கோவில்களில் தஞ்சமடையும் இவ்வகை வவ்வால்களை நாம் பார்த்திருக்கக்கூடும். இவற்றின் விஞ்ஞானப் பெயர் Rousettus sp. என்பதாகும். இவ் வவ்வால்கள் கோயில்களில் அடைந்துருப்பது குறித்தோ அவை உண்டாக்கும் கொடிய நெடி குறித்தோ அதிகம் கவலைப்படுவதில்லை. இந்த வகை வவ்வால்கள் அவற்றின் உடலில் இருந்து அகற்றும் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவையும், அவை தின்று தீர்க்கும் அத்திப்பழம் முதலான உணவுச் சிதறல்களுமே அசுத்தமான வாடை வீசக் காரணம் ஆகும்.
உலகம் முழுமையும் மக்களைத் தாக்கிக் கொண்டிருக் கும் கொரோனா தீநுண்மி எனும் வைரஸ் சீனாவில்தான் முதன்முதலாக மனிதர்களைத் தாக்கியது என்றும் அந்த வகை கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்தது இவை போன்ற வவ்வால்களில் இருந்து என்பது நமக்கு சில வாரங்களுக்கு முன்னால் கிடைத்த பத்திரிகைச் செய்தியாகும். அதனால், நம் ஊர்க் கோவில்களில் இருக்கும் வவ்வால் இனங்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டா என்று ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்படி ஏற்படுமானால் அது கோவில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியவையா (தாவுநோய், zoonosis) என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
தாவுநோய் (zoonotic disease) என்றால் என்ன?
விலங்குகளைப் பீடித்த நோய் மனிதனைத் தாக்குமானால் அவற்றிற்கு விலங்குசார்தாவுநோய் (zoonotic disease) என்று பெயர். எடுத்துக்காட்டாக வெறிநாய்க்கடி (rabies) வைரஸ். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றும் அவ்வகையைச் சார்ந்ததுதான்.
அதேபோல மனிதனிடம் இருந்தும் சில நோய்கள் விலங்குகளுக்குப் பரவலாம் (bidirectional zoonosis) அல்லவா? அவ்வகையான நோய்களுக்கு மனிதன்சார் தாவுநோய் (anthroponosis) எனப் பெயர் அவையாவன மலேரியா, டெங்கி, சிக்குன்குனியா (மனிதனிடமிருந்து கொசுக்களுக்கு), பறவைக் காய்ச்சல் எனப்படும் H1N1 ஆகியவை.
கொள்ளைநோய் (epidemic) அகல்கொள்ளை (pandemic) நோய் என்பவை என்ன?
கொள்ளை நோய் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் (மாநிலம், நாடு) தோன்றும் நோய் ஆகும். எடுத்துக்காட்டு காலரா. அகல்கொள்ளைநோய் என்பது தற்போது உலக அளவில் தோன்றியிருக்கும் கொரோனா தீநுண்மி நோய் போன்றதாகும்.
கோவில் வவ்வால்களுக்கும் கொரோனா நோய்த்தொற்றுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
நிகழ்காலத்தில் அரசு ஆணைக்கு ஏற்ப தமிழ் நாட்டில் உள்ள கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவடையும் காலத்தில் மக்கள் கோவில் களுக்குச் சென்று வழிபட முயல்வது இயற்கையான நிகழ்வாகும். அந்த நேரங்களில் மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன என்ற கோணத்தில் பார்க்கும் போது மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்களின்படி இவ்வகை வவ்வால்களில் (Rousettus sp..) கொரோனா தீநுண்மிகள் வகையைச் சேர்ந்த நோய்த் தொற்று இருந்தாலும் அவை மனிதனுக்குப் பரவின என்று எந்தவித ஆராய்ச்சி முடிவுகளும் இதுவரை தெரிவிக்கவில்லை.
அதனால் இங்குள்ள வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்குக் கொரோனா நோய்த் தொற்று தாக்கி விடுமோ என்பது குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பது ஒரு விதத்தில் நமக்கொரு நற்செய்தியே ஆகும். எனினும் இந்த நோக்கில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
No comments:
Post a Comment