கரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் கூறுகிறார். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு அதையும் தாண்டி கரோனா - கோவிட் 19 வைரசை ஒழிக்க முடியவே முடியாது என்ற அபாய சங்கை ஊதுகிறது.
நாட்டு மக்களை மிகவும் அச்சுறுத்தும் அறிவிப்புகள் இவை என்பதில் அய்யமில்லை. இந்த வைரசை குணப்படுத்த உரிய மருந்தினைக் கண்டுபிடிக்க முடியாதா - தடுப்பு ஊசியை (Vaccine)யும் கண்டுபிடிக்க முடியாதா என்ற கேள்விகள் எழுகின்றன.
முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் மத்தியிலிருந்து வெளிவந்துள்ள இந்த அறிவிப்புகளை அலட்சியப்படுத்தி விட முடியாது என்கிறபோது நாட்டு மக்கள் மத்தியிலே அச்ச உணர்வு பிடித்து உலுக்கவே செய்யும்.
உரிய மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை. அதனோடு வாழ்ந்து தீரவேண்டும் என்றால் மக்கள் வாழ்வின் நடைமுறையே (Style) புரட்டிப் போடப்பட்டு விடுமோ என்ற எண்ணம் தான் எழும் என்பதில் அய்யமில்லை!
நடமாட்டம், பணியாற்றும் இடங்கள், கடைகள் - பயண முறைகள், கல்விக் கூடங்கள், வாகனங்கள் இவை எல்லாவற்றிலுமே கரோனாவை முன்னிறுத்தி ஒவ்வொரு தனி மனிதனும் நடந்து தீர வேண்டும்.
கரோனா பரவிய இந்த காலகட்டத்தில் என்னென்ன விதிமுறை நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ, இவையெல்லாம் இனி நிரந்தரமாகி விடுமோ? ஏன் கட்டாயமாகவே ஆக்கப்பட்டு விடுமோ என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.
ஊடகங்கள், பிரச்சாரங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் என்பவையெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஜனநாயக அரசு முறை என்பதெல்லாம் காகித அளவில்தான் இருக்க முடியும் - நடைமுறையில் அதில் எதேச்சதிகார கெடுவாடை வீச்சே பெரும்பாலும் வாய்ப்பாக இருக்கக்கூடும்.
உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட முடியாது என்றால் ஆதிக்கக்கரர்களும், அதிகாரப் பீடத்தில் இருப்பவர்களும் வகுத்ததே வழி என்ற நிலையல்லவா ஏற்படும்?
ஒரு வைரஸ் ஒரு சமூக அமைப்பையே தலைகீழாகப் புரட்டியடிக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதே!
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுதுதான் இந்த கோவிட் 19 வைரசை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற ஆத்திரம் அலை மோதுகிறது.
இதில் உலக அரசியல் இருக்கிறது - கார்ப்பரேட்டுகளின் கை வரிசை இருக்கிறது - நாட்டு மக்களின் சமூக பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் எல்லாம் இடியாப்பச் சிக்கலாகும் நிலைதான்.
தடுப்பூசியை முதலில் எந்த நாடு கண்டுபிடிக்கும்? அப்படி கண்டுபிடித்தாலும் அதனை வைத்து எப்படி எல்லாம் விளையாடப் போகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது!
இந்த வைரசைச் செயற்கையாக சீனாதான் உருவாக் கியது என்று அமெரிக்கா சொல்லுவதும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகள் துண்டிக்கப்படும் என்று கூறப்படுவதும், சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், அங்கிருந்து வேறு நாடு களுக்குத் தாவும் என்று வரும் தகவல்கள் எல்லாம் திரைப்படக் காட்சிகள் போல, ஒன்றின் பின் ஒன்றாக நாள்தோறும் பல வண்ணங்களில் உருண்டோடிக் கொண்டு இருக்கின்றன.
‘வல்லவன் வகுத்ததே வழி' என்ற நிலையா? சகல சுரண்டலையும் சுக்கு நூறாக்கும் சக்தி வெகு மக்களின் தோளுக்கு உண்டு என்று நிரூபிக்கப்படும் என்பதில் அய்யமில்லை!
கரோனா பற்றி பரப்பப்படும் தகவல்களில்கூட உள்குத்து உண்டோ! நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டியவை இதில் ஏராளம் இருப்பதாகவே தெரிகிறது - எச்சரிக்கையுடன் அணுகுவோம்!
No comments:
Post a Comment