வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படத்தை விண்வெளி ஆய்வாளர்கள் உருவாக்கி யுள்ளனர். ஹவாய் தீவில் உள்ள ஜெமினி வட தொலைநோக்கி மூலம் அகச்சிவப்புக் கதிரில் இந்தப் படத்தைப் பிடித்துள்ளனர். ‘லக்கி இமேஜின்’ என்ற தொழில்நுட்பம் மூலம் இந்தப் புகைப்படம் உருவாகியுள்ளது. பல புகைப்படங்களை எடுத்து, அவற்றை ஒன்றாக இணைத்து இதனை உருவாக்கி இருக்கின்றனர்.
நாசாவால் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட மற்றொரு படத்தில், வியாழன் கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தைச் சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், வியாழனின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக படம் பிடிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒளிக்கோவைகள், அதிக சக்தியுள்ள, அணுவை விடச் சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்குத் தள்ளப்படும்போது நிகழ்கின்றன.
சூரியனிடமிருந்து அய்ந்தாவது வளையத்தில் இருக்கும் வியாழன், திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது ‘வாயுக்கிரகம்’ எனப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாகவும், அதுதான் வியாழனின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகவும் கருதப்படுகிறது.
- மின்மினி விமலா,
அறிவியலோடு நாம்
No comments:
Post a Comment