குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியவர் குஜராத் காவல்துறை அதிகாரி யான சஞ்சீவ் பட் அய்.பி.எஸ். அவரைப் பழிவாங்கும் நோக்கில் அவர்மீது வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது மோடியின் மாநில அரசு.
சர்வதேச தந்தையர் தினத்தன்று அவரது குழந்தைகள் ஆகாஷ் மற்றும் சாந்தனு ஆகியோர் எழுதிய கடிதம் இது. வெறும் கடிதம் அல்ல; வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் ஊக்கமும், தன்னம் பிக்கையும் ஊட்டிய ஒரு தந்தைக்கு, பிள்ளைகள் எழுதிய நன்றிக் கடிதம். அதே நேரத்தில் மோடியின் தலைமையில் அமைந்த குஜராத் அரசு மனித உரிமை குரல்களை எப்படியெல்லாம் நசுக்கியது என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ அந்தக் கடிதம்
அன்புள்ள அப்பாவுக்கு,
தந்தையர் தினத்தைக் கொண்டாட உலகம் முழுவதும் ஒன்றுகூடி இருக்கும் இந்த நாளில், உங்களுக்கு நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம். எங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இந்த உலகிற்குச் சொல்லவும், உங்களைக் கொண்டாடவும், உங்கள் பெருமைகளைப் பேசவும் வருடத்தில் இந்த ஒருநாள் எங்களுக்குப் போதாது. தந்தையர் தினமான இன்று, நாங்கள் உங்கள் பிள்ளைகளாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவதற்கும், அதற்காக நன்றி தெரிவிப்பதற்கும் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
இந்த உலகில் நாங்கள் பெற்ற அனைத்து நற்பேறுகளுக்காகவும், உங்களுக்கும், அம்மாவுக்கும் இந்த நாளில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். இந்த உலகிற்கு நீங்கள் ஒரு ஹீரோவாக இருக்கலாம்; ஆனால், எங்களுடைய மொத்த உலகமும் நீங்கள்தான். சுதந்திர மனிதர்களாக எங்களை வளர்த்ததற்காக உங்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. துணிந்து கேள்வி கேட்க நீங்கள்தான் கற்றுத் தந்தீர்கள்! யாரிடமிருந்தும் எதையும் இலவசமாக பெறக்கூடாது என்று சொல்லித் தந்ததும் நீங்கள்தான்! பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், சத்தியத்திற்காக மனசாட்சியின் பக்கம் நிற்க வேண்டும் என்று போதித்ததும் அதற்காக எங்களைப் பயிற்றுவித்ததும் நீங்கள்தான்.
எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டபோதும், அமைதியைக் கைவிடாமல் - எதிர்த்து நின்று போராட கற்றுத் தந்தமைக்கு நன்றி அப்பா!
அப்பா இல்லாத இந்த துயரம்மிகுந்த நாட்களை எப்படி தாக்குப்பிடிக்கிறீர்கள் என்று எங்களைச் சந்திக்கும் பலரும் அடிக்கடி கேட்பது உண்டு.
வாழ்வில் எவ்வளவு பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தாலும் அதை நேருக்குநேர் எதிர்கொள்ளும் துணிவுடன் எங்களைச் செதுக்கிய - நண்பரும், வழிகாட்டியுமான ஒரு அப்பா - எங்களுக்குப் பின்னால் இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மன உறுதியும், தைரியமும், போராட்ட குணமும் மிக்க சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் நாங்கள் என்று அவர்களுக்கு தெரியாது.
அப்பா! நீங்கள் ஒரு மகத்தான போராளி.
மீண்டும் சொல்கிறோம். உங்களை அப்பாவாக அடைந்ததை நினைத்து நாங்கள் எவ்வளவு பெருமைகொள்கிறோம்; அதற்காக என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் வர்ணிக்க எங்களிடம் வார்த்தைகள் இல்லை.
அப்பா! நீங்கள் இல்லாத இந்த இரண்டு வருடங்கள் பெரும் துயரம் மிகுந்தவை. ஆனால், கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்கும் போதெல்லாம் உங்கள் முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருக்கும். வாழ்வின் எத்தகைய நெருக்கடிகளையும் எளிதில் வெல்ல முடியும் என்பதையும், எல்லா காரியங்களின் இறுதி முடிவும் நன்றாக அமையும் என்றும். அந்த புன்னகை எங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
அன்புள்ள அப்பா!
அமைதியும் கம்பீரமும் நிறைந்த மனிதராக நீங்கள் இருப்பதற்கும், இந்த பூமியின் குழந்தைகளாக எங்களைப் பெற்றெடுத்ததற்கும் எங்கள் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
உங்கள் துணிச்சலும், மனவலிமையும் எங்களுக்கும் உலகெங்கிலு முள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் தொடர்ந்து உந்துசக்தியாக இருந்து வருகிறது.
உறுதி குலையாத நெஞ்சுரத்தோடும், அசைக்க முடியாத தன்னம் பிக்கையோடும் நாங்கள் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்போம்!
இந்தப் பாசிச அரசின் விலங்குகளை உடைத்தெறிந்து, நீங்கள் விடுதலையாகி எங்களுடனும், அம்மாவுடனும் இணையும்வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்! இது சத்தியம்.
எங்கள் இதயங்களை அன்பாலும், உங்களைப் பற்றிய பெருமை யாலும் நிரப்பியுள்ளீர்கள். அதற்காக, என்றேனும் ஒருநாள் உங்களுக்கு கைமாறு செய்ய வேண்டும் என நாங்களும் காத்திருக்கிறோம்.
நீங்கள் ஒரு சிறந்த அப்பாவாக இருப்பதற்கு மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்!
என்றென்றும்
தங்களன்புப் பிள்ளைகள்,
ஆகாஷ் மற்றும் சாந்தனு!
இந்த தி(சி)றந்த மடலைப் படிக்கும் இதயம் உள்ள எவருக்கும் நெஞ்சிலிருந்து இரத்த ஊற்றுதான் பெருக்கெடுக்கும். ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்த இவர் செய்த குற்றமென்ன?
2002 குஜராத் இனப்படுகொலை தொடர்பாக முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ்பட் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், 27.2.2002 அன்று முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சர் இல்லத்தில் வைத்து நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் தான் பங்கேற்றதாகவும், 'இந்துக்கள்' தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அப்போது முதல் அமைச்சர் மோடி தெரிவித்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது மனுவில் சஞ்சீவ்பட் குறிப்பிட்டு இருந்தார்.
முதல் அமைச்சருக்கு எதிராக அவர் ஆதாரங்களை வெளியிடத் தொடங்கிய நிலையில் அவர்மீது பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்டன. (கஸ்டடியில் மரணம் உட்பட) ஒரு கான்ஸ்டபிள் கொடுத்த புகார் என்று கூறி அய்.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் எப்படிப்பட்டது?
ஒரு போலீஸ் அதிகாரியின் பிள்ளைகளின் கபடமற்ற கடிதம் நம் நாட்டு அரசியல் போக்கின் அடிநாதம் எத்தகையது என்பதற்கான ஆதாரமே!
No comments:
Post a Comment