கரோனா அறிகுறிகளால், சோதித்துக்கொண்டேன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

கரோனா அறிகுறிகளால், சோதித்துக்கொண்டேன்

விடுதலை வாசகர்களுக்கு வணக்கம்:


பாதுகாப்புடனும் நல்ல உடல்/மனநலத்துடனும் நீங்கள் அனைவரும் இருக்க பெரிதும் விழைகிறேன். இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், விடு தலை நாளிதழ்மூலம் செறிவான செய்திகளையும், சிந்தனையைத் தூண்டும் கருத்துகளையும், தமிழர் தலைவரின் ஆழ்ந்த அறிக்கைகளையும் படிக்கவும், சிந்திக்கவும் இக்காலம் நமக்கு உதவுகிறது.


அண்மையில் எனக்கு வந்த கரோனா தொற்று அறிகுறிகளால், நான் அதற்குரிய சோதனைக்குள்ளாக வேண்டியதாயிற்று. “இல்லை” என்று சோதனையின் முடிவுவந்தது பெரும் ஆறுதல். அதுபற்றி சில உங்க ளுடன் பகிர விரும்புகிறேன்.


அமெரிக்காவில் மேரிலாந்து மாநிலத்தில் கொலம் பியா எனும் புறநகர் பகுதியில் வசிக்கிறேன்.


கடந்த வெள்ளிக்கிழமை (மே22) காலை முதல் தொடர் இருமல், காய்ச்சல், உடல்வலியால் அவதியுற் றேன். இந்த தொந்தரவுகள்  முந்தைய தினங்களில் இருந்தபோதும் இப்போது மிகக் கூடுதலாக இருந்தது. மருத்துவமனையை அழைத்து ”கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்” என சொன்னபோது, உடனே வாருங்கள் என தெரிவித்தார்கள். எனினும், பலப்பலருக்கும் இச்சோதனை கொடுக்கப்படுவதால், மணிக்கணக்கில் மருத்துவமனைகார்கள் நிறுத்தும் மைதானத்தில் காரிலேயே இருக்க வேண்டியதாயிற்று.


சோதனைக்கு sample எடுக்க வந்த மருத்துவர், தகுந்த பாதுகாப்பு கவச உடையில் வந்தார். பஞ்சுசுற்றிய முனையுடைய நீண்டகுச்சி (swab) எனது மூக்கு துவாரத்தில் நுழைக்கப்பட்டு மெதுவாக சுழற்றப்பட்டது. அப்போது வலியிருப்பினும், தாங்கக்கூடியதாகவே இருந்தது. ஒருமூக்கு துவாரத்தில் எடுக்கப்பட்டது கரோனாவுக்கான சோதனைக்காகவும், இன்னொரு துவாரத்தில் எடுக்கப்பட்டது ஆண்டுதோறும் வரும் flu காய்ச்சல் சோதனைக்காகவும் என மருத்துவர் சொன்னார். எடுத்த 15 நிமிடங்களில் flu காய்ச்சல் இல்லை என தெரிவித்தார்கள்.


கரோனா சோதனை மேரிலாந்து பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களில் நடத்தப்பட்டு முடிவுவர சில நாட்களாகும் என சொல்லப்பட்டது. முடிவு தெரியும் வரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும், வீட்டி லுள்ளோருடனோ, மற்றவருடனோ 6 அடிதூரத்திற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கவேண்டும். தங்கியிருக்கும் அறைக்கு வெளியில் வந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. வெள்ளி முதல், முடிவு வந்த திங்களன்றுவரை தனிமையில் இருந்தேன். எனது வாழ்விணையரும், எனது மகளும் எனக்கு நல்ல உணவுகொடுத்து உபசரித்தாலும், தனிமையை நான் அவ்வளவாக விரும்பவில்லை. ஏற்கனவே மாதக்கணக்கில் வீட்டில் தனித்திருந்து, இப்போது வீட்டுக்குள்ளும் தனியா என மனச்சோர்வு மிகுந்தது. இருப்பினும் நம் ஆசிரியர் விடுதலையில் வழங்கும் கருத்துரைகள் மிகுந்த தெம்பையும், நம்பிக்கையையும் தந்தது. ஆசிரியர் சொன்னதுபோல குடும்ப உறுப்பினர் களுடன் கலந்துபேசுதல், நல்ல புத்தகங்களை படித்தல், நண்பர்களுடன் தொலைபேசியில் நட்பை புதுப்பித்தல் - என நேரம் பயனுள்ளதாக செல்ல ஆனதை செய் தேன்.


சோதனை முடிவு “இல்லை” என வந்தது பெரும் ஆறுதல் எனினும்; கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களையும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களையும், தமது வாழ்வா தாரம் சிதைந்து அல்லலுறுவோர்களையும் எண்ணி நான் வேதனைப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.


இதனை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டு கோள். வீட்டுக்கு வெளியே செல்லலாம் என்ற நிலை வரும்போது, மிகுந்த கவனத்துடன் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள். பெருங்கூட்டங்களை தவிருங் கள். கைகுலுக்குதல், மற்றவர் அருகில் சென்று பேசுதல் போன்றவற்றையும் தவிர்க்கவேண்டும். புற்றுநோய், சர்க்கரைநோய், உறுப்புமாற்று, போன்றவை உடைய வர்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். வைரசு களுக்கு நமது தடுப்பாற்றல் மட்டுமே பாதுகாப்பு. அதனை மேம்படுத்த உடற்பயிற்சி, சரிவிகித உணவு, நல்ல தூக்கம் வேண்டும். அன்றாடம் Multi vitamins, chelated minerals, probiotics, zinc போன்றவற்றை மருத்துவர்கள் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண் டும். இவை தரமானவை என சான்று பெற்றவையாக இருத்தல் மிக முக்கியம். மன அழுத்தம், கவலை, ஓரி டத்திலேயே சோர்ந்திருப்பது போன்றவை தடுப்பாற் றலை மிகவும் சிதைப்பன.  பல ஆய்வு முடிவுகள் இதற்கு ஆதாரமாக வந்திருக்கின்றன. அறிவைத் தூண் டும் செய்திகள்/புத்தகங்களை படித்தல், மனம்திறந்து குடும்பத்தினர் நண்பர்களுடன் உரையாடல் போன்று மகிழ்ச்சியான மனநிலைக்கு நம்மை ஆட்படுத்துவன வற்றை பெருக்கிக் கொள்ள வேண்டும். வைரசுகளிட மிருந்து நம்மை பாதுகாப்பது நமது தடுப்பாற்றல் ஒன்றே. எனவே, அதனை ஓங்கி வளர்த்துக் கொள்ள வேண்டியது இக்காலகட்டத்திலும், எக்காலகட்டத்திலும் மிக அவசியம்.


நீங்கள் படிப்பதில், அறிந்துகொள்வனவற்றில் - பொதுவாக வைரசுகள் பற்றியும், கோவிட் - 19 தொற்று நோய் கொடுக்கும் கரோனா பற்றியும், தடுப்பாற்றலை கூட்டுவது பற்றியும், இந்ததொற்றிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றியும் இருக்க வேண்டும்.  கரோனா முற்றிலும் நீங்கள் பல மாதங்களா கலாம். தடுப்பூசி (Vaccine) ஒன்றே சரியானதீர்வு. அது வரும்வரைக்கும், நமது பகுத்தறிவும், தடுப்பாற்றலுமே துணை.


- அரசு.செல்லய்யா, அமெரிக்கா


No comments:

Post a Comment