புலம் பெயர்ந்தவர்களின் பரிதாப நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

புலம் பெயர்ந்தவர்களின் பரிதாப நிலை

கரோனாவையொட்டி ஊரடங்கு தொடர்ந்து கடைப் பிடிக்கப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்ய வந்த தொழிலாளர்கள் தம் குடும்பங்களின் நிலை மிகவும் இரங்கற்தக்கது.


சொந்தவூர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏனெனில் புலம் பெயர்ந்த இடத்தில் வேலையில்லை; அன்றாடம் வேலை செய்தால்தான் வீட்டில் சோறு என்னும் பரிதாப நிலை.


சொந்த மாநிலங்களுக்குச் செல்லுவதிலும் சிக்கல்; காரணம் இரயில் இல்லை; போக்குவரத்து அறவே முடங்கி விட்டது. எப்படியும் சொந்த மாநிலத்தில் உள்ள சொந்தவூருக்குச் சென்றே தீர வேண்டும் என்ற ஒரு வெறியில் நடைப் பயண மாகச் செல்லுவது என்று  முடிவு செய்து நடைப் பயணத்தையும் மேற்கொண்டு விட்டனர்.


முதியவர்கள், குழந்தைகள், சாமான்களின் மூட்டைகள் இவற்றை எல்லாம் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.


அவர்களின் இந்த நிலையை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். மனிதநேயம் ஓர் இழை அளவுக்கு உள்ளவர்களின் இதயத்தில்கூட இரத்தப் பெருக்கு வெடித்துக் கிளம்பும்.


பல நூறு மைல்கள் கடந்து சென்ற நிலையில் இடையில் உயிர் விட நேர்ந்தவர்களும் உண்டு. பயணத்தில் உணவுக்கு வழியில்லை. கையில் இருந்த காசு எத்தனை நாளுக்குத்தான் தாக்குப் பிடிக்கும்?


அப்படியே மீதி மிச்சம் இருந்தாலும் எந்த உணவுக் கடைகளும் கிடையாது. கரோனாவால் மூடப்பட்டு விட்டன. அப்பப்பா! இந்தக் கொடுமை கொடிய விரோதிகளுக்கும்கூட ஏற்பட்டு விடக் கூடாது.


இதற்கிடையே பல விபத்துகள்; மகாராட்டிர மாநிலத்தில் கடந்த வாரம் பயணத்தின்போது இரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்த 16 தொழிலாளர்கள் இரயில் ஏறி மடிந்தனர்.


மகாராட்டிரத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் சொந்த ஊருக்கு லாரியில் (ஒருவருக்கொருவர் கசங்கிப் பிழியும் நிலையில் படியை - ஆள்கள் தொற்றிக் கொண்டு செல்லும் அவலம் - எல்லாம் உண்டு) சென்ற போது மத்தியப் பிரதேசம் குணா என்னும் ஊரில், லாரிமீது பேருந்து ஏறி அந்த இடத்திலேயே எட்டு பேர் மரணம்!


அதே மே 13 அன்று பஞ்சாபில் இருந்து பீகாருக்கு நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்மீது பேருந்து மோதி ஆறு பேர் சாவு!


உத்தரப்பிரதேசத்தில் நின்று  கொண்டிருந்த லாரியின் மீது மற்றொரு லாரி மோதி புலம் பெயர்ந்த 24 தொழிலாளர்கள் உடல் சிதறி மடிந்தனர். 28 பேர் படுகாயம்!


கரோனாவைவிட இந்தக் கொடுமை மிகக் கொடியது. இதற்கு என்னதான் முடிவு?


மத்திய - மாநில அரசுகள் தக்க தருணத்தில் புலம் பெயர்ந்தவர்களை சொந்தவூர்களுக்கு அனுப்புவதற்கான ஏற் பாடுகளைச் செய்திருந்தால் இந்தக் கொடூரம் நடந்திருக்குமா?


இப்பொழுதுகூட சென்னை சென்ட்ரல் இரயில் நிலை யத்திற்குப் புலம் பெயர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லுவதும், அவர்களைக் காவல்துறையினர் விரட்டியடிப் பதும் நடத்து கொண்டு தானிருக்கிறது.


இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. மகாராட்டிர மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 400க்கு மேற் பட்டவர்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவின் மீது நீதிபதிகள் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பதில் கூற வேண்டும் என்று தாக்கீது அனுப்பியுள்ளனர்.


மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரையும் வழக்கில் சேர்த்துள்ளது உயர் நீதிமன்றம்.


புலம்பெயர்ந்தவர்களின் பட்டியல் உள்ளதா? அவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் செய்த உதவிகள் என்ன? மாநில எல்லையைக் கடந்து செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா? தடுக்கப்பட்டுள்ளனரா? அப்படி தடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்குச் செய்யப்படும் அடிப்படை வசதிகள் என்ன?


பயணத்தின்போது விபத்துகளில் இறந்தவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்? இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா?


எவ்வளவுப் பேர் இரயில்கள், பேருந்துகளில் அனுப்பப் பட்டுள்ளனர்? எஞ்சியவர்களை அனுப்பிட என்ன திட்டம்? என்று மிகச் சரியான, தேவையான அடுக்கடுக்கான வினாக் களுக்கு ஆக்கப்பூர்வமாக விடையளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது!


இந்த வினாக்களுக்கு நியாயமான விடைகள், ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் மத்திய - மாநில அரசுகள் வசம் இருந்திருந்தால் இவ்வளவு இறப்புகளும், இழப்புகளும் ஏற்பட்டு இருக்காதே!


No comments:

Post a Comment