விவேகானந்தரை விடுத்து புத்தரையும், பெரியாரையும் கற்பிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

விவேகானந்தரை விடுத்து புத்தரையும், பெரியாரையும் கற்பிப்போம்!

ஒரு கொல்கத்தா மாணவியின் குரல்

சுவாமி விவேகானந்தரை பற்றிச் சிலாகித்து, புகழ்ந்து தள்ளுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதிக்காரர்களாகவேதான் இருக்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர், பார்ப்பனியத்தை (இந்து மதம்) பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் தான் சிகாகோ சென்றார்.

அந்தக் காலகட்டத்தில், படித்த இந்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக இந்துமதத்தின் தீமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராகப் போராடிக் கொண்டும், குறிப்பாக, கிறித்துவ மதத்திற்கு மாறிக்கொண்டும் இருந்த போது, இந்து மதத்தை "இந்த பூமியில் மிகவும் சகிப்புத் தன்மையுள்ள மதம்" என்று குறிப்பிட்டு, ஹிந்து இளைஞர்களை மதம் மாறக்கூடாது என்று மூளைச் சலவை செய்தவர் தான் இந்த பார்ப்பனப் புரட்டு நாயகன் சுவாமி விவேகானந்தர்.

இந்துக்கள், தங்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்து, இந்து மதத்தின் அவல நிலைகளை, பார்ப்பனியத்தின் அநீதிகளை, அசிங்கமான உண்மை களை மக்கள் அறிந்து கொள்வதை விவேகானந்தர் ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கக் கல்விமுறையையும், பார்ப்பனிய ஆதிக்கச் சமூகத்தையும் தொடரவே விரும்பினார்.

சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்:

“பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கு நான் சொல்கிறேன், காத்திருங்கள் அவசரப்பட வேண்டாம்! பார்ப்பனருடன் சண்டையிடக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டாம்! ஏனென்றால் நான் காட்டியபடி, நீங்கள் உங்கள் சொந்தத் தவறுகளால் தான் பாதிக்கப்படுகிறீர்கள். ஆன்மீகத்தையும், சமஸ்கிருதத் தையும் கற்பதை உங்களை யார் புறக்கணிக்கச் சொன்னது? இத்தனை காலம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி கற்காததற்கும், அவர்களின் அவலநிலைக்கும் அவர்களே காரணம் என்பது போல கூறுகிறார் இந்த அவதாரப் புருஷன்.

ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படிப்பதாலும், ராம கிருஷ்ணரைச் சந்திப்பதாலும் மட்டும், அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வேதனைகளையும், துன்பங்களையும் கண்டறிய முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் சமஸ்கிருதத்தைக் கற்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் விரும்பினார். ஏன் என்றால், அப்போதுதான் அவர்களைப் பார்ப்பன மதத்திற்கு மாற்ற முடியும், இதன் காரணமாக, தாழ்த்தப்பட்டோரின் மத்தியில் பகுத்தறிவற்ற வேத போதனைகள் பரவி, பகுத்தறிவுச் சிந்தனையை ஓரம்கட்டி, அடிமைத்தனம் மேலோங்கச் செய்ய முடியும் என்று கருதினார்.

இந்துக்களின் நலனுக்காகப் பேசும் நமது பாசத்துக்குரிய ‘சுவாமிஜி’, எப்போதாவது தாழ்த்தப் பட்டோரை அடிமைப்படுத்தி, அவர்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதுவதற்காக பார்ப்பனர்களைக் கேள்வி கேட்டாரா?

ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காக அவர் எப்போதாவது பார்ப்பனர்களை எதிர்கொண்டாரா? "ஜாதி ஒழிப்பை" அவர் எப்போதாவது வலியுறுத்தினாரா? மிருகத்தனமான இந்த ஜாதி அமைப்பைப் பாதுகாத்து, உலகிற்கு இந்தியாவின் பிரதிநிதித்துவ அடையாளமாக காட்டினார் அவர்!

விவேகானந்தரின் ராமகிருஷ்ணா மிஷன் என்பது, மதமாற்றத்திற்கான ஒரு குறுங்குழு. இந்த மிஷன், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்காக குரல்கொடுத்ததாக நான் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.

ராமாகிருஷ்ணா மிஷனின் மகாராஜாக்கள், வெளிநாட்டுப் பணத்தின் கீழ் நன்றாக வளர்கிறார்கள். அவர்கள், தற்காலிகமாக உணவு மற்றும் துணிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும் வழங்குகிறார்களே தவிர,  அவர்களின்  வாழ்க்கைநிலை உயர எப்போதாவது போராடியிருக்கிறார்களா?

அவர்கள், ஏழைக் குழந்தைகளை அழைத்துச் சென்று, பார்ப்பனியத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில், வேதாந்த சித்தாந்தத்துடன் கூடிய கல்வியை அவர்களுக்குக் கற்பிக்கின்றனர்.  தங்களைச் சமதர்மவாதிகளாக காட்டிக் கொள்ள இது போன்ற பல முயற்சிகளைச் செய்கின்றனர்.

மனித மலத்தை மலத்தொட்டிக்குள் இறங்கி அள்ளும் அவலநிலையினால் தாழ்த்தப்பட்டோர் இறக்கும் போது, ராமகிருஷ்ணா மிஷனின் ஆட்கள் எங்கே மறைந்து போகிறார்கள்? பழங்குடியினரின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் போது, ராமகிருஷ்ணா மிஷனின் ஆட்கள் எங்கே ஓடி ஒளிகிறார்கள்?

இந்துத்துவா அமைப்புகள் கூறுவது போல, கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றுவதற்கு லஞ்சம் கொடுக்கின்றன என்றால், ராமகிருஷ்ணா மிஷினின் செயலும் அதிலிருந்து வேறுபட்டதல்ல, அதைவிட மோசமானது! கேவலமானதும் கூட!

புத்தர், தாழ்த்தப்பட்டோருக்கு சொந்த அங்கீகாரம் வேண்டும் என்று விரும்பினார், சமஸ்கிருதத்திற்கு சவால் விடுத்தார்; சமஸ்கிருதத்தைக் கற்கத் தகுதியற்றவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு, பாலி மொழியைக் கற்றுக்கொடுத்தார்.

ஆனாலும், வரலாற்றுப் புத்தகங்களில் புத்தர் மற்றும் பெரியாரை விட விவேகானந்தர், மேலோங்கிக் காட்டப்படுகிறார். அதனால்தான், ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் பார்ப்பனியம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

நாம் நம் குழந்தைகளுக்கு விவேகானந்தரைக் கற்பிப்பதை நிறுத்திவிட்டு, புத்தரையும், பெரியாரையும் கற்பிக்கத் தொடங்குவோம்.

- நிரஞ்சனா தாஸ்,

முதுகலை பொருளாதாரம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா

தமிழில்: தாம்பரம் விஜயகுமார்

No comments:

Post a Comment