மிகச்சிறந்த வணிகக் கல்வி நிலையங்களில்கூட இனி ஜி.எம்.ஏ.டி. (G-MAT) தேர்ச்சி கட்டாயமல்ல - விண்ணப்பக் கட்டணமும் சில கல்வி நிலையங்களில் ரத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

மிகச்சிறந்த வணிகக் கல்வி நிலையங்களில்கூட இனி ஜி.எம்.ஏ.டி. (G-MAT) தேர்ச்சி கட்டாயமல்ல - விண்ணப்பக் கட்டணமும் சில கல்வி நிலையங்களில் ரத்து!

எம்.பி.ஏ. படிப்பு அயல்நாடுகளில் இனி மிக எளிது


சேர்க்கைக்கான தர நிர்ணய விதிமுறைகளை பல தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் நீக்கிவிட்டன. உல கையே புரட்டிப் போட்டுள்ள கரோனா தொற்று நோயால் அவை தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டு மாணவர் சமுதாயத்திற்கு அரும்பெரும் நன்மை செய்துள்ளன. இதைப் பற்றி மே 19 ஆம் நாள் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா' நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு செய்திக் குறிப்பின் சுருக்கம் பின் வருமாறு:


அக்கரைக் கல்வியாளர்களின் அக்கறை!


தகுதியும் திறமையும் கொண்ட நம் நாட்டு மாணவர் களுக்கு உயர் கல்விக்காக அயல்நாடுகள் சென்று வணிகப் படிப்புகளில் தேர்ச்சி பெற அளவற்ற ஆர்வம் உண்டு. ஆனால் பல தகுதித் தேர்வுகள் முட்டுக்கட்டைகளாகவே இருந்து வந்துள்ளன. அவை இப்போது நீங்கி விட்டன. எம்.பி.ஏ. பட்டம் அங்கே நம் நாட்டு மாணவர்களும் எளிதில் பெற முடியும்.


உதாரணமாக - ஜி.எம்.ஏ.டி. எனப்படும் தேர்வு (Graduate Management Admission Test), ஜி.ஆர்.இ. என்ற தேர்வு Graduate Record Examination),  ஜி.எம்.இ. (Graduate Marine Engineering), என்ற தேர்வு - இவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் தான் வணிகப் படிப்புகளில் சேர முடியும் என்ற நிலை பல அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இருந்து வந்தது.


கரோனா தொற்று நோயால் உலகில் ஏற்பட்டுள்ள பல சலசலப்புகளின் விளைவாக, மாணவர்களின் நலன் கருதி அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்கள் பழைய கட்டுப்பாடுகளை யெல்லாம் விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளன. மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இனி இல்லை.


உயர் கல்விக்கான கதவுகள் முழுதாகத் திறக்கப்பட்டு மாணவர்கள் முதுநிலை வணிகப் படிப்புகளுக்கு வர வேற்கப்படுகின்றனர். விண்ணப்பக் கட்டணம் கூட பல அயல்நாட்டு கல்வி நிறுவனங்களில் இனி இல்லை!


கட்டுப்பாடுகளை அறவே நீக்கியுள்ள கல்வி நிறு வனங்கள் - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் எல்.பி.எஸ். எனப்படும் London Business School உட்பட பல நிலையங்கள்! வார்டன், கெலாக், ராஸ் மற்றும் பாரிசில் உள்ள எச்.இ.சி, சுவிட்சர்லாந்தின் அய்.எம்.டி., பெர்லினில் இயங்கும் இ.எஸ்.எம்.டி., வடக்கு கரோலினாவில் அமைந்துள்ள சார்லட் பெல்க் வணிக நிர்வாகக் கல்வி நிலையம் - இப்படியே பட்டியல் நீள்கிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் வலை தளங்கள் மூலம் முழு விவரங்கள் பெறலாம்.


மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி!


ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகமும், லண்டன் வணிகப் படிப்பு நிறுவனமும் ‘‘இப்போது சேருங்கள். நிவிகிஜி-க்கான மதிப்பெண்களை தேவைப்பட்டால் பின்னால் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அதற்கு அவசரமோ கட்டாயமோ இல்லை" என்று சற்று ஆறுதலாக அறிவித்துள்ளன. மற்ற கல்வி நிறுவனங்கள் - ‘‘ஜி.எம்.ஏ.டி., ஜி.ஆர்.இ., ஜி.எம்.இ., எதுவுமே கட்டாய மில்லை. ஓடி வாருங்கள்!'' என்று எல்லோரையும் உற்சாகப் படுத்தும் வகையில் அறிவித்துள்ளன. விண்ணப்பக் கட்டணங்களையும் முழுதாகத் தள்ளுபடி செய்து விட்டன. உலகின் மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு எல்லா நாட்டு மாணவர்களுக்கும் - குறிப்பாக பல லட்சியக் கனவுகளோடு போராடி வரும் இந்திய நாட்டு மாணவர்களுக்கும் - மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி என்றால் மிகையாகாது!


2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2021 ஜனவரி வரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பருவத் தேர்வுக் காலம். இந்த ஆண்டு மாணவர் சேர்க் கைக்கு தேவைப்படும் கட்டாயத் தகுதி ஜி.எம்.ஏ.டி.யில் தேர்ச்சி என்று தான் அவை இதுவரை தீர்மானித்திருந்தன. அதை இப்போது அவை விலக்கிவிட்டன. தகுதியும் திறமையுள்ள நல்ல மாணவர்களுக்கு இடமளிக்க மேலும் என்னென்ன சலுகைகள் அறிவிக்கலாம் என்றும் அவை ஆலோசித்து வருகின்றனவாம்.


இனியாவது உருவாகுமா இந்தியாவில்?


கோவிட்-19 என்று அழைக்கப்படும் தொற்று நோய் பாதிப்புகளால் பல பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ள தாலும், உலகம் முழுவதிலுமே கற்றலும், கற்பித்தலும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாலும் அயலநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் தகுதி நிர்ணய அளவு கோல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டன. எத்தனை கரோனா வந்தாலும் 'நீட்'டை ஒழிக்க மாட்டோம் என்ற அடம் பிடிக்கும் நம் நாட்டு கொடுமைக்காரர்கள் இனியா வது மாறுவார்களா? தடைக்கற்களாக உள்ள பல்வேறு தகுதித் தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் நம் நாட்டில் சற்றேனும் குறையுமா? எளிமையான வழிகளில் எல் லோருக்கும் கல்வி என்ற நிலை இனியாவது உருவாகுமா இந்தியாவில்? இன்று இவையே நம் கேள்விகள்.


2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சேர்க்கை களுக்காகவும் இப்போதே சலுகைகளைத் திட்டமிட ஆரம்பித்துள்ளன அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் என்பது வியப்பூட்டும் செய்தியாக உள்ளது.


நான்காவது சுற்றில் விண்ணப்பங்களைப் பெறு வதற்கான கால அவகாசத்தையும் பல கல்வி நிறுவனங்கள் நீட்டிப்பு செய்துவிட்டன. சில நிலையங்கள் புதிதாக அய்ந்தாவது சுற்றையும் நடத்த முடிவு செய்துள்ளன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல வழிகளில் அவை திட்டமிட்டு வருகின்றன.


பல கல்வி நிறுவனங்கள் உறுதியாக உள்ளன!


வகுப்புகளில் ஓர் இடம் கூட நிரம்பாமல் இருக்கக் கூடாது என்பதில் பல கல்வி நிறுவனங்கள் மேல்நாடுகளில் உறுதியாக உள்ளன. சுழற்சி முறையில் விண்ணப்பங் களைப் பெற்றுக் கொள்ளவும் பல கல்வி மய்யங்கள் முன்வந்துள்ளன. விண்ணப்பங்கள் இலவசம் என்ற அறிவிப்பு வேறு.


‘‘கரோனா கலவரத்தால் பல பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அதிரடிச் சலுகைகள். திறமைமிக்க மாணவர்களை எப்படியாவது கவர்ந்து இழுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள் ளனர்'' என்கிறார் கல்வியாளர், ஆலோசகர் கரண் குப்தா என்ற அறிஞர்.


தளர்வுகளும், சலுகைகளும் வரவேற்கப்படவேண்டியவை...


வணிகப் படிப்புகளுக்கான பல கல்வி நிறுவனங்கள் எம்.பி.ஏ. எனப்படும் முதுநிலை வணிக நிர்வாக வகுப் பிற்கு விண்ணப்பிக்க நீண்ட அவகாசம் அளித்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால் உலக நாடுகளில் உள்ள வணிக நிர்வாகக் கல்வி மய்யங்களில் இந்த அளவுக்கு தாராள மயமான சேர்க்கைகள் இதுவரை நடந்திருக்கவே முடி யாது. அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளும், சலுகைகளும் வரவேற்கப்பட வேண்டிவை.


முழுதாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கூட எம்.பி.ஏ. வகுப்பிற்காக ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறது ஜான் ஹாப்கின்ஸ் கல்வி நிறுவனம். மாணவர்கள் நேரில் வரும் போது அவர்களோடு கலந்துரையாடி, விட்டுப்போன தகவல்களை நிரப்பிக் கொள்வோம் என்கிறார்கள் அவர்கள். மூன்றாவது சுற்றுக்கான சலுகை இது. புகழ்பெற்ற அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும் இது. வரும் ஜூன் ஒன்றாம் நாள் நான்காவது சுற்று முடிவடையப்போகும் நிலையில் ஜூலை 15ஆம் நாள் அய்ந்தாவது சுற்று என்று மேலும் கால அவகாசம் தந்துள்ளார்கள்.


பல சிறப்பு சலுகைகள் அளிக்க முடிவு


எம்.பி.ஏ. சேர்க்கைக்கு பணிபுரிந்த முன் அனுபவம் கட்டாயம் என்ற விதியை நீக்கி விட்டது கலிஃபோர் னியாவில் உள்ள பெர்கலி கல்வி நிலையம். ஜி.எம்.ஏ.டி. - ஜி.ஆர்.இ. போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை எனறு இவர்கள் அறிவித்து விட்டார்கள். தங்கள் பல்கலைக்கழகத்தின் மூலம் பி.பி.ஏ. பட்டப்படிப்பை எவரேனும் முடித்திருந்தால் அவர்களுக்கு எம்.பி.ஏ. வகுப்பில் சேர பல சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வந்துள்ளனர்.


கரோனா கலவரம் அல்லது வேறு பிரச்சினைகளால் இந்த கல்வியாண்டில் சேர முடியாமல் போனவர்கள் அடுத்த கல்வியாண்டில் சேர முயலுவார்கள் என்பதால் எம்.பி.ஏ. வகுப்புகளில் சேர இடங்களை அதிகரிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறதாம் அமெரிக்காவின் தலைசிறந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.


ஏற்கெனவே ஜி.எம்.ஏ.டி. அல்லது ஜி.எம்.இ., தேர்வு களில் தேர்ச்சி பெற்றுவிட்ட மாணவர்களுக்கு மேலும் சில சலுகைகள் அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது பி.எஸ்.எஸ். வணிக நிர்வாகயியல் கல்லூரி.


‘‘எம்.பி.ஏ. வகுப்பில் சேர்க்கைப் பெற இப்படிப்பட்ட பல சலுகைகள் அளித்துள்ளன வேறு பல பல்கலைக் கழகங்கள்'' என்கிறார் கல்வியாளரும் ஆலோசகருமான பெண்மணி பிரதீபா. அதுவும் ஒரு நீண்ட பட்டியல்.


உயர்கல்வியைப் பொதுமைப்படுத்த பல உலக நாடுகள் முன்வந்துள்ளன. ஏட்டுக் கல்வி மட்டுமின்றி விளையாட்டுகள், கலைகள் போன்ற பல்வேறு அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிவப்புக் கம்பள விரிப்பு காத்திருக்கிறது பல நாடுகளில்.


உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் அறிவித்துள்ள கட்டுப்பாட்டுத் தளர்வுகள்


நம்மை உற்சாகப்படுத்துகின்றன


‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?'' என்பது பழங்காலத்துக் கேள்வி "கல்விக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?" என்பது நம் நாட்டில் இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி. 'நீட்' கொடுமையை நாம்  அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்கப் போராடி வரும் இந்தத் தருணத்தில், உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் அறிவித்துள்ள கட்டுப்பாட்டுத் தளர்வுகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன.


நன்றி: ‘த டைம்ஸ் ஆஃப் இண்டியா', 19.5.2020


No comments:

Post a Comment