முதுமை: இன்பத் திளைப்பா, துன்பத் துளைப்பா! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

முதுமை: இன்பத் திளைப்பா, துன்பத் துளைப்பா! (2)


நேற்று "15 - ஜூன்" என்பது ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்‘ என்பதால் அது பற்றிய - முதியோரை மதிப்பதும், பாசப் பிணைப்பில் அவர்களைக் கட்டிப்போட்டு, மனதில் கனமற்ற, சினமற்ற சீரிய வாழ்வுக்குரியவர்களாக அவர்களை ஆக்குவதும் நமது சுயமரியாதை வாழ்வியலின் முக்கிய அம்சம் என்பதை விளக் கிடவே புரட்சிக் கவிஞரின் - ‘குடும்ப விளக்கு' காவியத்தின் 5ஆம் பகுதியான ‘முதியோர் காதல்' பகுதியை எடுத்துக் காட்டினோம்.


‘முதியோர் காதல்' என்ற தலைப்பிலேயேகூட முதியோர்களிடையே காதல் - வயது முதிர்ந்த நிலையில் கூட உண்டு என்பது வெளிப்பாடாகிறது. காரணம் ‘காதல்' என்ற சொற்றொடர் வெறும் உடல் இன்பத்தையே மய்யமாகக் கொண்டது அல்ல. ஏன் ‘காமம்' என்பதற்குக்கூட திருவள்ளுவர் விரிந்த பொருளைத் தந்துள்ளார் என் பதை குறளைப் படிக்கும் பலரும் அறிவார்களே!



‘கல்லாதான் சொல் காமுறுதல்' என்ற குறளில் காமுறுதல் என்பது, ‘விரும்பும் தன்மை', ‘அவாவும் தன்மை' - ‘ஈர்ப்பு' என்பதைத்தானே குறிக்கிறது? அதுபோல ‘முதியோர் காதல்' என்று புரட்சிக் கவிஞர் கொடுத்த தலைப்பு - அன்பு, ஆசை, ஒருவரை ஒருவர் கைம்மாறு கருதாது நேசித்தல், ஒருவர் பற்றிய கவலை - அடிநீரோட்டமாகவே மற்ற இணையருக்கு ஏற்படுவது எல்லாம்தான் அந்த "முதியோர் காதல்" - புரிகிறதா?


முதிய வயதில்கூட ஏற்படும் ‘ஊடல்கள்' ஏராளம் - எப்போதும் உண்டு. அவை வெறுப் பால், உண்மை கோபத்தால் வெளிப்படுபவை அல்ல; மாறாக,  முதிய வயதில் ஒருவரை ஒருவர் அளவற்று நேசிப்பதின் பயனாக முந்துறும் பொறுப்பான வெளிச்சம் தான் அது என்பது மனோதத்துவம் - உளவியல் - புரிந்தவர் அறிவர்!


எனவே ‘முதியோர் காதல்' என்ற மிக அற்புத மான தலைப்பை நாம் சற்று அகலப்படுத்தலாமே!


முதியோர் மேல் இளையோர் ‘காதல்'  என்பது பொறுப்பை உணர்ந்து, நன்றி பாராட்டுதல் என்ற ஆழ்மனதின் அடி நீரோட்ட அலையாகவே கருதவேண்டும். நாம் நமது பெற்றோர்களை, தாத்தா, பாட்டிமார்களைக்கூட ‘காதலிக்க'க் (ஈர்ப்பு டன் அன்பு காட்டக்) கற்றுக் கொள்ள வேண்டும்; இது அவர்களுக்கும் பெரும் நன்மை என்பதோடு, முதியவர்களுக்கும் பெரும் லாபம்! எப்படி எனில், இது இளையர்களது வருங்காலத்திற்கான வைப்பு நிதி (Fixed Deposit).


"வட்டியை" மட்டும் (அவ்வப்போது ஏற்படும் மகிழ்ச்சி) அனுபவிக்க வேண்டும். நாளை நாம் முதியவராகும் நிலையில், இன்று நாம் நமது பெற்றோரிடம் காட்டும் பாசமும், அன்பும், நன்றி யின் வெளிப்பாடான கடமையின் கடப்பாடுதான் என்பதை நம் பிள்ளைகளுக்கு மறைமுகமாக நாம் கற்றுக் கொடுக்கும் பாடம் - இல்லையா?


எனவே, பெற்றோர்களிடம் அன்பு காட்டுதல், பாசம் கொட்டுதல், பண்பாடு குறையாத "மனம், வாக்கு, காய" 'திரிகரணசுத்தியுடன்' நடந்து கொள் ளுவது என்பது நமது வருங்கால வாழ்வுக்கான வைப்பு நிதி மட்டுமல்ல; நம் மனம் சோர்வடை யாமல், சங்கடத்தைச் சந்திக்காமல் இருக்கச் செய்யும் ஒருவகை காப்பீடும் (Insurance) ஆகும்! தந்தை பெரியார் அவர்கள் ஒரு தத்துவ ஞானியாக உயர்ந்து நின்று சொல்லுவார், "சுயநலம் என்பது, உண்மையில் அது பொதுநலம் - பிறர் நலம்; பொதுநலம் என்பது உண்மையில், தன்மை யில் அது சுயநலம் - தனக்கு எல்லையற்ற மகிழ்ச் சியைத் தரத் தானே, ஒருவன் செய்து கொள்ளும் ஒரு ஏற்பாடு" என்ற கருத்தடங்கிய வகையில்!


அதே கோணத்தில், நமது பெற்றோர்களை நாம் நடத்தும் முறைதான், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் நாம் எங்கிருந்தாலும் முறையாக நம்மிடம் நடந்து கொள்ளத்தக்க முன்னோட்டமாக அமையும்.


இன்றைய சமுதாயத்தில் எல்லாமே வேகம்! வேகம்!!  வேகம்!!! அவரவரும் அலுவல் பணி என்று ஓடிக்கொண்டே, ஏன் - ‘கடிகாரம் ஓடு முன்  ஓடிக்கொண்டே' உள்ள நிலையில், (கரோனா - கோவிட்19 காலம் அதற்கு இயற்கை தந்த ஒரு விசித்திர விதிவிலக்கு என்றாலும்கூட, அது தற் காலிகம்தானே!) இளையர்கள் நம்மிடம் நிறைய நேரத்தை செலவழிக்கவில்லையே என்று  முதி யோர் தேவையற்று ஏங்கும் நிலையோ, எப் போதும் நம்மையே விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையோ முதியோ ரும் - எதிர்ப்பார்ப்பதும் நியாயமல்ல, தேவையு மல்ல!


எங்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லையோ அங்கு ஏமாற்றங்கள் அதிகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்பதுதானே உலகியல் உண்மை!


எனவே, இன்றைய வேக உலகத்தில் பிள்ளை களிடம்  முதியோர்கள் அதிக எதிர்பார்ப்பை எதிர்பார்ப்புக் கொள்ள வேண்டாம். காலத்தைக் கனிவுடன் நம்மிடம் அவர்கள் செலவழிப்பார்கள் என்பதை நம்புங்கள். அதிகமான எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்!


ஆனால், பேரப் பிள்ளைகள் அப்படியல்ல. தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும்  உற்ற நண்பர்களைப் போல் பாசப் பொழிவுகளாக இருப்பர் - எங்கும் என்பது பொதுவானது - சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.


(நாளையும் ஆராய்வோம்!)


No comments:

Post a Comment