மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனும் நிலையில்
மாணவர்களுக்கு அவசர அவசரமாகத் தேர்வு நடத்துவதா?
மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனும் நிலையில், மாணவர் களுக்கு அவசர அவசரமாகத் தேர்வு நடத்துவதா? இன்னும் ஒரு கோயம் பேட்டை உருவாக்கவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் பல இடங்களில் கிளர்ச்சிகள் - கைதுகள்!
கரோனா - தொற்றின் தீவிரம் நாளும் அதி கரித்து வருவது கொடுமையான வேதனை.
நான்காம் கட்ட ஊரடங்கு சென்னை தொடங்கி தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் உள்ள துன்பச் சூழ்நிலை.
கரோனா தொற்று காரணமாக முடங்கியது ஏழை, எளிய, தொழிலாளர்களின் வாழ்வா தாரம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையோ - மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகி, தாங்காமல் வெடித்துச் சிதறும் ஸ்டவ் போல, அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு (மாநிலத்திற்கு), அனுப்பி வைக்கப்பட போதிய திருப்திகரமான விரைவு ஏற்பாடுகள் தென்பட வில்லையே என்பதால், கிளர்ச்சி பற்பல இடங்களில் - தமிழ்நாட்டில் கைதுகளும்கூட நேற்று நடந்துள்ள விரும்பத்தகா நிலை!
இப்போதைய அவசரப் பணி;
தேர்வு நடத்துவது அல்ல!
‘‘கரோனோ பரவலைப் பொறுத்தவரை இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்த சூழலும், இப்போது இருக்கும் சூழலும் முற்றிலும் வேறா னவை. மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், கோவிட்-19 நோயாளிகளுக்கான கண்காணிப்பு மய்யங்களாக்கப்பட்ட மூன்று கல்லூரிகள் நோயாளிகளால் நிறைந்துவிட்டன. வரும் வாரங்களில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக் கையும் அதிகரிக்கும் சாத்தியம் அதிகம். இதையெல்லாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்று திட்டமிடுவதுதான் இப்போதைய அவசரப் பணி; தேர்வு நடத்துவது அல்ல.
பொதுத் தேர்வை ரத்து செய்வதே சிறந்த முடிவு அல்லது தள்ளி வைக்கலாம்
‘‘கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களான நாங்கள், அடிக் கடி கைகளைக் கழுவுகிறோம். கண்களுக்கு காகிள் (Goggles), உடல் முழுவதும் மறைக்கும் தனி நபர் பாதுகாப்பு ஆடை (PPE) ஆகிய வற்றை அணிந்துகொண்டுதான் மருத்துவம் பார்க்கிறோம். மிகத் தீவிரமான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுகி றோம். அவற்றையெல்லாம் மீறியும் பல மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் களுக்கும் கரோனா தொற்று ஏற்படுகிறது.
மருத்துவர்களுக்கே இந்நிலை என்றால், விவரம் தெரியாத மாணவர்கள் என்ன செய்வார்கள்?
கோயம்பேடு சந்தை போல் இன்னொரு தொற்று நோய் மய்யம் உருவாகும் ஆபத்து!
தேர்வு மய்யத்துக்கு வருபவர்களில் யாருக்குத் தொற்று நோய் இருக்கிறது என்பது தெரியவே தெரியாது.
கோயம்பேடு சந்தை போல் இன்னொரு தொற்று நோய் மய்யம் (Cluster) உருவாகும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுத் தேர்வை ரத்து செய்வதே சிறந்த முடிவு அல்லது தள்ளி வைக்கலாம்.''
- இப்படி மருத்துவர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர். அதுமட்டுமா?
பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு, ‘தம் பிள்ளைகளைத் தேர்வு எழுத அனுப்பவேண்டுமென்ற தேவையற்ற மன இறுக்கத்திற்கு' ஆளாகி, ஏற்கெனவே அவர்களை அச்சுறுத்தும் கரோனா மேலும் இந்த அழுத்தத்தின்மூலம், அவர்களது நோய் எதிர்ப்பு ஆற்றலை வெகுவாகக் குறைக்கும் நிலையும் யதார்த்தம்.
தேவையற்ற வறட்டுப் பிடிவாதம் காட்டாமல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வைத் தள்ளிப் போடுங்கள்!
கண்காணிக்கும் ஆசிரியர்கள் பல ஊர் களிலிருந்து வந்து சேரவேண்டும். சரியான போக்குவரத்து இல்லாத நிலையில், தமிழக அரசு சொடுக்கும் அதிகார சாட்டைக்குப் பயந்து எப்படி அவர்கள் கடமையாற்றிட முடியும்?
மிகுந்த மனிதாபிமானத்தோடு இளம் பிஞ்சு களின் எதிர்கால உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு குறிப்பாக முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இதில் தேவையற்ற வறட்டுப் பிடிவாதம் காட்டாமல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வைத் தள்ளிப் போடுங்கள்!
மறுபரிசீலனை அவசரம்;
அவசியம் தேவை
அல்லது மகாராட்டிரத்தில் கொடுத்தது போல், All Pass என்று இவ்வாண்டு அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற்றதாக ஒரு ஆணை அல்லது அவசரச் சட்டம் மூலம் அறிவியுங்கள். ஒன்றும் இதனால் குடி மூழ்கிப் போய்விடாது. கல்வித் தரம் ஒன்றும் எங்கும் ஓடிப் போய்விடாது! மறுபரிசீலனை அவசரம்; அவசியம் தேவை.
எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொதுநலச் சிந்தனையாளர்கள் அத்துணைப் பேரின் கருத்துகளையும் அலட்சியம் செய்துவிட்டு, அமைச்சர்களுக்கு ‘ஆமாம் சாமி'கள் போடும் ஒரு சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டு தலை ஏற்றால், மிகப்பெரிய பழிக்கும், விளைவு களுக்கும் பொறுப்பையும் ஏற்கவேண்டிய தேவையற்ற நிலை தமிழக முதல்வர், கல்வியமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கும் ஏற்படும்.
தேர்வுகள் முக்கியமல்ல;
மாணவர்களின் உயிர்களே முக்கியம்
எனவே, வீண் பிடிவாதம் வேண்டாம்; தேர்வுகள் முக்கியமல்ல; மாணவர்களின் உயிர்களே முக்கியம். சுவர் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சித்திரம் வரை யலாம். அதற்கு அவசரம் காட்டவேண்டிய தில்லை.
கடைசிச் செய்தி
இந்த அறிக்கை அச்சிடுவதற்குமுன் கடைசியாக வெளிவந்த தகவல்: பத்தாம் வகுப்புத் தேர்வு ஜூன் முதல் தேதிக்குப் பதிலாக, ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்புத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அறிவித்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து விடுபடும் சூழல் எப்பொழுது உருவாகும் - இயல்பு நிலை எப்பொழுது திரும்பும் என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையில், இந்தத் தேதி அறிவிப்புகள் தேவையில்லாதவை. மாணவர்கள், பெற்றோர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம்! இதில் வீண் பிடிவாதம் காட்டுவது புத்திசாலித்தனமானது அல்ல என்பதே நமது உறுதியான கருத்தாகும்.
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.5.2020
No comments:
Post a Comment