புரட்டிப் போட்ட கரோனா - விரட்டியடிக்கும் தாராவி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

புரட்டிப் போட்ட கரோனா - விரட்டியடிக்கும் தாராவி!

இந்து ஏட்டின் படப்பிடிப்பு!



இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகளில் மிகப் பெரியது மும்பையில் மாதுங்காவிற்கு அருகில் உள்ள தாராவி. நெருக்கமான குடியிருப்புகளில், அவல நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழைகள் வாழ்ந்து வரும் பகுதி இது. தீப்பெட்டிகள் போன்ற வீடுகளும், பொதுக் கழிப்பிடங்களும் கரோனா வைரஸ் சவுகரியமாக குடியமர வழிவகுத்துவிட்டன. நோய்த் தொற்று தாராவியில் வேகமாகப் பரவி வரும் நிலையில் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களுமான ஜோதி ஷெலாரும், அஜித் மஹாலேவும் இதுபற்றி தகவல் சேகரித்து நேற்று (9.5.2020) ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விரிவான ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அதன் சுருக்கம் பின்வருமாறு:


மார்ச் 24 ஆம் நாளன்று நாடு தழுவிய ஊரடங்கு அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டாலும் மும்பை தாராவியில் தலைகீழாகவே நிலைமை இருந்து வந்துள்ளது. சமூக விலகலோ, இடைவெளியோ  சாத்தியமே இல்லாத குடிசை கள் மிகுந்த பகுதி இது. தகரங்களாலும், இரும்புத் தகடு களாலும் பலர் கட்டிக் கொண்டுள்ள குடியிருப்புகளும், குடிசைகளுக்கு மத்தியில் ஏராளமாக உள்ளன. சுமார் மூன்று சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஏறத்தாழ 800 பேர் கரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்களுள் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் சுமார் நான்கு லட்சம் ஏழைகள் வசித்து வரும் பகுதி தாராவி. எவ்வித சுகாதார வசதியும் இல்லாத அவல நிலை. திறந்த வெளியில் குளியல் - அருவருப்பான பொதுக் கழிப்பிடங்கள், தீப்பெட்டி அளவில் உள்ள குடியிருப்பு ஒவ்வொன்றிலும் பத்து, பன்னிரண்டு பேர் கொண்டுள்ள குடும்பங்களால் தொற்று பரவாமலா இருக்கும்? கட்டுப்பாட்டு மண்டலமாக இன்று வரை உள்ளது தாராவி. ஆனால் நோய்த் தொற்று கட்டுப் படவே இல்லை.


ஏப்ரல் ஒன்றாம் நாள் தாராவியில் முதல் பாதிப்பு நிகழ்ந்தது. 56 வயது துணிக்கடைக்காரர் ஒருவர் நோய்த் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சை அளிக்காததால் அன்று மாலையே அவர் உயிரிழந்தார். கரோனா வைரசால் ஏற் கெனவே பாதிக்கப்பட்டிருந்த வெளி மாநிலத்தினர் சிலருக்கு, தன் இருப்பிடத்தில் அவர் அடைக்கலம் தந்துள்ள உண்மை விசாரணையில் வெளிப்பட்டது.


அடைக்கலம் தந்த முதியவர் பலியானார். அடைக்கலம் பெற்றவர்கள் அதன்பின் தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், நிலைமை மெல்ல மெல்ல மோசமாகி கரோனாவால் 171 பேர் மும்பையில் பாதிக்கப்பட்டிருந்த செய்தி வெளிவந்தது.


“உயிரிழந்த முதியவரின் வீட்டில் தங்கி இருந்தவர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட நபர்களோடு தொடர்பு கொண்டி ருந்ததால், பல்வேறு குடிசைப் பகுதிகளில் நோய்த் தொற்றுப் பரவியுள்ளது. பாதிப்பு குறித்த விசாரணையே சமூக ஆர்வலர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்து விட்டது. நோய்த் தொற்றின் வேகம் அப்படி இருந்தது” என்றார் மாநகராட்சி அதிகாரிகளுள் ஒருவரான கிரன் திகவ்கர்.


சாத்தியமா சமூக இடைவெளி?


கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய மருத்துவர் தாராவியில் இரண்டாவது பலி. அவருடைய வாழ்விணையரும் நோய்க்கு இரையானார். அதன்பின் முப்பது வயது பெண்மணி அடுத்த பலி. சங்கிலித் தொடர் போல் கரோனா வைரஸ் மரணங்கள் தாராவியில் நிகழ்ந்த வண்ணமே இருந்தன.


தாராவியில் நூறு சதுர அடி அறையில் பதினோரு பேர் அடங்கிய குடும்பம் ஒன்றின் தலைவர் 48 வயது முதியவர் கரோனா வைரசுக்குப் பலியானார். மற்ற பத்து பேரும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப் பட்டு, பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


“நூறு சதுர அடியில் பத்து பேர் வாழ்கிறோம்! சமூக இடைவெளி சாத்தியமா? வெளியே சென்றாலும் குறுகலாக உள்ள தாராவித் தெருக்களில் எதிரில் வருபவர்கள் மீது மோதிக் கொள்ளாமல் உரசிக் கொள்ளாமல் நடக்கவே முடியாது!” என்கிறார் உயிரிழந்த குடும்பத் தலைவரின் மூத்த மகன். குடும்பமே தனிமைப்படுத்தப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் அந்த முதியவரின் சவ அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தனராம். எப்படிப்பட்ட ஒரு துயரம்!


அருவருப்பான பொதுக் கழிப்பிடங்கள்!


ஆரம்பக் காலத்தில் மீனவர்களின் குடியிருப்பாக இருந்த தாராவி வளர்ந்த விதமே வியப்புக்குரிய வரலாறு என்கிறார் மாநகராட்சி அதிகாரி திகவ்கர். 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜனத் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் மூன்று சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இங்கே வாழ்பவர்கள் ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் இவர்களைத் தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து தாராவியில் குடியேறியுள்ளவர்கள் இரண்டரை லட்சம் ஏழைத் தொழிலாளர்கள். இவர்களை யாரும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளவேயில்லையாம்.


“பத்தடி நீளம் பத்தடி அகலம் கொண்டவை பெரும் பாலான வீடுகள். மிகச் சிறிய அறையில் எட்டு முதல் பத்து பேர் கொண்ட குடும்பங்கள் நெருக்கியடித்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பது எளிதான காரியமா?” என்று கேட்கின்றனர் சோர்வடையாமல் பணி புரியும் சில நேர்மை யான அதிகாரிகள்.


“பசி வந்தால் கரோனா பயம் வராதே! தினமும் ஆயிரக்கணக்கில் விலையில்லா உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டாலும் முட்டி மோதிக் கொண்டு வாங்க கூட்டமாய் வருகிறார்கள் - எப்படி ஏற்படும் சமூக விலகல்?” என்பது சமூகப் பணியில் இறங்கியுள்ள தொண்டர்களின் கேள்வி.


பொதுக் கழிப்பிடங்கள் மிகப் பெரிய பிரச்சினை என்கிறார்கள் பல அதிகாரிகள். தினமும் பல முறை துப்புரவுப் பணி நடைபெறாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும். தாராவியில் உள்ள மக்கள் தொகைக்கு, இருக்கும் பொதுக் கழிப்பிடங்கள் போதவே போதாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கிருமி நாசினிகள் கழிப்பிடங்களின் வாசலிலேயே வழங்கப்பட வேண்டும். இது முறையாக நடைபெறுவதில்லை என்று பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். பல பூங்காக்களில், சமுதாயக் கூடங்களில், திருமண மண்டபங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவது உண்மை. கட்டுப் பாட்டு மண்டலங்களில் பலர் ஓய்வின்றி பணியாற்றி வரு வதை மறுப்பதற்கில்லை. ஆனால் கரோனா வைரஸ் மதம் பிடித்த யானை போல் எல்லாவற்றையும் மீறி துவம்சம் செய்து வரும் இந்த அபாயகரமான கால கட்டத்தில் சோளப்பொறி போன்ற நம் முயற்சிகளால் அதன் பசியைப் போக்க முடியாமல் போகிறதே என்று பலரும் கவலைப்படு கின்றனர்.


தேவை - சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும்!


தாராவியே கோலிவாடா, முகுந்த் நகர், சாஸ்திரி நகர் என்றெல்லாம் மேலும் சிறிய குடிசைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் எவரும் தாராவிக்குள் நுழையாதபடி எல்லோரும் இப்போது எச்சரிக்கையுடன் உள்ளனர். பல பகுதிகள் தடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் மாற்றி யோசித்து  செயலாற்றத் துவங்கியுள்ளன. ஊரடங்கு விதிகள் கடைப்பிடிக்கப்படாத நிலையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தாராவி மக்களிடம் புதிய முயற்சிகளால் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர்.


அன்ஜும் ஷேக் எனும் அறுபது வயது முதியவர் புலம்புகிறார் - “அடங்க மறுக்கிறார்களே முட்டாள்கள்! எப்போதும் திருவிழா போல் கூட்டம் தாராவியில். ரம்ஜான் சமயம் வேறு. எதையாவது வாங்க எந்நேரமும்வெளியே திரிந்து கொண்டிருப்பவர்களை எப்படித் தான் திருத்துவது? தனிமனித ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் தான் இன்றைய அவசரத் தேவை!” என்கிறார் பல ஆண்டுகளாக தாராவியில் வசித்து வரும் அந்த முதியவர். “நாலு பேர் நடந்து போனாலே நாற்பது பேர் போவது போலிருக்கும் எங்கள் தாராவியில்!” என்றபடி சிரிக்கிறார் அவர்.


ஆங்காங்கே தடுப்புகள் போடப்பட்டிருப்பதாலும் தாராவி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அய்ந்து நிமிடங்களில் ஒரு பாலத்தைக் கடந்து மிகப் பெரிய மருத்துவமனையை அடைய முடியும். அந்தப் பாலம் இப்போது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஊரைச் சுற்றிக் கொண்டு அலைந்துத் திரிந்து அந்த மருத்துவமனைக்கு இப்போது போக வேண்டிய அவல நிலை. பல்வேறு சாலை கள் தடுக்கப்பட்டுள்ளதும் இன்னல்களுக்குக் காரணம் என்று சலித்துக் கொள்கிறார்கள் தாராவி வாசிகள்.


சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. பல மருந்த கங்கள் தேவைப்படும் மருந்துகள் இல்லை என கைவிரிக் கின்றன. அய்ந்நூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தாள்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட போது மக்கள் எப்படி அல்லல்பட்டார்களோ அப்படி இப்போதும் அவசரத் தேவைகளுக்காக அங்கும் இங்கும் அலைகிறார் கள்.


“தாராவியிலிருந்து வருகிறோம் என்றாலே பல மருத்து வர்கள் எங்களை விரட்டியடிக்கிறார்கள். மளிகைக் கடைகள் திறக்கலாம் என்கிறார்கள். அங்கே பணிபுரிகிறவர்களை வீட்டிலேயே கிட என்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை!” என்று புலம்புகிறார் இன்னொரு தாராவி வாசி.


வாழ்வாதார இழப்பு!


தாராவி ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாபு கான் என்பவர் தாராவி மக்கள் ஆதரவற்ற அனாதை களாகி விட்டோம் என்று வேதனையுடன் கூறுகிறார். “புலம் பெயர்ந்து இங்கே குடியேறிய தொழிலாளர்களால் பல தொழில்கள் இங்கே வளர்ச்சியடைந்துள்ளன. பத்து லட்சத்திற்கும் அதிகமான ஏழைத் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து தாராவியில் குடியேறியுள்ளனர். தாராவியை ஏறத்தாழ ஒரு வர்த்தக மய்யமாகவே மாற்றி விட்டார்கள் அவர்கள். சுயமாகத் தொழில் செய்து பிழைத்து வந்தவர்கள் இப்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். பி.எம்.ஸி. எனப்படும் மும்பை முனிசிபல் மாநகராட்சி மட்டுமே தாராவியைப் பராமரித்து வருகிறது. மாநில அரசும் மத்திய அரசும் தாராவியை அலட்சியப்படுத்தி விட்டன!” என்கிறார் அவர். புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் விருப்பப்படி அவர்களை சொந்த ஊர்களுக்கு காலதாமத மின்றி அனுப்பி வைத்தால் நல்லது. இது பல விதங்களில் நன்மை தரும் என்பதும் இவருடைய வாதம்.


ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தாராவிக்கு வந்து இத்த னைக் காலமும் உழைத்து வந்த திரிவேணி யாதவ் என்ற ஏழைத் தொழிலாளி கண்ணீர் மல்கக் கூறுகிறார் - “எங்களைப் போகவாவது விடுங்களேன் அய்யா! நான் கரோனா வைரசால் இறந்தாலும் என் குடும்பத்தினர் கண் முன்னால் இறப்பேனே!”


கருநாடக மாநில குல்பர்காவிலிருந்து இடம் பெயர்ந்து தாராவியில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் ஹசீனா ஷேக் என்ற பெண்மணியின் துயரம் சற்று மாறு பட்டது.


“நான் குல்பர்கா போகமாட்டேன்! இரண்டு சகோதரர்கள் அங்கே ரிக்ஷா இழுக்கிறார்கள் என்னையுமா இழுப்பார் கள்?” என்று கேட்கிறார்.


“இங்கேயே வாழ வழி செய்யுங்கள். ஊரடங்கு ஆரம் பித்த போது இலவசமாக கோதுமையும் அரிசியும் கொடுத் தார்கள். இப்போது அதுவும் இல்லை. மூன்று வாரங்களாக பால்கூட  வாங்க காசில்லாமல்  தவிக்கிறேன். யாராவது உணவுப் பொட்டலம் போடுவார்களா என்று ஒவ்வொரு இரவும் பிச்சைக்காரி போல் காத்திருக்கிறேன்” என்றபடி கதறுகிறாராம் இந்த கணவனை இழந்த ஹசீனா?


நாற்பது வருடங்களாக தாராவியில் காலம் தள்ளி வரும் அங்குபாய் என்ற பெண்மணி - “என் வாழ்நாளில் இயற்கை யின் இப்படிப்பட்ட கோணல் புத்தியைக் கண்டதேயில்லை!” என்கிறார் விரக்தியோடு.


“எல்லோரும் எல்லாவற்றுக்காகவும் வெளியில் வரிசை யாகக் காத்திருக்கிறார்கள். காத்திருப்பதிலேயே இவர்களு டைய வாழ்வு முடிந்து போகும் என்று தோன்றுகிறது” என்றபடி புலம்புகிறார் அங்குபாய்.


மக்களின் இத்தனைத் துயரங்களுக்கு மத்தியிலும், எதுவும் நடக்காதது போல் அலட்சியப் பார்வையுடன் ஏழைகளை ஒதுக்கித் தள்ளும் ஆணவக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதர்களில் எத்தனையோ நிறங்கள்! மனிதநேயம் என்றால் என்னவென்றே தெரியாத சிலருக்கு தாராவி மக்களின் வேதனை ஒரு வேடிக்கையா கவே உள்ளது. அதையும் பொறுத்துக் கொண்டு, ‘பராசக்தி’ வசனம் போல் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடிவிட்டார்கள் தாராவிவாசிகள்.


நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள்


சோர்வடைந்த தாராவிவாசிகள் சிலிர்த்தெழுந்து வருகிறார்கள். நோய்த் தொற்று எவரிடம் காணப்பட்டாலும் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புகிறார்கள். சமூக வலைதளங்களில் கேட்கப்படும் உற்சாகமூட்டும் பாடல்களை வரவேற்கிறார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி சக மனிதர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். அவசர உதவி மய்யங்களை நாடி வருகிறார்கள். கரோனா வைரசுக்கு எதிரான போரில் தாராவிக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.


மருத்துவர்கள் தாராவி முழுவதும் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரித்து வருகின்றனர். மே 8ஆம் நாள் வரையில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் நோய்த் தொற்று பற்றிய விசாரணைகள் நடந்துள்ளன. மூத்த குடிமக்கள் ஏழாயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை அண்மையில் நடந்துள்ளது. 250 முதியவர்களின் ‘உடலில்’ பிராணவாயு குறைபாடு கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, சில அறிகுறிகள் கண்டறியப்பட்டாலே பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தாராவி குடியிருப்புகளிலிருந்து மட்டும் இதுவரை 2480 பேர் பல் வேறு மய்யங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புள்ளி விவரங்களின்படி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தாராவியில் பாதிக்கப்பட்டவர்கள் 808. சிகிச்சை பலனளிக் காததால் உயிரிழந்தவர்கள் 26 பேர்.


தாராவி மண்டலப் பொறுப்பில் உள்ள அதிகாரி திகவ்கர் நம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார். “நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் பலர் இம்மாத இறுதிக்குள் நலம் பெற்று திரும்பக் கூடும்“ என்கிறார் அவர்.


தனிமைப்படுத்துதல், தனி மனித விலகல், இடைவெளி எல்லாமே வரவேற்புக்குரியவை என்றாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதில் மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் அதிக அக்கறை காட்ட வேண் டும் என்கின்றனர்.


உழைத்தால் தான் ஊதியமும் உணவும் என்ற நிலையில் உள்ளவர்களின் அத்தியாவசியத் தேவைகள் எல்லாவற் றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது மும்பையில் தொண்டாற்றிவரும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்களின் கருத்து.


“அறிவியல் கண்ணோட்டம் எல்லாவற்றையும் விட முக் கியம். விஞ்ஞானம் என்றுமே தோல்வியடையாது. கரோனா வுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றியடைவோம். நாம் வளைந்தாலும் உடைந்து போக மாட்டோம்!” என்று உறுதிப்படுத்துகின்றனர் மும்பையில் வாழும் பல உயர் அதிகாரிகளும், அறிஞர்களும். தாராவி மக்களின் துயர் நீங்கும் என்று நாமும் நம்பிக்கை கொள்வோம்.


நன்றி: ‘தி இந்து’


ஆங்கில நாளிதழ், 9.5.2020


No comments:

Post a Comment