நாஸ்திகர்கள் ஆகாமல் ஜாதியை ஒழிக்க முடியாது!
ஒன்றுக்கொன்று சம்பந்தம்
மனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வரு கிறது. ஜாதியோ மதத்தினால்தானே உண்டாகி வருகின் றது. மதமோ கடவுளால் தானே உண்டாகி வருகின்றது. இவற்றுள் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.
ஜாதியை அழித்துவிட்டால் இந்துமதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?
ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?
நான்கு ஜாதியை இந்து மத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளு கின்றன. நான்கு ஜாதிமுறைகளை கீதை முதலிய கடவுள் வாக்குகள் ஒப்புக்கொள்கின்றன.
“நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்தந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில் களை)யும் நானே சிருஷ்டி செய்தேன், அத்தருமங்கள் தவறி எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்” என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார்.
இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதி பேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்க ளையும் கடவுள்களையும் சாஸ்திரங்களையும் ஒழிக்கா மல் முடியுமா? அல்லது இவைகளுக்கு பதில் ஏற்படுத்தா மலாவது முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை மதத்தை கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார் கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக் கிறதா என்று பாருங்கள்.
நாம் மாத்திரமா எதிர்க்கிறோம்?
கடவுளை, மதத்தை, சாஸ்திரங்களை நாங்கள் தானா எதிர்க்கிறோம். மற்றவர்கள் வாழ்த்துகிறார்களா? என்று பாருங்கள். எந்த இந்து ஒருவன் ஜாதிபேதமும், ஜாதிப் பிரிவும், ஜாதி தர்மமும் ஒழிய வேண்டும் என்று சொல்லு கிறானோ, யார் யார் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூட சொல்லுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் மதத்தையும், கடவுளையும் ஒழித்தவர்கள் அல்லவா? அல்லது மதத்தையும் கடவுளையும் எதிர்த்தவர்கள் அல்லவா? மீறினவர்கள் அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள்.
கிருஷ்ணன் கடவுளென்றும், அவதாரம் என்றும் ஒப்புக் கொண்டால், கீதை அவன் உபதேசமென்றும் கருதுபவர்கள் ஜாதியையும் ஜாதி தர்மத்தை (தொழிலை யும்) ஒழிக்க முடியுமா ஒழிய வேண்டுமென்று சொல்ல வாவது முடியுமா? என்று கேட்கின்றேன். இந்த காரணத் தால் தானே காந்தியார் வெகு ஜாக்கிரதையாக நான்கு ஜாதிகளையும் அவைகளினது தர்மங்களையும் (வர்ணா சிரம தர்மத்தை) காக்கவே நான் உயிர் வைத்திருக்கிறேன். அதற்காகவே சுயராஜ்யம் கேட்கிறேன். அதற்காகவே தீண்டாதவர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் செத்தாலும் கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறேன் என்கிறார்.
காந்தி அவதார புருஷரானதேன்
அதனால் தானே அவர் பழைய தர்மங்களைக் கெடாமல் காப்பாற்ற அவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும், மகாத்மா என்றும் பார்ப்பனர்கள் கொண்டாடு கிறார்கள். ஆகவே அவர் ஒழிந்த மற்றவர்கள் அதாவது ஜாதி வித்தியாசமும், ஜாதி தர்மமும் ஒழிக்க வேண்டு மென்கின்றவர்கள் எல்லோரும் ஒரு அளவுக்காவது சுயமரியாதைக்காரர் அல்லவா என்று பாருங்கள். கராச்சி தீர்மானத்தின் முக்கிய தத்துவமே பழைய சாஸ்திரங்கள் பழக்க வழக்கங்கள் தொழில் முறை முதலியவைகள் கூட காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதும், அந்தப்படி தீர்மானங்கள் இன்றும் வைத்துக் கொண்டி ருப்பதும், ஆஸ்திகத்தைக் காப்பாற்றவும் கிருஷ்ணனை யும் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் வருணா சிரம தர்மத்தையும் காப்பாற்றவுமே ஒழிய வேறு என்ன?
நாஸ்திகர்களாகாமல் முடியாது
ஆகவே நாம் உண்மையில் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும் வருணாச்சிரம தர்மத்தையும் சூத்திரத் தன்மையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாஸ்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாப கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் மாத்திரமல்லாமல் மற்றபடி வேறு யார் ஜாதியை ஒழிப்பதானாலும் நாஸ்தி கர்களாகித்தான் தீரவேண்டும்.
நாம் மாத்திரம் துணிவுடன் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் இந்த விஷயங்களில் உறுதியாய் இருப் போமானால் ஜாதி பேதத்தால் ஜாதிக் கிரமத்தால் கஷ்டப் படும் மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்ந்துதான் தீருவார்கள்.
பார்ப்பனர்கள் மாத்திரம் எந்தக்காலத்திலும் நம் முடன் சேரமாட்டார்கள். ஏனெனில் இந்த நமது இந்து மதமும், சாஸ்திரமும், கடவுள்களும் அவர்களுக்காக பயன்படும்படியான முறையிலேயே கற்பிக்கப்பட்டு அவர்களே அவற்றால் பயனடைந்து உலகில் உள்ள மனித சமூகத்திலேயே உயர்நிலையை அடைந்து வாழ்ந்து வருவதால் இன்று பார்ப்பனர் ஒழிவதா ஜாதி ஒழிவதா என்கின்ற நிலையில் நம்முயற்சி இருந்து வருகிறது.
பார்ப்பனர் ஒழிந்தால் ஜாதியும் மதமும் கடவுளும் ஒழிந்ததென்றே சொல்லலாம்; ஜாதியும் மதமும் கடவுளும் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்தார்கள் என்றே சொல்லலாம்; இவ்வளவு ஏன்? ஜாதி ஒழிந்தாலே பார்ப்பனர்கள் ஒழிந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங் கள். அதனால் தான் சு.ம. இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனர்களுக்கே இவ்வளவு பயங்கரமான எதிரி களாய் காணப்படுகின்றன.
- சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. பேச்சு, “குடிஅரசு”, 19.1.1936.
(தொடரும்)
No comments:
Post a Comment