நூற்றுக்கணக்கான ஜாதிகளால், வருணப் பாகுபாடு களால் பிரிந்து கிடந்த மராத்தியர்களை ஒருங் கிணைத்த பெருமைக்குரியவன் சத்ரபதி சிவாஜி! அவன் தன் ஆட்சி முறைகளைத் தானே புதிதாக வகுத்து கொண்டவன்.
சிவாஜியின் உடல் உரத்தையும், மன உறுதியையும் வலிமைப்படுத்திக் கொள்வதற்கும் பெரிதும் உதவியது, மராட்டியத்தில் மலைப் பகுதியான 'மாவல்'. அது போர்ப்பயிற்சிப் பட்டறையாகவும் விளங்கியது. இளைஞர் பலரை தன் நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுக்குப் போதிய போர்ப் பயிற்சியைக் கொடுத்து ஒரு படையை உருவாக்கினான் சிவாஜி. கொரில்லாப் போர் முறையிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள் ஆனார்கள். இந்தியாவில் முதல்முறையாக கொரில்லாப் போர் முறையைக் கையாண்ட பெருமை சிவாஜியையே சாரும்.
கிபி 1636 இல், தாதாஜி, பூனாவில் பாதுகாப்பான ஒரு மாளிகையை சிவாஜிக்குக் கட்டிக் கொடுத்தார். 10 ஆண்டுக்கு பின், தனது தாயாருடன் ராய்க்கர் கோட்டைக்குக் குடிபெயர்ந்தான். சிவாஜியின் முடிசூட்டு விழா அங்குதான் நடைபெற்றது. அவனுடைய முதல் தலைநகரமும் இதுவே ஆகும். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மாவீரன், அவ்வளவு பெரிய பேரரசைக் கட்டி எழுப்பினான் என்பது வியப்பிற்குரியதாகும்.
கி.பி. 1674, ஜூன் 16 ஆம் நாளில், சிவாஜியின் முடிசூட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதற்குமுன் மே 28ஆம் நாளில், சத்திரியனுக்குரிய சடங்குகளை இதுவரை செய்து வராத குற்றத்திற்காக, சிவாஜி நோன்பிருக்குமாறு செய்யப்பட்டான். அதன்பின் இருபிறப்பாளர்க்குரிய தனித்த அடையாளச் சின்னமாகிய பூணூலை காகப்பட்டர், அவனுக்கு அணிவித்தார்.
பிறகு என்ன நடந்தது என்பதை, பேராசிரியர் சர்க்கார் அவர்கள், சொல்லக் கேட்போம்! "அடுத்த நடவடிக்கை காயத்ரி மந்திரத்தை சிவாஜிக்கு கற்றுக்கொடுத்தும், புதுமுக வினைகளாற்றிச் சத்திரிய விதிகளுக்குள் அவனை சேர்த்துக் கொள்வதாகும். சிவாஜி, நேர்மையான முறையில் ஒன்றை வேண்டினான். சத்ரியச் சட்டத்திற்குள் நுழைவதற்கும், ஓர் உண்மையான இந்து அரசன் முடிசூட்டிக் கொள்வதற்கும் பொருத்தமான வேதங் களை எல்லாம் அவன் செவியில் கேட்குமாறு ஓத வேண்டும்! ஏனென்றால், சத்திரியர்கள், 'புனிதமான இருபிறப்பாளர்' வகுப்பில் ஒருவரானபடியாலும், அவ்வகுப்பில் அவன் அனுமதிக்கப்பட்டு விட்டமையாலும் பார்ப்பனருக்குச் சமமாக வேதங்களைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை படைத்தவனாகையால் சிவாஜி இவ்வாறு கேட்டுக் கொண்டான்.
இதைக்கேட்டதும், அங்கே கூடியிருந்த பார்ப்பனர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 'உண்மையான சத்திரியர் என்போர் தற்காலத்தில் எவருமில்லை! இருபிறப்பாளர் என்று இப்போது இருப்போர் பார்ப்பனர் மட்டுமே' என்று அவர்கள் உறுதிபடக் கூறினார்கள். காகபட்டர், இந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, வேத மந்திரங்கள் ஓதுவதை உடனடியாக நிறுத்தி விட்டார். பார்ப்பனருக்கு நிகராக சிவாஜிக்குச் சடங்குகள் செய்து, சிவாஜியை சத்திரிய வகுப்புக்குள் நுழைத்து விட்டார் காகபட்டர்.
பேராசை பிடித்த பார்ப்பனர்கள், தங்கள் மனச்சான்றினை மறைத்துக்கொண்டு, சிவாஜியின் முடிசூட்டு விழாவில் ஓதிய மந்திரங்களைக் கூட, அவன் செவிகளில் ஒரு சொல்கூட விழாதவாறு, வெறும் வாயை அசைத்து முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.
சிவாஜியின் எடைக்கு எடை பொன், வெள்ளி, செம்பு, துத்தநாகம், வெள்ளீயம், ஈயம், இரும்பு ஆகிய 7 உலோகங்களை வழங்கினான். வேலைப்பாடுகள் மிக்க விலை உயர்ந்த துணி மணிகள், கற்பூரம், உப்பு, ஜாதிக்காய், நறுமணப்பொருட்கள், வெண்ணை, சர்க்கரை, பழங்கள், வெற்றிலை, நாட்டுச் சாராயம் இவற்றுடன், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொகையையும் சேர்த்து, முடிசூட்டு விழா முடிந்ததும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. இவை 50 கோடிக்கு மேல் என்கிறார் சாதுநாத் சர்க்கார். வஞ்சகமும், பித்தலாட்டமும் நிறைந்த பார்ப்பனர்களின் பிடுங்கித் தின்ற செயலைப் பாருங்கள்!
- அ.இரா.முல்லைக்கோ,
பெங்களூரு
No comments:
Post a Comment