உயர் ஜாதியினரின் கிளர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

உயர் ஜாதியினரின் கிளர்ச்சி


இந்தியாவில் இந்து தேசியவாதத்தின் எழுச்சி ஜனநாயகத்தின் சமத்துவ கோரிக்கைகளுக்கு எதிரான உயர் ஜாதியினரின் கிளர்ச்சியாகக் காணப்படுகிறது. இந்துத்துவா திட்டம் உயர்ஜாதியினரின் பாதுகாப்புப் படகாக உள்ளது. சமூகத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை மீட்டெடுக்க உறுதி அளிக்கிறது.


இந்திய மண்ணில் ஜாதிகளை ஒழித்து, சமத்து வத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடும் முற்போக்கு இயக்கங்களுக்கு இந்து தேசியவாதத்தின் எழுச்சி மிகப் பெரும் பின்னடைவாகும். இந்தப் பின்னடைவும், இந்து தேசியவாதத்தின் எழுச்சியும் தானாகவே நடந்து விடவில்லை. மக்களாட்சி சமத்துவத்தையும், சமூக நீதியையும் வலியுறுத்துகிறது. நம் நாட்டில் தற்போது நிகழ்ந்துவரும் இந்து தேசியவாதத்தின் எழுச்சியை, இந்த நிர்பந்தங்களுக்கெதிரான பார்ப்பன - உயர்ஜாதி யினரின் கிளர்ச்சியாகவே கருதவேண்டும்.


இந்துத்துவமும், ஜாதியும்


இந்து தேசியவாதத்தின் அடிப்படைக் கோட் பாடான இந்துத்துவத்தின் கூறுகளைப் புரிந்துகொள்வது அப்படியொன்றும் கடினமல்ல. வி.டி.சவார்க்கர் எழு திய 'இந்துத்துவத்தின் அடிப்படை' (Essentials of Hindutva, V. D. Savarkar, 1923) என்ற நூலில் இது தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. தொடக்ககால இந்துத்துவ சிந்தனையாளர்களில் ஒருவரான எம். எஸ். கோல்வால்கரால் அவை மேலும் விரிவாக்கப்பட்டன. ‘இந்திய நாடு இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம்’ என் பதே இந்துத்துவ தத்துவத்தின் மூலக்கரு. இந்துக்கள் என்ற சொல் இந்து மதத்தினரை மட்டும் குறிப்பதாக அல்லாமல் சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஆகி யோரையும் உள்ளடக்கிய கலாச்சார அடையாளமாக முன்வைக்கப்பட்டது. இந்த மண்ணிற்கு வெளியே தோன்றிய மதங்களைப் பின்பற்றுவர்கள் என்பதால் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இதிலிருந்து வேறு படுத்தப்பட்டனர். தொடக்கக் காலங்களில் இந்துத்துவக் கோட்பாடுகளை மெய்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் முட்டாள்தனமானதாகவும், அறிவுக்கு ஒவ்வாதனவாகவும், அறிவியல் உண்மைகளுக்கு எதி ரானதாகும் இருந்தன. சான்றாக, இந்துக்கள் அனை வரும் ‘ஆரியர்கள்’ என்ற ஒரே இனத்தைச் சேர்ந்த வர்கள் என்று கோல்வால்கரின் கூற்றைக் கூறலாம்.


இந்தக் கூற்று பொய்யானதென்பதை மெய்ப்பித்த தற்கால அறிவியல் சான்றுகள் கிடைக்காத அந்தக் கால கட்டத்தில்,  கோல்வால்கர், ஆரியர்கள் வட துருவத்தில் இருந்து வந்தார்கள் என்ற இல்லாத ஒரு கண்டுபிடிப் பைப் பற்றி பிதற்றினார். ஒரு காலகட்டத்தில் வட துருவமே இந்தியாவில் இருந்தது என்றும் விளக்கினார்:


... வட துருவம் பண்டைய காலத்தில் இன்று நாம் பீகார், ஒரிசா என்று அழைக்கும் பகுதிகளில் இருந்தது ...... பின் வட கிழக்காகவும், பிறகு மேற்காகவும், அதன் பிறகு வடக்காகவும் இப்படியும் அப்படியுமாக நகர்ந்து, நம்மை விட்டு விலகிப் பிரிந்து இப்பொழுது இருக்கும் இடத்துக்குச் சென்று விட்டது... (கோல்வால்கர் 1939, பக்கம் 8)


இந்தியாவின் சில நிலப்பரப்புகள் இப்படியும் அப்படியுமாக நகர்ந்து வட துருவத்துக்கு சென்றுவிட்ட போது, எப்படி ஆரியர்கள் மட்டும் இங்கேயே இருக்க முடிந்தது என்பதை கோல்வால்கர் விளக்கவில்லை. இதுபோல இந்தியர்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசினார்கள் என்பதற்காகவும் சில புனையப்பட்ட வாதங்களை முன்வைத்தார்.


இந்துத்துவ மொழியில் ஜாதியம்


இந்திய நாட்டை ஒருங்கிணைத்ததாக அவர்கள் போற்றும் பண்டைய கலாசாரத்தையும், அதன் அடிப் படைக்கூறான ஏற்றத்தாழ்வு நிலைகளையும் மீட் டெடுப்பது இந்துத்துவ வேலைத் திட்டத்தின் மற்றொரு முதன்மை நோக்கமாகும். ஜாதி அமைப்பு அல்லது குறைந்தபட்சம் நால்வர்ண படிநிலைச் சமூகம் என் பதே அத்தகைய சமூகத்தின் அடிக்கட்டுமானமாகும். "நாம், நமது" என்ற முழக்கங்களோடு உருவாக்கப்படும் இந்து தேசியம் என்ன என்பதை "இந்து சமூக அமைப் பின் அடித்தளமாக வர்ணாசிரம முறையும் குருகுல கல்வி முறையும் இருக்கிறது" என்று கோல்வால்கர் விளக்கமளிக்கிறார். அவர் எழுதிய 'எண்ணங்களின் தொகுப்பு' (Bunch of Thoughts) என்ற இந்துத்துவ கொள்கை விளக்க நூலில் இந்தக் கருத்துகள் மேலும் விரிவாக விளக்கப்படுகின்றன. அந்நூலில் வர்ணாசிரம முறையை சமூக நல்லிணக்கத்திற்கான சிறந்த அமைப்பு முறையென்று அவர் போற்றுகிறார். வர்ணாசிரம முறையை நியாயப்படுத்துவதற்காக 'வர்ணாசிரம முறை ஏற்றத்தாழ்வுகளை போதிக்கவில்லை' என்ற முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பொய்யை யும் முன்வைக்கிறார்.


கோல்வால்க்கருக்கும் மற்ற இந்துத்துவவாதிகளுக் கும் ஜாதி அமைப்பு ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் ஜாதியம் பற்றிப் பேசுவது அவர்களை சங்கடப்படுத்து கிறது. இந்துத்துவ மொழியில் ஜாதியம் என்பது ஜாதிப் பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வு களையும், தீண்டாமை யையும் குறிப்பது அல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக, இட ஒதுக்கீட்டுக்காக நடத்தும் போராட்டங்களையும் மற்ற சமத்துவத்துக்கான முன்னெடுப்புகளையும் ‘ஜாதியம்’ என்று பெயரிட்டு, அவற்றை இந்து சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியாக சித்தரிப்பது அவர்கள் வழக்கமாக இருக்கிறது.


இந்து தேசியவாதத்தை தூக்கிப் பிடிக்கும் முதன்மை இயக்கமான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இந்தக் கொள்கைகளில் உறுதியான நிலைப்பாடுடையது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான ராம் மாதவ் சமீபத்தில் இந்தியன் எக்ஸ் பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜாதி அமைப்பு இந்தியாவின் ஆன்மாவில் கலந்தது என்று கூறியதோடு ‘உண்மையான பிரச்சினை ஜாதி அமைப்பு அல்ல, ஜாதியமே’ எனவும் தெரிவித்திருக்கிறார்.


ஜாதி அமைப்பு தான் சமூகத்தை ஒருங்கிணைப்பதற்கான வழி?


உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசின் முதலமைச்சர் யோகி ஆதித்யா னந்தர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் இதற்கு ஒரு விளக்கத்தைத் தந்தார். கோல்வால்க்கரைப் போலவே அவரும் ஜாதி என்பது சமூகத்தை நல்வழியில் செலுத்துவதற்கான கருவி என்றார். விவசாய நிலத்தில் எப்படி பள்ளங் களும், மேடுகளுமாக பாத்திகள் அமைக்கப்படுகின் றனவோ, அதுபோல இந்து சமூகம் உயர்வு, தாழ் வுள்ளாதாக அமைக்கப்பட்டிருப்பது சமூகத்தை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பதற்கு அவசியமானது எனவும், ஜாதி அமைப்பு பிரச்சினையே இல்லை, ஜாதியமே பிரச்சினை என்றும் கூறினார்.


வேறு ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, இந்துத்துவவாதிகள் பதிலளிக்க வேண்டிய மற்றுமொரு இன்றியமையாத கேள்வி பிறக்கிறது. ஜாதியால் பிளவு பட்டிருக்கும் ஒரு சமூகத்தை எப்படி ஒன்றிணைக்க முடியும்? என்பதே அக்கேள்வியாகும். இதற்கு எளி தான பதிலாக, ஜாதி அமைப்பு தான் பிரிவினைக்கான காரணம் என்பதை மறைத்து, அதுவே ஒருங்கிணைப் பதற்கான வழி என்பதாகச் சித்தரிப்பதற்கு இந்துத்துவ வாதிகள் முயல்கிறார்கள். இந்தக் கருத்தை ஒடுக்கப் பட்ட மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், யோகி ஆதித்யானந்தர் தன் பேட்டியில் கூறிய கருத்தை, வேறெங்கும் வெளிப்படையாகப் பேசமாட் டார்கள். அதே சமயம் இந்துத்துவவாதிகள் எப்போதும் ஜாதி அமைப்பை எதிர்த்துப் பேசமாட்டார்கள் என் பதைக் கவனிக்க வேண்டும்.


சில நேரங்களில் இந்துத்துவத் தலைவர்கள் தீண்டாமையை எதிர்த்துப் பேசுவது, அவர்கள் ஜாதி அமைப்பை எதிர்க்கிறார்களோ என்று நம்மை எண்ணத் தூண்டும். சவார்க்கர் தீண்டாமையை எதிர்த்தது மட்டுமல்லாமல், தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடத்திய 'மகத் சத்தியாகிரகம்' என்ற ஒத்துழையாமைப் போராட்டத்துக்கும் ஆதரவளித்தார். ஆனால் தீண்டாமையை எதிர்ப்பதும், ஜாதி அமைப்பை எதிர்ப்பதும் ஒன்றல்ல. உயர்ஜாதியினர் ஜாதி அமைப்பை நியாயப்படுத்துவதும், தீண்டாமையை அதன் தற் காலத்திய திரிபாக சித்தரிப்பதும் புதியது அல்ல.


நிலையற்ற ஆட்சியதிகாரம்


பண்டைய சமூகத்தின் ஜாதிப் படிநிலை அமைப்பை மீட்டெடுத்து, உயர் ஜாதியினரை அதன் மேல் அடுக்கு களில் வைத்திருக்க உறுதியளிக்கும் இந்துத்துவ வேலைத் திட்டம், உயர் ஜாதி மக்களுக்கு ஒரு நம் பிக்கை ஒளி. எனவே தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் உயர் ஜாதி மக்களிடையே செல்வாக்கோடு விளங்கு கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களாக இதுவரை இருந்தவர்களில் ஒரே ஒருவரைத் (ராஜ்நாத் சிங் - ராஜபுத்திரர்) தவிர அனைவரும் பார்ப்பனர்களே. சவார்க்கர்,  ஹெட்ஜ்வார், கோல்வால்க்கர், நாதுராம் கோட்சே, ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்தி யாயா, மோகன் பகவத், ராம் மாதவ் போன்றவர்கள் உள்ளிட்ட அதன் முதன்மைத் தலைவர்களில் பெரும் பாலானோர் பார்ப்பனர்கள் தான். காலப்போக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் ஜாதியினருக்கு அப்பா லும் தன் அமைப்பை விரிவுபடுத்தியிருந்தாலும், உயர் ஜாதியினரே அதனுடைய நம்பகத்தன்மையுள்ள அடித் தளமாக விளங்குகிறார்கள்.


நாடு விடுதலை அடைந்து மக்களாட்சி முறை நிறுவப்பட்ட பிறகு உயர்ஜாதியினரின் மேலாதிக்கத் திற்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவர்களைக் காப் பாற்றும் உயிர் காற்றாகவே இந்துத்துவத்தை அவர்கள் பார்க்கிறார்கள். இருப்பினும் விடுதலை அடைந்த பிறகும்,  இன்றுவரை உயர் ஜாதியினர் தங்களது ஆதிக் கத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக்கொண்டு தான் வந்திருக்கிறார்கள். 


சான்றாக, அலகாபாத் நகரில் அதிகாரமும், செல் வாக்கும் உள்ள பதவிகளில் (வழக்குரைஞர்கள் சங்கம், பத்திரிகையாளர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், தன்னார்வ நிறுவனங்களின் பதவிகள் போன்ற அமைப் புகளின் தலைவர்கள், காவல்துறை உயர்பதவிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பதவிகள்) இருப்பவர்கள் யார் என்பது குறித்து 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அத்தகைய பதவிகளில் 75% பதவி கள் உயர்ஜாதியினர் வசம் இருப்பது தெரியவந்தது. இத்தனைக்கும் உத்தரப் பிரதேச மக்கள் தொகையில் உயர்ஜாதியினர் வெறும் 16% மட்டுமே இருக்கிறார்கள். பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டும் 50% பதவி களில் இருந்தனர். அரசாங்கத்தில் உள்ள பதவிகளை விட, வணிகர் சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போன்ற தனியார் அமைப்புகளிலும் கூட மேல்ஜாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது வியப்பான உண்மை.  அலகாபாத்தில் மட்டுமல்ல, மற்ற பெரிய நகரங்களிலும் ஊடகத்துறை, கிரிக்கெட் விளை யாட்டுக் குழுக்கள், அரசாங்கத்தின் உயர்பதவிகள், பெருநிறுவனங்களின் மேலாண்மைப் பொறுப்புகள் போன்ற செல்வாக்கான பதவிகளில் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.


- குடந்தை கருணா


ஆங்கில மூலம்: (The revolt of the Upper Castes – Jean Dreze)


ஜீன் டிரஸ், வருகை தரு பேராசிரியர், பொருளாதாரத் துறை, ராஞ்சி பல்கலைக்கழகம்


ராஞ்சி - 20 பிப்ரவரி, 2020


No comments:

Post a Comment