கரோனா பாதிப்பு நேரத்திலும் பார்ப்பன ஜாதி ஆணவத்துடன் நடந்துகொண்ட அய்ந்து பார்ப் பனர்கள்குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பைவிட, ஜார்க்கண்டில் பார்ப்பன ஜாதி ஆணவம் வெறிபிடித்து ஆடுகிறது. பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஹசாரி பாக் மாவட்டத்தில் இப்படி ஓர் ஆரியத்தின் நிர்வாண ஆட்டம்!
கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் பார்ப்பனர்கள் அய்ந்து பேர்; தனிமைப்படுத்தப்பட்ட வர்களுடன் அவர்களும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஹசாரிபாக்கின் பிஷ்னுகார் என்ற தொகுதியில் ஒரு அரசு பள்ளியில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
பல மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாமிலுள்ளவர்களுக்கு சிகிச்சையுடன் உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய்த்தொற்றின் காரணமாக தனி மைப்படுத்தப்பட்டுள்ள பார்ப்பனர்கள் அய்ந்துபேரும் தங்களுக்குத் தரும் உணவை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். உணவு சமைத்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், ஜாதி ஆணவத் துடன் உணவைப் பெற்றுக்கொள்ள அவர்கள் மறுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்படும் மய்யத்தில் நடந்த இந்த ஜாதித் திமிர் உள்ளூர் கிராமத் தலைவருக்கு தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அதிகாரிகளால் அந்த 5 பேருக்காக மட்டும், தனியாக சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தகவலை ஹசாரிபாக் துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இதைப் பற்றி அவர் சொல்லும்போது, இந்தப் பார்ப்பனர்கள் இப்படி ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கக் கூடாது என்று தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். வைரஸ் பரவல் அதிகரித்து வரும்நிலையில், ஜாதி, மத, உணர்வுக்கு அப்பால் நடந்து மற்றவர்களுக்கும் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்களுக்கு சமைப்பதற்காகவே தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த இந்த பார்வார் இட்கா பள்ளியில் புலம் பெயர்ந்தவர்களைத் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கரோனா நோய்ப் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சியர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சமைத்துவிட்ட காரணத்தினாலேயே பலர் சாப்பிட மறுப்பதும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் குடிக்கத் தண்ணீர் தந்தால் அதனையும் ஏற்க மறுக்கும் அவலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்திலும் பார்ப் பனர் அல்லாத ஒரு பெண் சமைத்த உணவை காலால் உதைத்து அந்தப் பெண்ணையும் அவதூறாக பேசிய நிகழ்வு காட்சிகள் வெளியாகியுள்ளது.
கரோனா வந்தாலும் சரி, கொத்து கொத்தாக செத்தாலும் சரி, இந்த பார்ப்பனர்களிடையே இப்படி ஒரு ஜாதி ஆணவம்! பார்ப்பனர்கள் எவ்வளவோ திருந்தி விட்டனர்; இன்னும் அவர்களை ஏன் கரித்துக் கொட்டுகிறீர்கள் என்று கருப்புச் சட்டைக்காரர்களைப் பார்த்து குற்றம் சுமத்தும் 'மேதாவி'கள் இந்தப் பிரத்தியட்சமான நிலைகளைக் கண்டபிறகாவது உண்மையை உணர்வார்களாக!
மேலே குறிப்பிட்ட செயலுக்காக சம்பந்தப்பட்ட அய்ந்து பார்ப்பனர்களும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டாமா? மாறாக அவர்கள் சொன்னபடி எல்லாம் நடந்து கொண்ட அதிகாரிகளை என்ன சொல்ல!
No comments:
Post a Comment