மலேசிய கழகத் தோழர்களுடன் தமிழர் தலைவர் காணொலி உரையாடல் "இரத்தப் பாசத்தைவிட உயர்ந்தது நமது கொள்கைப் பாசம்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 11, 2020

மலேசிய கழகத் தோழர்களுடன் தமிழர் தலைவர் காணொலி உரையாடல் "இரத்தப் பாசத்தைவிட உயர்ந்தது நமது கொள்கைப் பாசம்!"

*கலி. பூங்குன்றன்



ஊரடங்கினாலும் தந்தை பெரியார் அவர்கள் சிந்தனை வயப்பட்டோரின் எண்ணங்கள் அடங்குவதில்லை. அவை எந்த சந்தர்ப்பத்திலும் இலட்சியங்களை அசைபோட்டு ஏறுமுகமாகப் பயணித்துக் கொண்டே இருக்கும்.


ஆம், அப்படித்தான் கடந்த 48 நாட்களாக கழகப் பணிகள் பல வடிவங்களில் பரிணமித்து நாள்தோறும் நாள்தோறும் நயமாக நடைபோட்டுச் செல்லுகின்றன.


‘விடுதலை’யை அச்சிட முடியவில்லையா? அச்சிட்டாலும் வெளியூர்களுக்கு அனுப்பிட வாய்ப்பு இல்லையா? அதனால் என்ன இணையத்தின் மூலம் இலட்சிய ஏட்டை எங்கெங்கும் பரப்புவோம் (திருச்சியிலும், சென்னையிலும் மட்டும் அச்சிடப் பட்டு முடிந்த இடங்களில் அதன் பயணம் நடந்து கொண்டுதான் உள்ளது) என்ற முடிவால், ‘விடுதலை’ சிறைப்படாது சிறகடித்துப் பறந்து கொண்டு தானிருக்கிறது.


அச்சிடப்பட்ட ‘விடுதலையை’ப் படித்த வாசகர்களைக் கடந்து மின்னஞ்சல் விடுதலை மின்சாரப் பாய்ச்சலில் அதன் வாசகர்களை ஆட்கொண்டு விட்டது. இனிவரும் உலகம் அப்படித்தானோ என்ற எண்ண ஓட்டத்தையும் ஏற்படுத்துகிறது மாற்றம் என்பதுதான் மாறாதது.


கழகத் தோழர்களே நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லையா? அதனால் என்ன? தந்தை பெரியார் 1943இல் செய்யாறு திருமணம் ஒன்றில் தொலைநோக்கோடு சொன்னாரே இனிவரும் உலகில் ஒருவருக்கொருவர் முகம்காட்டி பேசும் நிலைவரும்; ‘தந்தி’ மூலம் உருவத்தை அனுப்புவார்கள் என்று கூறினாரே - அதன் இன்றைய பெயர்தான் காணொலி. 77 ஆண்டுகளுக்கு முன் அறிவு ஆசான் சொன்னது இப்பொழுது நம் கண்முன் - ஆம் அந்தக் காணொலி மூலம் கழகத் தோழர்களை கழகத் தலைவர் சந்தித்துக் கொண்டே இருக்கிறார். கலந்துறவாடுகிறார் கருத்துகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார் - 48 நாட்கள் ஓடியதே தெரியவில்லை - உள்நாட்டில் உலவிய இந்தக் காணொலி நேற்று (10.5.2020) மாலை மலேசியாவுக்குத் தாவியது.


மலேசிய திராவிடர் கழகத்தின்  தேசியத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் எல்லாம் காணொலி உரையாடலில் கருத்தூன்றியது கண்கொள்ளாக் காட்சி மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கு.


மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் அண்ணாமலை, ‘இந்த 87 ஆம் வயதிலும் கழகத் தலைவர் டாஸ்மாக்கை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்திக் களத்தில் நின்று முழக்கமிட்டதை வியந்து பாராட்டினார். தலைவரிடம் வயதின் அடையாளம் தெரியவில்லை. உற்சாகப் பெருக்குடன் முழக்க மிட்டதைப் பார்த்து மகிழ்ந்தேன் - நாங்கள் நலமுடன் இருக்கிறோம். நூல்களைப் படிக்கிறோம் என்று பரவசத்துடன் பேசினார்.


மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் ஆலோசகர் ரெ.சு. முத்தையா, 'காணொலி பயனுள்ளது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன் ஆசிரியர் இங்கு வந்தபோது தோழர்களிடையே கலந்து உறவாடி நல்லதோர் இணைப்பு ஏற்படுத்தியதற்கு நல்லதோர் பலன் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டுத் தாய்க் கழகத்தின் ஆதரவு தேவை' என்று ஆனந்தப்பள்ளு பாடினார்.


பேராக் மாநில பெரியார் பாசறையின் அமைப் பாளர் கெ.வாசு அவர்கள் உரையாற்றும்போது, 1958இல் ஆசிரியர் அவர்களுக்கு தந்தை பெரியார் தலைமையில் திருச்சி பெரியார் மாளிகையில் திருமணம் நடைபெற்றபோது வழங்கப்பட்ட ‘வாழ்க்கைத் துணைநலம்‘ நூலின் அருமையைப் பற்றிச் சிலாகித்தார் (அந்த நூலைத் தொகுத்தவரே அன்றைய மணமகன் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான். வைதீகர்கள் தாம்பூலத்தை வழங்கும் பழைமையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தில் அறிவு நூலை வழங்கும் வழக்கத்தை அத்திருமணம் தொடங்கி வைத்தது).


'மாநிலத்திற்கு அய்ந்து இளைஞர்களைத் தேர்வு செய்து 20 பேர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த இருந்த நேரத்தில் இந்தக் கரோனா குறுக்கே வந்து விட்டது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் இரா. கெங்கையா.


'1988இல் ஆசிரியர் தலைமையில் திருமணம் செய்து கொண்டேன். என் மகன் திருமணமும் சுயமரியாதை முறையில் நடக்க இருக்கிறது' என்று உற்சாகத்தோடு மலரும் நினைவுகளை மனக்கண்முன் நிறுத்திய பேராக் மாநில பெரியார் பாசறையின் செயலாளர் தோழர் த.சி. அழகன்.கூ


'வீட்டுத் தோட்டத்தில் என் நேரம் போகிறது., நூல்கள் என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. குடும் பத்தோடு நெருக்கத்தை கரோனா ஏற்படுத்தியது' என்றார் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் நாக.பஞ்சு


தோட்டத் தொழிலாளிகள் மத்தியில் பள்ளிகளுக் கெல்லாம், பெரியார் நூலகங்களுக்கு, தந்தை பெரியார் நூல்களை வாரி வழங்குவதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டொழுகும் கோவிந்தசாமி அவர்கள். அடுத்த 12 பள்ளிகளுக்கு 1000 நூல்கள் வழங்கும் திட்டம் என்னிடம் உள்ளது என்பதை உற்சாகத்தோடு கூறினார். கோவிந்தசாமி அவர்கள் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பணிகளிலும் தம் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.


மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தேசிய தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமி அவர்களின் மகன் அன்பழகன் அவர்கள் இந்தக் கால கட்டத்தில் அரிய நூல்களைப் படிக்கும்  வாய்ப்பு ஏற்பட்டது என்பதுடன் படித்து வரும் நூல்களின் பட்டியலையும் தெரிவித்தார். சமூகவலைதளங்கள் வழியே பெரியார் கருத்துகளைப் பரப்பும் பணியில் அன்றாடம் ஈடுபட்டு இருப்பதாக அவர் சொன்ன தகவல் சிறப்பானது - அனைவராலும் பின்பற்றத் தக்கதாகும். (அவரின் அன்னையாரும் மறைந்த கே.ஆர்.ஆர். அவர்களின்  வாழ்விணையான அம்மா அவர்கள் காணொலியில் வந்து கழகத் தலைவரின் நலம் விசாரித்தார். கழகத் தலைவரும் கனிவுடன் அவர்களின் நலனை விசாரித்தார்).


தோழர் அன்பரசனும் பங்கு கொண்டு மகிழ்ந் தனர்.


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி அவர்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தொழில் நுட்ப ரீதியில் காணொலி மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டார்.


தமிழர் தலைவரின் காணொலி உரை


மலேசியத் தோழர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் இந்த நாள் கூட திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய நாள்களே என்று தொடங்கினார். 1921ஆம் ஆண்டு இதேநாளில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் உரிமையை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது. இங்கிலாந்தில்கூட பெண்களுக்கு அந்தக் கால கட்டத்தில் இந்த உரிமை கிடையாது என்பதையும் பொருத்தமாக நினைவூட்டினார். ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதே நாளில்தான் (1930).


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி 28 கோயில்கள் முன் போராட்டம் நடத்தப்பட்டதும் இதே நாளில்தான் (2000) என்று வரலாற்று தகவல்களை இந்தக் காணொலியில் இணைத்தார்.


மலேசியத் தோழர்களை ஏழு மாதங்களுக்குப் பிறகு முகம் பார்த்துப் பேசும் வாய்ப்புக்காக தனது மட்டிலா மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.


நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை 1921இல் அளிக்கப்பட்டதை நினைவுப்படுத்திப் பேசினார் கழகத் தலைவர். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஜாதி ஒழிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பாலின வேறுபாடு ஒழிப்புமாகும். மக்கள் தொகையில் சரிபகுதி உள்ள பெண்கள் எல்லா வகைகளிலும் ஆண்களுக்குச் சம தகுதியும், உரிமையும் உள்ளவர்களே. பெண்களின் அடிமைத்தன்மை என்பது ஆண்களையும் பாதிக்கக் கூடியதாகும். ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் கல்வி நான்கு பேருக்கு கொடுப்பதற்குச் சமம் என்று தந்தை பெரியார் கூறியதை நினைவூட்டினார்.


இடர்ப்பாடான இந்தக் கரோனா காலத்தைக் குறிப்பிட்ட கழகத் தலைவர் - எத்தனை இடர் வந்தாலும் அறிவியல் நோக்கத்தோடு நாம் கடந்து செல்ல வேண்டும். தன்னம்பிக்கைக் கொண்ட நமக்கு இவை எல்லாம் எளிதானதே என்றும் எடுத்துக் கூறினார்.


சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு.. சிக்கன வாழ்வே சிறந்தது - கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாதது. இந்த நேரத்தில் பிறருக்கு இயன்ற அளவில் உதவ வேண்டும். முதலில் உதவி தேவைப்படும் நமது தோழர்களுக்கு உதவிட வேண்டும்.


‘குடிஅரசு’ இதழில் தலையங்கத்துக்கும் மேலே சிறிது காலம் ஒரு பாடல் வரும்.


Ôஅனைத்துயிர் ஒன்றென்றெண்ணி


அரும்பசி எவர்க்கும் ஆற்றி Õ


என்ற பாடலில் பசியாற்றுவதை முக்கிய தொண் டாகக் கருத வேண்டும்.


ஏழு மாதங்களுக்கு முன் இங்கு வந்து தோழர் களோடு கலந்துறவாடினோம்.


கழகம் ஒரு குடும்பம் என்ற உணர்வோடு ஒற்றுமையாகப் பணியாற்றிட வேண்டும். அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவுக்கு இங்குவர வேண்டும் என்று எண்ணியிருந்தேன். எதிர்பாராத இந்தச் சூழல் தடையாகி விட்டது.


இரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசம்தான் நமக்கு முக்கியமானது. உடல் நலனைப் பேணுவதில் கருத்துச் செலுத்துங்கள்.


கரோனா தொடர்பாக அறிவியல் என்ன சொல் லுகிறதோ அதனைக் கண்டிப்பாகக் கடைபிடியுங்கள். Ôசமூக இடைவெளிÕ என்ற சொல்லைப் பயன்படுத்தா தீர்கள். Ôதனி நபர் இடைவெளிÕ என்பதே சரியானது.


‘விடுதலை’யைப் பரப்புங்கள் மின்னஞ்சலில் நமது நூல்கள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மலேசியாவுக்கும், தமிழ்நாடு திராவிடர் கழகத் துக்கும் நீண்ட வரலாறு உண்டு. 1929ஆம் ஆண்டு முதன்முதலில் தந்தை பெரியார் மலேசியா வந்தார். அன்னை நாகம்மையார் தோழர்கள் எஸ். இராமநாதன் அ.பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், மாயவரம் சி. நடராஜன் முதலிய தோழர்களும் உடன் வந்திருந்தனர்.


மிகப்பெரிய எதிர்ப்பினை வைதீகர்கள் காட்டினர். ஆனால், மாபெரும் ஆதரவு என்னும் மக்கள் வெள்ளத்தின்முன் எதிர்ப்பாளர்கள் இருந்த இடம் தெரியாமல் சென்றனர்.


மலேசியாவில் ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்த சங்க மாநாட்டினை தந்தை பெரியார் திறந்து வைத்தார் (23.12.1929) ஒரு மாதத்துக்கு மேல் சுற்றுப் பயணம் செய்தார். பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், தைப்பிங், மூவார், ஜோகூர்பார், பத்துபகார் மலாக்கா, தம்பின், கோலப்பிறை கோலாகுடி தஞ்சமாலிம், சுங்கை குரூட், செலுக்கான்சா கம்மார், கோலாகஞ்சார் சுங்க பட்டாணி முதலிய இடங்களில் எல்லாம் சொற்பொழிவாற்றினார் தந்தை பெரியார் (இந்த மலேசிய சுற்றுப் பயணத்தில் கப்பலில் சென்றபோதுதான் தாடி வைக்கும் எண்ணம் தந்தை பெரியாருக்கு ஏற்பட்டது).


இரண்டாம் முறையாக 1954 டிசம்பரில் மலேசி யாவுக்கு தந்தை பெரியார் சுற்றுப்பயணம் மேற் கொண்டதுண்டு. அந்தப் பயணத்தில் அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் சென்றிருந்தார்.


பொதுவாக மலேசியாவில் தந்தை பெரியாரின் சுற்றுப்பயணமும், பிரச்சாரமும் ‘குடிஅரசு’ இதழ் பரவுதலும் அம்மக்களிடையே மாபெரும் மாறுதல் ஏற்பட்டது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு.


மலேசிய திராவிடர் கழகத்துக்கும், தமிழ்நாடு திராவிடர் கழகத்துக்கும் தொன்றுதொட்டு இருந்து வரும் இழையோடும் தொடர்ச்சியின் ஓர் அங்கமாகவே நேற்றைய காணொலி அமைந்திருந்தது. பொன் வாசகம் நன்றியுடன் மறக்க முடியாத காணொலி காட்சியாக கலைந்தது.


கூட்டத்தில் கலந்து கொண்டோர் மானமிகுவாளர்கள்


ச.த. அண்ணாமலை (பினாங்கு மாநிலம்), தேசியத் தலைவர், மலேசிய திராவிடர் கழகம்


பொன். பொன்வாசகம், (செலாங்கூர் மாநிலம்) தேசிய பொதுச்செயலாளர், மலேசிய திராவிடர் கழகம்


இரா. கெங்கையா, (பேராக் மாநிலம்) மாநிலத் தலைவர், மலேசிய திராவிடர் கழகம்


ரெ.சு. முத்தையா, (செலாங்கூர் மாநிலம்) ஆலோசகர், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம்


நாக.பஞ்சு, (செலாங்கூர் மாநிலம்), தலைவர், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம்


ச. அன்பரசன், (மலாக்கா மாநிலம்) பொதுச் செயலாளர், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம்


கெ.வாசு, (தாபா,பேராக் மாநிலம்) அமைப்பாளர் பேராக் மாநில பெரியார் பாசறை


த.சி. அழகன் (கோலாலம்பூர்) செயலாளர் பேராக் மாநில பெரியார் பாசறை


பொ. கோவிந்தசாமி, (செலாங்கூர் மாநிலம்) தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய கிளை


இரா. அன்பழகன், (செலாங்கூர் மாநிலம்) செய லாளர், பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய கிளை


பங்கேற்றோர் உரையாற்றியதன் சுருக்கம்


* மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் இன்றைய மூத்த பொறுப்பாளர்கள் இன்னும் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு பெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளைக் கடைப்பிடித்து வருவதற்கு அடிப்படைக் காரணம் - 1975இல் தமிழகத்தில் நடைபெற்ற பெரியாரில் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றதால்தான். அன்று ஏற்பட்ட கொள்கைப் பிடிப்பு வலுப்பட்டு இன்றும் தொடர்கிறது.


* பெரியார் இயக்கம் வெளியிட்ட புத்த கங்களை ஊரடங்கு காலத்தில் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்து வருகிறது.


* விடுதலை ஏடு மின் இதழ் வருவதை ஊரடங்கு காலத்தில் உடனுக்குடன் படிப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற தோழர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு கட்செவி (Whatsapp) மூலம் அனுப்பி வருவதால் விடுதலை வாசகர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.


* பெரியாரியத் தோழர்கள், கூட்டமைப் பாகச் செயல்பட்டு தமிழர்கள் பங்கேற்கும் வகையில் பல கொள்கைப் பூர்வக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். புரட்சிக் கவிஞர் பெரு விழா நடத்திட ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் புரட்சிக் கவிஞர் விழா நிச்சயம் நடத்தப்படும்.


* 1988இல் தமிழர் தலைவர் மலேசியாவிற்கு வந்திருந்த பொழுது அவரது தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட பொறுப்பாளர் இந்த ஆண்டில் அவரது மகனுக்கு சுயமரியாதைத் திருமணம் நடத்திட உள்ளதாகக் கூறி அழைப்பிதழைக் காணொலிக் கூட்டத்தில் காட்டினார். ஊரடங்கு காலத்தில் பெரிய அளவில் கொள்கைப் பிரச்சார விழாவாக மாற்றிட முடியவில்லை என பொறுப்பாளர் ஆதங்கப்பட்ட வேளையில், ‘ஊரடங்கு காலத் தில் குறைந்த தோழர்கள் பங்கேற்புடன் சிக்கனமாக திருமணம் நடத்திடுவதும் தந்தை பெரியார் அறிவுறுத்திய அணுகுமுறைதான் என தமிழர் தலைவர் அறிவுரை வழங்கினார்.


* விரைவில் மலேசியவாழ் கொள்கை உணர் வாளர்களை கொள்கை உறுதியாளர் ஆக்க பயிற்சி அளித்திட தமிழகத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட வேண்டும்.


* தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக் கடைகளை திறந்திடும் போக்கினைக் கண்டித்து தமிழர் தலைவர் இதர தோழர்களுடன் எதிர்ப்புக் குரல் எழுப்பி அமைதி வழிப் போராட்டம் நடத்திய காணொலியினைக் கண்டு பெரும் உற்சாகம் பெற்றோம். 87 வயது நிலையிலும் களம் இறங்கிப் போராடும் தமிழர் தலைவரின் போராட்ட உணர்வு எங்களுக்கு எழுச்சி ஊட் டியது.


* பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலே சியக் கிளைக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


உரையாற்றிய அனைவரும் காணொலி வழி தமிழர் தலைவருடன் நேரடியாகப் பேசிடும் ஒரு அரிய வாய்ப்பு கரோனா ஊரடங்குக் காலத்தில் கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சியும், நன்றி யும் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment