கரோனாவும் 'நடத்தை பொருளாதாரமும்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

கரோனாவும் 'நடத்தை பொருளாதாரமும்!'


அறிவியல் பிரிவுகளில் மக்களின் நடத்தை களையொட்டியவைகளை ஆய்வு செய்தல் Behavioural Science என்று குறிப்பிடுவதுண்டு.


அதேபோல, பொருளாதாரத்திலும்கூட மக்க ளின் நடத்தையையொட்டியே இப்போது பல வகை பிரிவுகளை பொருளியல் ஆய்வு அறிஞர் கள் பகுத்துக் கூறுகின்றனர். எழுதுகின்றனர்.


அதில் ஒன்று Behavioural Economics  என்ற 'நடத்தை முறைகளையொட்டிய பொருளா தாரம்' என்பதும் ஆகும்.


கரோனா தொற்று உலகத்தை ஊரடங்குக்குள் தள்ளி, ஆட்களின் வெளி உலகச் செயல்களை மட்டுமா முடக்கியுள்ளது? அதோடு கூட, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்திற்கே சவால்விட்டு முடக்கியுள்ள வேதனையான நிலையும் வேகமாக மக்களை மிரட்டுகிறது!


இதன் பாதிப்பின் விளைவைச் சந்திக்காத ஜன சமூகமே பெரிதும் இல்லை. தொழில்துறைகளில்கூட தொழில் திமிங்கிலங்கள் முதல் சின்ன மீன் வரை அனைவரையும் கரோனா ஒரு புரட்டிப் போட்டு பதம் பார்க்கத் தவறவில்லை.


ஏழை, எளிய மக்கள் நோய்க்குப் பயந்து வீட் டில் முடங்கினால், பசியும் பட்டினியும் அந்த உழைப்பை நம்பிய மக்களை வாட்டி "வதைத்துச் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் - இம்மக்கள் நிலை சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்று குமுறிடும் நிலைதான் கரோனா தந்த பரிசு!


மனிதன் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொண்டு சமாளித்து வாழப்பழகி விட்டான்.


சுனாமிகளும், பூகம்பமும் போன்ற சொல் லொணா கொடுமைகளை தங்கள் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஜப்பானிய பெருமக்கள் மனந்தளர்ந்தவர்களாகி விடுவதில்லை.


எவ்வளவு சேதம், இழப்பு என்றாலும் அதையும் சகித்து, ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து புதுவாழ்வினைத் துவக்குவது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்கள் - ஆதலால், அதிக வயதின ரையும், சராசரி அதிக வயதுடையவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் ஜப்பான் இருக் கிறது!


சுனாமி, சூறாவளி, பயங்கர பூகம்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மனதளவில் தன் னம்பிக்கை இழக்காமல் தன்னெழுச்சி கொண்ட மக்களாகி, உழைப்பிலும் பண்பிலும் நல்ல குடி மக்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.


அவர்களது அன்றாட நடத்தைப் பொருளியல் வாழ்க்கை முறை (Behavioural Economics) மூலம் நாம் - இந்த காலகட்டத்தில் கற்றுக் கொண்டு நம்மை நாமே மீட்டெடுப்பதில் முழு கவனம் செலுத்துபவர்களாக மாற வேண்டும்


பூகம்பத்திற்கு பிறகு அந்தத் தீவில் (அங்கே பல தீவுகள் உள்ளன அல்லவா!) சில கடைகள் திறக்கப்படுகின்றன. மக்கள் பொருள்கள் வாங்கி, மீண்டும் ஒரு புதுவாழ்வு 'கணக்குத்திறக்க' முற்படுகிறார்கள். கடைக்குள் நீண்ட 'க்யூ' நிற்கிறது!


ஒரு அம்மையார் 2 பொட்டலம் சர்க்கரையை எடுத்து தனக்கென பில் போட செல்லுமுன் ஒரு கணம் யோசிக்கிறார். அங்கே அப்பொருள் இருப்பு அதிகம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, தான் எடுத்து வந்த இரண்டு பொட்டலம் சர்க்கரையில் ஒரு பொட்டலத்தை திருப்பிக் கொண்டு வந்து வைத்துவிட்டு வருகிறார், கார ணம் பின்னால் வருகிறவர் ஏமாற்றம் அடையக் கூடாதே! என்னே பரந்த மனிதநேயத்தின் மாண்பு அவரிடம் பளிச்சிட்டது!


இந்த சூழலில் மற்ற நாடுகளில் - ஏன் அமெ ரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பொருள் கள் பேரங்காடிகளில் (Super Marketகளில்) குவிந்தவை சிலமணிகளில் காலியாகி விட்டச் செய்தி, அள்ளிக் கெண்டு பத்திரப்படுத்தும் அப் பட்டமான தன்னலம் தலைவிரித்தாடுகிற நடத் தையையும் பார்க்கிறோம்.


என்றாலும் ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருக் கும் நிலையில், பெரிதும் துரித உணவுக் கடைகள் உட்பட மூடிக்கிடந்தாலும், வீட்டின் அம்மாவின் சமையல் கூடம் 'Mom's Kitchen' மிகவும் சுவைத்தது மட்டுமல்ல - முதல்முறையாக வளர்ந்த பிள்ளைகளுக்கும் கூட.


இதனால் உடல் நலமும் கெடவில்லை; பணச் செலவும் குறைந்தது என்பது ஒரு நல்ல நடத்தைப் பொருளாதார ஏற்றத்திற்கு (Behavioural Economics) வழிவகுத்தது.


அதனை நிரந்தரமாக்கி நீள்பயன் பெறுவோம்!


(நாளை ஆராய்வோம்)


No comments:

Post a Comment