், தொழிற்சாலைப் பாதுகாப்புச் சட்டம் உள்பட மொத்தம் 38 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்படு கின்றன என்று அறிவித்துள்ளது. தொழிற்சங்கச் சட்டம், தொழிலா ளர்கள் போராடும் உரிமைக்கான சட்டம் ஆகியவற்றையும் ஆதித்யநாத் அரசு செல்லாது என்றும் அறிவித்துள்ளது. "எங்கள் மாநிலத்தில் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பெரிய நிறுவனங்கள் மிக அதிகமான அளவில் உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்ய வருவார்கள். பொருளாதார சரிவைச் சரி செய்ய இதுவே இப்போதிருக்கும் நல்ல வழி" என்று முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.
"தொழிலாளர்கள் உங்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த அடிமைகளா?" என்று உ.பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டம் செயல்படாது என்று முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூடியே இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன் மூலம் மொத்தம் 38 தொழிலாளர் சட்டங்களுக்கு அங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 4 சட்டங்கள் மட்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட விலக்கலின் மூலம் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டால் அதற்கான தொகையைக் கேட்க முடியாது, காரணமின்றி வேலையிலிருந்து நீக்கினால் நிர்வாகத் தின்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தொழிலாளர்களுக்கு அவசர கால நிதி உதவியை நிறுவனங்கள் தரத் தேவையில்லை. முக்கியமாக நிர்வாக நிதிச் சீர்கேட்டை காரணமாகக் காட்டி நிறுத்தி வைக்கும் சலுகைகள் குறித்து தொழிற்சங்கங்கள் கேள்வி கேட்க முடியாது. இதுபோன்ற சட்ட விளக்குகள் தொழிலாளர் வர்க்கங்களை பாதிக்கக் கூடிய பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில்தான் இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
"தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் உட னடியாக ரத்து செய்யப்பட வேண்டும். நீங்கள் தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக இல்லை. அவர்களது குடும்பங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் கொடுக்கவில்லை. இப்போது அவர்களின் உரிமைகளை நசுக்க சட்டங்களை உருவாக்குகிறீர்கள். தொழிலாளர்கள் நாட்டை உருவாக்குபவர்கள், உங்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த பிணைக்கைதிகள் அல்ல" என்று கண்டித்துள்ளார்.
கரோனாதான் கொடுங்கரத்தை நீட்டுகிறது என்றால், அதனைக் காரணமாகக் காட்டி தொழிலாளர்களை ஒடுக்குவது என்பது இன்னொரு வகைக் கரோனா என்று கருத வேண்டி யுள்ளது.
சாமியார் ஆதித்யநாத்தை முதலமைச்சராகக் கொண்டு பிஜேபி ஆளும் உ.பி. மாநிலம் - இந்துத்துவா குரலின் சோதனைக் களமாகி வருவதை அதன் தொடர் நடவடிக்கைகள் நிரூபித்துக் கொண்டுள்ளன.
திருமதி பிரியங்கா காந்தி, உ.பி. முதலமைச்சரைப் பார்த்து எழுப்பியுள்ள கேள்வியில் அரசியல் இல்லை - அப்பட்டமான உண்மையின் வெளிப்பாடே!
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் வந்தாலும் வந்தது - தொழிலாளர் உடைமைகளும், சட்டங்களும் நசிந்தன என்பது ஏற்கெனவே உள்ள நிலை. இப்பொழுது போதும் போதாதற்கு திரிசூலத்தில் நான்காவது கத்தியும் முளைத்து விட்டது போலும் - அதன் கோரக் காட்சி தான் உ.பி.யில் பி.ஜே.பி. ஆட்சியில்!
No comments:
Post a Comment