தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளும் அச்சம் ஊட்டும் வகையில் பெருகி வருகிறது. அதிலும் தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையோ முதலிடத்தில் இருக்கிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு முன்னேறி(?!) இருக்கிறது.
சென்னை. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஆணை வரும் 19 முதல் ஜூன் 30 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிபந்தனைகள், கெடுபிடிகள் அதில் கூறப் பட்டுள்ளன. இதற்கு முன்பும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுதான் தான் உள்ளது. அதனால் ஏற்பட்ட பயன்கள், பலன்கள் என்ன என்ற கேள்விக்குறி மக்களிடையே எழுந்து நிற்கிறது.
மக்கள் நல் வாழ்வுத்துறை அளிக்கும் தகவல்களுக்கும் - சென்னை மாநகராட்சி தரும் புள்ளி விவரங்களுக்கும் இடையிலேயே வேறுபாடுகள் ஏற்படுவது ஏன் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மரணம் பற்றிய உண்மையான புள்ளி விவரங்கள் தரப்படுவதில்லை - மறைக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். 5 வினாக்களையும் முன்வைத்து உள்ளார்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி களை எதிரிக் கட்சிகளாக பார்க்கிறதே தவிர - அவர்கள் சொல்லும் கருத்துகளுக்குச் செவி கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சரியே!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தால் அதற்குச் செவி சாய்ப்பதில்லை.
ஆளும் கட்சிதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை; எதிர்க்கட்சித் தலைவர் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினால் அதற்கும் அனுமதி மறுப்பு என்கிற அளவுக்கு ஆளும் தரப்பு நடந்துகொள்வது உகந்ததல்ல - இதன்மூலம் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதை ஆளும் தரப்பு உணர்ந்ததா என்று தெரியவில்லை.
கோயம்பேடு சந்தையிலிருந்தாவது ஆளும் தரப்பு நல்ல பாடம் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு அடையாளம்தான் டாஸ்மாக் திறப்பாகும்.
திறந்த முதல் நாளே பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. தனி நபர் இடைவெளி பின்பற்றாத நிலையில், கரோனா தொற்றுக்கு வழி வகுத்த நிலைதானே!
டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் அறவழி முழக்கத்தை நடத்திக் காட்டியதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை; மீண்டும் உயர்நீதிமன்றம் தடை; மறுபடியும் அரசு தரப்பில் நீதிமன்றம் படையெடுப்பு - இவை எல்லாம் ஆளும் கட்சியின் நிர்வாகப் போக்கில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தைத்தான் காட்டுகின்றன; அதிகாரி கள் மாற்றம் தீர்வாகாது. தொப்பியை மாற்றினால் தலை வலியும் தீராது. இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது நான்கு மாவட்டங்களிலும் டாஸ்மாக் குக்குத் தடை விதிப்பு.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடுதான் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வரு கிறது. கேரளா, கருநாடகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே. தமிழ்நாட்டில் ஏன் முடியவில்லை என்ற கேள்வி எழுவது இயல்புதானே!
கேட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சூழல், ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று ஆளும் கட்சி செய்தித் தொடர்பாளர்கள் சாமர்த்தியமாகக் கூறுவதாக நினைத்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் நோயை எப்படி கட்டுப்படுத்து கிறார்கள் - அவர்கள் கையாளும் அணுகுமுறைகள் என்ன என்பதைக்கூடவா கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது?
சென்னையில் கண்ணகி நகரில் பாராட்டத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால், அதற்கான காரணத்தை அறிந்து அந்த நிலையை மற்ற பகுதிகளிலும் பின்பற்ற வேண்டாமா?
தலைநகர மக்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு வெளிறிப் போயி ருக்கிறார்கள் என்பதை மட்டும் தமிழ்நாடு அரசு அவசியம் உணர வேண்டும்.
இது மக்களின் மன நிலை. மேலும் மேலும் ஊரடங்கைத் தொடர்வதுதான் தீர்வு என்பதும் சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் ஒரு முடிவு எட்டப்படும் அளவுக்குத் திட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment