இந்த நேரத்திலும்கூட எல்லாம் ‘இந்தி' தானா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

இந்த நேரத்திலும்கூட எல்லாம் ‘இந்தி' தானா

பிரதமர்  நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரைகளை இந்தியி லேயே நிகழ்த்துகிறார். இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு என்பதும் ‘இந்தி'யிலேயே நடக்கிறது.


கரோனா நோய்த் தொற்று தொடர்பாக முதன்முதலாக மார்ச் 19ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரைய £ற்றிய  மோடி, தனது பேச்சை ‘இந்தி'யிலேயே பேசினார்.


இதற்குப் பிறகு, மார்ச் 24ஆம் தேதியன்று இரவு 8 மணியளவில் மீண்டும் உரையாற்றிய அவர் அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால், இதைப் புரிந்துகொள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரது உரை இந்தியில் இருந்ததோடு, துணை தலைப்புகளும் தரப்படவில்லை. செய்தி முகமைகள் இதனை மொழிபெயர்த்து, ஊடகங்களுக்கு அனுப்பும் வரை, மோடியின் உரையின் முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை.


மேலும் அவர் மே 12ஆம் தேதி  பேசும்போதும் இதே நிலைதான். அவர் பேசி முடித்து, பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் பேசியதன் முழுவிவரம் இந்தி பேசாத மக்களுக்குத் தெரிய வந்தது.


இது மட்டுமல்ல. இந்தியாவில் கரோனா தொற்று எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து தினசரி செய்தியாளர் சந்திப்பு களை அய்சிஎம்ஆர் அதிகாரிகளும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் நடத்துகின்றன. இதில் பெரும்பாலும் மத்திய சுகா தாரத் துறையின் இணைச் செயலாளர்தான் தகவல்களை ஊடகங் களுக்கு அளிக்கிறார். 30 நிமிடங்கள் நீடிக்கும் இந்த செய்தியாளர் சந்திப்பு முழுக்கவும் இந்தியில்தான் நடக்கிறது. இந்த முழுமையான தகவல்கள் இந்தி தெரியாதவர்களுக்குக் கிடைக்காது.


இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியல், 22 மொழி களை இந்தியக் குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பட்டி யலிடுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியே பெரும் எண்ணிக்கையிலான மக்களால், அதாவது 40 விழுக்காடு மக்களால் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தி அல்லாத மராட்டி, குஜராத்தி, வங்காளி, ஒடிசா, பஞ்சாபி, போஜ்புரி போன்ற வட இந்திய மொழிகளும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொங்கணி போன்ற தென் இந்திய மொழிகளும் 60 விழுக்காடு மக்களால் பேசப்படுகின்றன. இந்தி பேசப்படும் மாநிலங்கள் என்று கூறப்படும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கூட பெரு நகரங்களைத் தவிர்த்து பிற இடங்களில் போஜ்புரி, மகத், டோங்கரி, மைதிலி போன்ற மொழிகள்தான் பேசப்படுகிறதே தவிர, பிரதமர் மோடி பேசும் இந்தி அல்ல; எந்த இந்தியப் பிரதமரும் இப்படி இந்தியில் மட்டுமே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதில்லை. இதற்கு முன்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் பலமுறை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றியிருக்கிறார். அப்போதும் இந்தியில் பேசினார், எடுத்துக்காட்டாக பண மதிப்பிழப்பு இவர் முழுமையாக பேசி முடிக்கும் முன்பே இந்தி தெரிந்தவர்கள் தங்கள் கையில் உள்ள ரூ.1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை அவசர அவசரமாக கடைவீதிகளுக்குச் சென்று மாற்றினார்கள். கடைக்காரர்களுக்கு அரை மணிநேரம் வரை திடீ ரென்று ரூ.1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளைத் தொடர்ந்து கொடுப்பது குறித்து புரியாமல் சில்லரை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகே பிற மொழிகளில் பிரதமர் மோடி பேசியதை, மொழி பெயர்த்த பிறகுதான் உண்மை தெரிய வந்தது.


இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கின்றன. அதில் ஒரு மொழியை மட்டுமே தொடர்ந்து தேர்வு செய்வது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்தி பேசாத மக் களுக்காகவே ஆங்கிலம் அலுவல் மொழியாக வைக்கப்பட்டிருக் கிறது. அதைப் பேசவே மறுப்பதென்பது அப்பட்டமான இந்தித் திணிப்பே!


கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மகாராட்டிராவிலும், தமிழ்நாட்டிலும், குஜராத்திலும்தான் அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பேசப்படாத ஒரு மொழியில் மோடி பேசு வது, அவர் இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்பதே காரணமா? இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்த நிலையா?


இந்தியாவில் எல்லா மொழி பேசுபவர்களும் சமமான தகுதியுடையவர்கள்தான்.  கரோனா பரவிவரும் இந்த காலகட்டத்தில் தகவல்களும், வெளிப்படைத் தன்மையும்தான் மிக முக்கியம். ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான வித்தியா சமே அதுதான். இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்தி தெரியாது. இருந்தபோதும் தொலைப்பேசியில் வரும் கரோனா தொடர்பான அறிவுறுத்தல்கள், ரயில்வே அறிவிப்புகள் எல்லாமே இந்தியில்தான் உள்ளன. கரோனா தொடர்பான தினசரி தகவல்களும் டில்லியில் இருந்தபடி இந்தியிலேயே தரப்படுகின்றன.


மோடியின்  நோக்கம் என்னவாக இருந்தாலும், அவர் பேசுவது எதுவுமே நமக்குப் புரியவில்லை; அவரது உரை இந்தி பேசும் மக்களுக்காக மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது.


மத்திய அரசின் ஒரே மொழியாக இந்தி உருவெடுத்து வருகிறது, தொடர்ந்து மோடி அறிவித்த திட்டங்கள் அனைத்துமே இந்தி மற்றும் சமஸ்கிருத பெயர்களில்தான் உள்ளன.  இதுவரை நீர் மேலாண்மை அமைச்சரகம் (மினிஸ்டரி ஆப் வாட்டர் போர்ட்) என்று இருந்ததை ஜல்சக்தி என்று மாற்றியுள்ளார்கள். இப்படி மாற்றப்பட்டது. சமீபத்தில் தான் வெகு மக்களுக்குத் தெரியவந்தது.. இந்த ஊரடங்கின் போது  'ஜனதா கர்ஃப்யூ', 'ஆத்மநிர்பார் பாரத் அபியான்‘, 'ஸ்ரமிக்' ரயில்கள், 'வந்தே பாரத், ' என இந்தி-சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்படுகின்றன. ஒரே நாடு - ஒரே அரசு - ஒரே ரேசன் அட்டை என்று காற்று வேகத்தில் திணித்துக்கொண்டு வரும் இந்த அரசு விரைவில் ஒரே மொழி என்ற ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்வதற்கான திட்டமிட்ட பாதைதான் இது. இதற்காகத் தான் மோடி அரசு தொடர்ந்து அனைத்து மிக முக்கிய அறிவிப்பு களையும் இந்தியில் வெளியிட்டு வருகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


இது நல்லதல்ல - பிஜேபி பேசும் தேசியத்திற்கும் உகந்ததல்ல - எதிர்மறை எண்ணங்களையே மக்களிடத்தில் விதைக்கும்.


No comments:

Post a Comment