கரோனாவின் (கோவிட் - 19) கடும் சவாலை நாளும் எதிர்கொண்டு எண்ணற்ற நாளேடுகள் நாள்தோறும் அணிவகுத்து வருவதை எண்ணி பெருமைப்படுகின்ற அதேவேளையில், மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கின்ற வகையில் ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் தினப்பலன், வார ராசிப்பலன், மாத ராசிப்பலன் என்று வரிசை கட்டிக்கொண்டு வெளியிட்டு மக்களை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தில் மூழ்கடிக்கும் வேலையை நாளிதழ்கள் போட்டிபோட்டுக் கொண்டு செய்துவருவது சமூகநல ஆர்வலர்களை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, பகுத்தறிவாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
இனமீட்பாளர் தந்தை பெரியார் அவர்களால் 1935ஆம் ஆண்டு துவக்கப்பட்ட விடுதலை நாளேடு இன மீட்சிக்காக - இன எழுச்சிக்காக 85 ஆண்டுகளாக ஒரு நாத்திக நாளேடு தொடர்ந்து வெளிவருவது என்பது ஓர் இமாலயச் சாதனையாகும்.
விடுதலை நாளிதழ் துவங்கி 85 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கு ஏற்பட்ட சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள், நீதி மன்ற வழக்குகள், ஏளனப் பேச்சுகள் என்று எத்தனை எத்தனை? அப்பப்பா சொல்லி மாளாது !
ஆனால் அத்தனை வசவுகளையும், எதிர்ப்புகளை யும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் துணிவுடன் எதிர் கொண்டு 58 ஆண்டுகளாக விடுதலை நாளேட்டை தனித்தன்மையுடன் தங்குதடையின்றி செவ்வனே நடத்தி வருவது என்பது தமிழர் தலைவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
இன எழுச்சி நாளேடான விடுதலை நாளேட்டின் வாயிலாக சமூகநீதி - இடஒதுக்கீட்டை வென்றெடுத்து அதன்மூலம் நமது இனமக்கள் கல்வி - வேலை வாய்ப்பைப் பெற்று சமுதாயத்தில் ஏற்றம் பெற்றோர் ஏராளம்! ஏராளம்! மேலும் பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றை அவ்வப்போது வலியுறுத்தி வருவதும் போராடி வருவதும் விடுதலை நாளேடு மட்டுமே! அதன்பயனாய் தற்போது கல்வி வேலைவாய்ப்பில் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் பெருமளவு அங்கம் வகிப்பதற்கு முக்கிய பங்காற்றியது விடுதலை ஏடு!
கடந்த 85 ஆண்டுகளாக விடுதலை ஏடு ஆற்றிய அளப்பறிய பணி, ஓய்வறியா உழைப்பு ஆகியவை மகத்தானது உயர்வானது, உன்னதமானது. ஆம், விதியை நினைத்து வெந்ததைத் தின்று வீதியில் உறங்கிக் கிடந்த பாமர மக்களை தட்டி எழுப்பி அவர் களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்வையும் ஊட்டியது விடுதலை ஏடு!
விடுதலை நாளேடு வெறும் காகிதம் அல்ல - அறிவாயுதம்! எனவேதான் இனத்தின் எழுச்சிக்காக - மீட்சிக்காக எந்த ஏடும் சொல்ல முன்வராத , சொல்லத் துணியாத முற்போக்குச் சிந்தனைகளை, பகுத்தறிவுக் கருத்துகளை, சமூகநீதி - இடஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்துவதோடு இனத்தின் கேடுகளைக் களைந் தெறியும் அறிவாயுதமாகத் திகழ்கின்ற விடுதலை நாளிதழை இளைஞர்களும், மாணவர்களும் நாள் தோறும் ஆவலுடன் படித்து அவற்றை நேசித்தும், மூச்சுக்காற்றாய் சுவாசித்தும் வருகின்றனர் என்பது தேனினும் இனிய செய்தியாகும்.
இளைஞர்களின் அறிவாயுதமாகத் திகழ்கின்ற விடுதலை நாளேட்டிற்கு ஜூன் 1-ஆம் தேதி 86 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு வாசகர்களை ஊக்கப் படுத்தும் வகையில், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக வாசகர்களிடையே கலந்துறவாடிய பாங்கு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ஆசிரியர் அவர்களின் கருத்தாழ மிக்க கருத்துரைகள் மற்றும் வாசகர்களின் அடுக்கடுக் கான கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை நயம்பட எடுத்தரைத்ததின் மூலம் வாசகர்கள் மத்தியில் உற்சாகப் பெருக்கு கரைபுரண்டோடியது மட்டுமல்லால் தங்கள் உடலில் புதிய ரத்தம் பாய்ச்சியது போன்ற ஓர் புத்துணர்வைப் பெற்றனர்.
இவ்வாறு திராவிட இனத்தைப் பாதுகாக்கும் கேடயமாகவும், இன எதிரிகளை வீழ்த்தும் வாளாகவும், இளைஞர்களின் அறிவாயுதமாகவும் விளங்குகின்ற விடுதலை நாளேட்டை திக்கெட்டும் கொண்டுசென்று பரப்ப இளைஞர்களும், மாணவர்களும் உறுதி மேற் கொண்டுள்ளனர். ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தோள் கொடுப்போம், துணை நிற்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க விடுதலை நாளேடு !
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.
No comments:
Post a Comment