(கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் அறிவியலும், அறிவியல் மனப்பான்மையும் சீரழிந்து போனதைக் காண நேர்ந்ததே மாபெரும் அவலமாகும்)
ஷா ஆலம் கான்
மற்றவர்கள் தங்களைக் கண்டு வெறுக்கின்றனர் என்றும், தங்களுக்கு தீங்கு செய்ய விரும்புகின்றனர் என்றும் கற்பனை செய்து கொள்ளும் மனநோய் கோவிட்-19 தொற்று நோயைச் சுற்றி கட்டமைக்கப்பட்டதாகும். கல்வி அறிவின்மை, அறிவியல் மற்றும் அறிவியல் மனப்பான்மை சீரழிவு ஆகியவை அந்த நோயை கொழுந்து விட்டு எரியச் செய் வதற்கான எரி பொருளாக அமைந்தன.
கோவிட்-19 தொற்று
போராடச் செய்துள்ளது
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு பிளேக் தொற்று நோய் ஏற்பட்டதால், அவரது குடும்பங்கள் தனிமைப் படுத்தப் படுவதற்கு வலியுறுத்தப்பட்டது பற்றி எழுத்தாளர் டேனியல் டெஃபோ 1722 ஆம் ஆண்டுக்குப் பிறகு அய்ரோப் பாவை சீரழித்த, எலிகளின் மூலம் தோன்றி ஈக்களின் மூலம் பரவி கோடிக் கணக்கான மக்களைக் கொன்று குவித்த பிளேக் பற்றி 'பிளேக் நோய் பற்றிய ஆண்டு பத்திரிகை' என்ற தனது புதினத் தில் எழுதியுள்ளார். பொதுவாக அத்த கைய வீடுகளில் இருந்துதான், ஏழை மக்களின் பரிதாபமான துயரம் மிகுந்த அவலக் குரலும், அழுகைக் குரலும் கேட்டது என்றும், தங்களது நெருங்கிய உறவினர்களின் நிலையைக் கண்டு தங்களுக்கே சாவு வந்துவிட்டது போன்ற பேரச்சம் கொண்டவர்களாகவும், சிறைப் பட்டவர்களைப் போலவும் அவர்கள் உணர்ந்தனர் என்றும் அவர் எழுதியிருக் கிறார். 1988 ஆம் ஆண்டு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு தான் அளித்த பேட்டி ஒன்றில் நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் கார்சியா மார்குவஸ் என்பவர் கூறியுள்ளதாவது: எப்போது வரும் என் பதை ஊகித்து எதிர்பார்க்க முடியாதபடி மக்களை பெருவியப்பில் ஆழ்த்தும் வல் லமை கொண்ட ஆபத்துதான் பிளேக் நோய். மக்களின் எதிர்காலம் பற்றிய விதியை முடிவு செய்ய இயன்றதாகவே அது பார்க்கப்பட்டது. ஏறக்குறைய நானூறு ஆண்டு வரலாறும், விதியைப் பற்றிய மார்குவசின் விளக்கமும், உலகை துயரக் கடலில் ஆழ்த்துவதற்காகவே திரும்பி வந்து, கோவிட்-19 தொற்று நோயுடன் நம்மை போராடச் செய்துள் ளது.
பகுத்தறிவு சிந்தனையின்மை ஆபத்தானது
இந்த கோவிட்-19 தொற்று நோயும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நட வடிக்கைகளும் தவிர்க்க முடியாதபடி கடுமையான மன அழுத்தத்திற்கு வழி வகுத்திருக்கிறது என்பதை பல அறிவி யல் கட்டுரைகள் காட்டுகின்றன. இந்த நோயும் - அதற்கான தீர்வு என்ற அழைக்கப்படும் ஊரடங்கு சட்டம் என்னும் மனிதர்கள் தனிமைப்படுத்தப் படும் சட்டமும் இந்த தொற்று நோய் பரவி வரும் காலத்தில் கடுமையான மன அழுத்தத்தை மக்களிடையே எற்படுத்தி யுள்ளன. இந்த மன அழுத்தம் பல்வேறு விதமான செயல்பாடுகளாக மாற்றம் பெறக்கூடும். நம்முடையது போன்ற ஆழ்ந்த பாரம்பரியம் கொண்ட மத சமூகங்களில், போதிய கல்வி அறிவு இன்மையும், அறிவியல் மனப்பான்மை இன்மையும், பகுத்தறிவு சிந்தனை இன் மையும் இத்தகைய செயல்பாடுகளுடன் சேர்ந்து மிகமிக ஆபத்து நிறைந்த விளைவுகளை உருவாக்கிவிடும்.
மகாராட்டிர மாநில கல்யாண் நகரில், கோவிட் -19 நோயாளி என்று சந்தேகப் பட்டு ஏப்ரல் 24 அன்று 34 வயதுடைய ஒருவர் தாக்கப்பட்டு இறந்து போயுள் ளார். இதே போல கோவிட்-19 நோயாளி என்று சந்தேகப்பட்ட மற்றொரு 25 வயது ஆண் உத்தரப் பிரதேச மாநில அலிகார் நகரில் தாக்கப்பட்டு இறந்தார். பேரழிவுக்குப் புகழ் பெற்ற இத்தகைய கோவிட்-19 தொற்று நோய்க் கிருமியை பரப்புபவர்கள் என்ற சந் தேகம் எழுந்த மக்கள் மீது இது போன்ற வன்முறை நிகழ்ச்சிகள் நடந்தேறியது பற்றி நாடெங்கிலும் உள்ள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. பொது மக்கள் மட்டுமன்றி, மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற சுகாதாரப் பணியா ளர்களும் தாக்குதல்களுக்கு ஆளாகி யுள்ளனர். எனது மருத்துவ மனையில் பணியாற்றி வரும் இளம் மருத்துவர் களை, தங்களது வாடகை வீடுகளைக் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் தாக்கீதுகள் அளித்துள்ளனர். அவர்களது வீடுகளுக்கு அருகில் குடியிருப்போர் மருத்துவர்கள் தங்கள் அருகில் வசிப் பதை விரும்பவில்லை. ஒட்டு மொத்தத் தில், ஒரு மிகக் கொடூரமான ஒட்டுவா ரொட்டி நோய்தான் இந்த கோவிட்-19 என்ற மிருகம் என்ற இழிந்த பெயரை சம்பாதித்துக் கொள்ள இந்த நோய்க்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை.
கட்டுக்கதைகள் உருவாக்கம்
கோவிட் -19 நோய் பற்றி இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவப் பெயருக்கும், இழி வுக்கும் காரணம் இல்லாமல் போக வில்லை. எல்லா கருத்துகளுக்கும், நிகழ் வுகளுக்கும் கட்டுக் கதைகள் உருவாக் கிக் கூறும் ஆர்வம் பொதுவாகவே நம்மிடம் உள்ளது. தவறாக உருவாக்கி வளர்த்துக் கொள்ளப்பட்ட பாராம்பரிய மான கதைகள் தவிர, நோய்களைப் பற்றி கூறப்படும் கதைகள் ஏராளமாக நம் நாட்டில் உள்ளன. மன நோய்கள், எபி லப்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய் கள், உடல் குறைபாடுகள், எலும்புருக்கி நோய், தோல் வியாதிகள், தொழுநோய் களால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு மற்ற மக்கள் அருவருத்து, வெறுப்பது டன், அவர்களை தங்கள் சமூகத்தில் சமமானவர்களாக மதிப்பதும் இல்லை.
திட்டமிடுதலின்றி பிறபிக்கப்பட்ட ஊரடங்கு
ஆனாலும், அதிக அளவிலான மக்களைத் தொற்றிக் கொள்ள இயன்ற கோவிட்-19 நோய் பற்றி கூறப்படும் கதைகள் பல வழிகளிலும் ஈடு இணை யற்றவையாகும். பேரச்சத்திலிருந்து தோன்றுவதாலேயே அது ஈடு இணை யற்றதாக இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக கோவிட்-19 நோயைச் சுற்றி உருவாக்கப்பட்ட பேரச்சமளிக்கும் கதை கள் விஷயங்களை மேலும் மோசமா னவையாக ஆக்கின. சரியான முன் யோசனையோ, திட்டமிடுதலோ இன்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமும், புலம் பெயர்ந்த ஏழைப் பணியாளர்கள் கால்நடையாக நூற்றுக் கணக்கான மைல்கள் நடந்து செல்ல நேர்ந்த அவல மும் மக்களின் அச்ச உணர்வை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தன. புலம் பெயர்ந்த இந்த ஏழைத் தொழிலாளர்கள் நகர மக்களான நம் மீது வெறுப்பு கொண்டிருப்பதிலும், புறநகர் பகுதிகள் எங்கே சென்றாலும் அந்த நோய் பற்றிய அச்சம் கொண்டவர்களாகவே இருந்த னர் என்பதிலும் வியப்பேதும் இருக்க முடியாது. ஊரடங்கு சட்டம் மிகவும் தேவையானது என்று வாதாடினாலும், ஜனநாயக நடைமுறைக்கு எதிராக பிறப் பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், வெகு விரைவாகவும் எளிதாகவும் பரவக் கூடியது இந்தநோய் என்னும், நோய்த் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொள்வது மரணத்துக்கு வழி வகுக்கும் என்னும் கண்ணோட்டத்தை மேலும் பலப்படுத்தவே செய்தது. உலகி லேயே மிகவும் கடுமையாகப் பின்பற் றப்பட்ட ஊரடங்கு சட்டம் நமது சட்டம் என்று நம் அரசு பெருமையுடன் மார் தட்டிக் கொண்டதும் இழப்புக் கேடே யாகும். ஊரடங்கு சட்டத்தை நிலை நாட் டுவதில் காவல் துறையினர் அப்பாவி பொது மக்களுக்கு இழைத்த கொடுமைக ளைப் பற்றிய தொலைக் காட்சி நிகழ்ச்சி கள், மிகவும் வெறுக்கவும், அஞ்சவும் தக்கது இந்த நோய் என்ற கண்ணோட் டத்தினை மேலும் பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றின. ஊரடங்கு சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தி யதே, பொது மக்களின் மனங்களில் பெரும் அச்சத்தினை உருவாக்கி, அதன் மூலம் அந்த நோயைப் பற்றிய கூடுத லான கட்டுக் கதைகள் சேர்ப்பதில் ஊர டங்கு சட்டம் பெரும் பங்காற்றியது.
ஆரோக்கிய விதிகளைப் பின்பற்ற கற்பிக்கவேண்டும்
ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத் தப்பட்ட தொடக்க காலத்தில், நோய்த் தொற்று இருந்தவர்களுடன் அவர்களது குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டு வசிப்பதற்காக வீடுகளில் அடையாளக் குறியிடும் நடைமுறை ஒன்றை அரசு டில்லியில் தொடங்கியது. இது இன்னமும் பல அய்ரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு பழைய வழக்கமாகும். ஆனால் நம் நாட் டைப் போன்ற ஒரு நாட்டில் இவ்வாறு அடையாளக் குறியீடு இடுவது கோவிட்-19 நோய் பற்றிய அச்சத்தை மிக அழுத்தமாக மக்கள் மனங்களில் பதியச் செய்தது. நோயாளிகளைத் தனிமைப் படுத்துவதற்கான மேலும் சிறப்பான, ரகசியமான நடைமுறைகள் உள்ளன. இந்த வியாதியைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றிருக் கும் மாநிலம் என்று புகழ் பெற்றுள்ள கேரள மாநிலத்தில், நோய்த் தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகப்பட்டு தனி மைப்படுத்தப்படுபவர்களின் குடும்பங்க ளுக்கு தொலைபேசி மூலம் கலந்தாலோ சனை வழங்குவதற்கான ஆஷா பணி யாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது போன்ற ஒரு கொடிய தொற்று நோய் பரவி வரும் நேரத்தில், பொதுமக்களுக்கு அந்த நோயைப் பற்றிய செய்திகளை தெரிவிக்கச் செய்யும் பணியின் முக்கியத் துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்த முயற்சியில் மிகவும் பயன் நிறைந்த ஒரு வழி, கிராம சுகா தாரப் பணியாளர்களை வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கலந்தாலோசனை வழங்குவதாகும். இந்த வழியில் கேரள அரசு நடைமுறைப்படுத்திய தொடர்புச் சங்கிலியை உடை என்றழைக்கப்படும் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுவது மிகவும் பயன் நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட மனிதர்கள் தங்களையும், தங்கள் உடல் களையும் எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது , அடிக்கடி கை கழுவுவது போன்ற எளிய ஆரோக்கிய விதிகளைப் பின்பற்றுவது ஆகியவை பற்றிய முக்கியத்துவத்தை பொது மக்களுக்குக் கற்பிக்கச் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அறிவியல் மனப்பான்மை...
அறிவியல் அல்லது காரண காரியத் துடன் கூடிய பழக்க வழக்கங்கள் கடந்த பல காலமாக உருவாகி மக்களால் பின் பற்றப்பட்டு வருபவையாகும். கலாச் சாரத்திலிருந்து பெறப்பட்டு தனித் தனி மனிதர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து போனவை அவை. கடந்த சில ஆண்டுகளில் நம் நாட்டில் அறிவியல் மற்றும் அறிவியல் மனப்பான்மை தொடர்ந்து ஒரு சீரழிவை சந்தித்து வந் திருக்கிறது என்பது மாபெரும் இழப்புக் கேடாகும். மிக உயர்ந்த நிலைகளில் உள்ள நிர்வாக அதிகாரிகளின் அறிவிய லுக்கு சற்றும் பொருந்தாத பரப்புரைகள் இத்தகைய சீரழிவை விரைவு படுத்தியது என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய சோகமான செய்தியாகும். இத்தகைய அறிவியல் மனப்பான்மை சீரழிவினைப் பற்றி அறிவியல் சமூகம் கருத்து தெரி விக்காமல் வாய் மூடி மவுனமாக இருப் பது அதை விட மிகுந்த வருத்தத்தை அளிக்கும் செய்தியாகும். கோவிட்-19 நோய் நாட்டை பாதித்துள்ள நிலையில், சற்றும் அறிவியல் சிந்தனை இல்லாமல் புனைந்து பரப்பப்பட்ட கட்டுக் கதை களுக்கு அளவே இல்லாமல் போயிற்று. கங்கை நீரைக் கொண்டும், பசு மூத்திரம் கொண்டும் கோவிட்-19 நோயைக் குணப்படுத்த முடியும் என்ற பரப்புரை யும், அதன் தொடர்பான கோவிட் -19 நோய் பற்றிய தவறான தகவல்களும், வதந்திகளும், ஊகங்களும் சமூக ஊட கங்களிலும் இதர ஊடகங்களிலும் தங்கு தடையின்றி பரப்பப்பட்டன.
இந்த அளவுக்கு பரவியுள்ள கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப் படுத்துவது என்று வரும்போது, எச்சரிக் கையுடன் இருப்பதற்கும், அச்சம் கொண்டிருப்பதற்கும் இடையே ஒரு சிறிய வேறுபாடுதான் உள்ளது. தன் னைத் தானே பாதுகாத்துக் கொள்வதற்கு எச்சரிக்கை உதவுகிறது. ஆனால், அச் சமோ நம்மையும், நம்மைச் சுற்றியிருப் பவர்களையும் பற்றிக் கொண்டு நம்மை செயலற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. இந்தக் கொடிய நோயின் பிடிகளிலி ருந்தும், ஊரடங்கு சட்டத்தின் விளைவு களில் இருந்தும் விடுபட்டு நாம் வெளியே வரவேண்டுமானால், இந்த நோயின் கொடுந்தன்மை பற்றி நம்மிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை நாம் போக்கிக் கொள்ள வேண்டும். நமது மனங்களை அறிவியல் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டுமே அன்றி, பொய்யான தகவல் களும், அச்சங்களும் ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது. நோய்கள் என் பவை நாகரிக காலம் தொட்டு இருக்கும் பழமையானவை என்பதை நாம் நினை வில் கொள்ள வேண்டும். இத்தகைய கொடுமையான நோய்களை எதிர்த்துப் போரிடுவதற்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம், அறிவியல் மற்றும் பகுத்தறிவில் நமக்கு உள்ள சற்றும் தடுமாற்றம் அற்ற நம்பிக்கையேயாகும்.
இந்த விதிக்கு கோவிட்-19 வியாதியும் விதி விலக்கல்ல.
நன்றி: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, 26.05.2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
No comments:
Post a Comment