கருணை குடிகொள்ளும் உள்ளங்கள் எங்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

கருணை குடிகொள்ளும் உள்ளங்கள் எங்கே

கரோனா கழுத்தை நெரித்துக் கொல்லும் கால கட்டம் இது. ஏற்கெனவே 20 கோடி மக்கள் இரவு உணவுக்கு வழியின்றி ஈரத்துண்டை வயிற்றில் கட்டிக் கொண்டு தூங்கச் செல்லுகின்றனர். இந்த நிலையில் தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையின்மீது வீழ்ந்தது போல கரோனா கொடூரமாக கோரப் பற்களைத் தீட்டிக் கொண்டு பாய்ந்து குதறுகிறது!


வாய்ப்பு வசதி உள்ளவர்கள் உதவிக்கரம் நீட்டி அதன்மூலம் மனிதத் தன்மை என்ற ஈரம் இன்னும் உயிரோடு இருக்கத்தான் செய்கிறது - அடியோடு அது வறண்டு விடவில்லை என்று மெய்ப்பிக்க வேண்டிய தருணம் இது.


அறிவினான் ஆகுவதுண்டோ பிரிதின்நோய்


தம் நோய்போல் போற்றாக் கடை


என்றார் திருவள்ளுவர்.


மற்றவரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் உணர்ந்து அதைப் போக்க முனையாவிட்டால் பெற்றிருக்கும் அறிவினால் என்ன பயன்? என்று வள்ளுவம் கேட்கிறது.


இதையும் ஒரு பக்கத்தில் நினைத்து இன்னொரு பக்கம் நமது இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் போக்கையும், பேச்சையும் நினைக்கும் பொழுது நம் தலைகள் கீழே இறங்கி மூச்சு வாங்குகின்றன.


புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலையைப் பற்றிக் கேட்டால் நிதி அமைச்சர் கொஞ்சம்கூட ஈவு, இரக்கமின்றிக் கூறுகிறார்   - "நடந்து செல்லும் அவர்களைப் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்காமல் அவர்கள் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்களைக் கொஞ்சம் தூக்கிச் செல்லலாமே" என்று ஏகடியம் பேசுகிறார்.


முன்பொரு முறை வெங்காயம் விலை ஏற்றத்தைப் பற்றிக் கேட்டபொழுது "வெங்காயம் பூண்டு இவற்றைப் பயன்படுத்தாத கலாச்சாரக் குடும்பத்தில் வந்தவள் நான்" என்று நாடாளுமன்றத்திலேயே பேசினாரா இல்லையா?


அவர்கள் சார்ந்த 'இந்துத்துவா' இப்படியெல்லாம் பேச வைக்கிறது. கேட்டால் இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல, ஒரு வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்ற நீதிபதியே சொல்லியிருக்கிறார் என்று கதைப்பார்கள். இன்னும் அதிகம் கேட்டால் அவரவர்களின் கர்மப் பலனை அவரவர்கள் அனுபவிக்கிறார்கள் என்று கூடச் சொல்லுவார்கள்.


அவைகள் எப்படியோ இருக்கட்டும்; நாளேடுகளில் இச்செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மதுரையில் அன்றாடம் பிச்சை எடுக்கும் பூல் பாண்டி என்பவர் தான் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் வழங்கினார் என்கிற தகவல் ஏடுகளில் வெளி வந்துள்ளது. அவரைப்பற்றி மேலும் சில தகவல்களும் அவற்றில் இடம் பெற்றுள்ளன.


40 ஆண்டுகளாக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுப்பதுதான் அவரின் வாழ்க்கை வழிமுறை. தன்னைப்பற்றி அவர் கூறுகிறார்.


"பிச்சை எடுக்கும் பணத்தில், என் தேவைக்குப் போக மீதித் தொகையை ஏழைக் குழந்தைக் கல்விக்காகவும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் வழங்கி வருகிறேன். கடந்த இரு மாதங்களுக்கு முன் மதுரை வந்தேன். நான் பிச்சை எடுத்துச் சேமித்த தொகை ரூபாய் 10 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கினேன். இதே போல பத்து மாவட்டங்களில் பிச்சை எடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண உதவி வழங்க உள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.


திருவள்ளுவர் கூறிய மேற்கண்ட குறளுக்கு இவர்தான் பொருத்தமான இலக்கணமும், எடுத்துக்காட்டும் அல்லவா!


இதே போல இன்னொரு செய்தி. மகாராட்டிர மாநிலம் புனே நகரில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் அக்ஷய் கொத்தலால் (வயது 30). இவருக்கு வரும் 25ஆம் தேதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நெஞ்சில் பூத்து மலரும் கருணை மழை - அவரை எந்த உணர்வோடு ஆளாக்கியுள்ளது? அதனை அவர் வாயால் கேட்பதுதான் பொருத்தமும், நேர்மையுமாகும்.


"ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாமல், தெருக்களில் தவிப்பவர்களை நான் பார்த்து வேதனை அனுபவித்தேன். பிறகு நானும், எனது நண்பர்களும் இவர்களுக்கு உதவ முடிவு செய்தோம். அப்போது எனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் இரண்டு இலட்சத்தை இதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். உடனே சமையல் அறை ஏற்படுத்தி அங்கே சப்பாத்தியும், சப்ஜியும் தயாரிக்கத் தொடங்கினோம். பிறகு இவற்றை என் ஆட்டோவிலேயே எடுத்துச் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு விநியோகித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.


நாள்தோறும் 400 பேர்களுக்கு இந்த உதவியைச் செய்து வருகிறார்.


இதில் இன்னொரு செய்தியைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிடமும் இந்தத் தகவலைச் சொல்ல அந்தப் பெண்ணும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். என்னே மனிதநேயம்!


கருணை மழை கர்ப்பம் தரிக்கும் உள்ளம் குடிசையில் இருக்கும் அளவுக்கு ஒரு நாட்டின் நிதி அமைச்சருக்கு இல்லையே என்று எண்ணும்போது ஒரு பக்கம் வலியும், இன்னொரு பக்கம் ஈவும், இரக்கமும் இன்னும் இறந்துவிடவில்லை - உயிர்த் துடிப்போடு இருக்கத்தான் செய்கிறது என்ற மன ஆறுதலும் ஏற்படுகிறது. பிச்சை எடுக்கும் அந்த மனிதன் தன் செயல் மூலம் பெரும் தனவந்தராகவும், ஆட்டோ ஓட்டுநர் தொழில் அதிபராகவும் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுள்ளனர்! வாழ்த்துவோம் - பாராட்டுவோம்!


No comments:

Post a Comment